[X] Close >

”சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளன” - ரெய்டு குறித்து வருமான வரித்துறை விளக்கம்

Income-Tax-Department-Mega-Raid-in-DMK-Party-person-place-TN-Legislative-Assembly-Election-2021

“சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளன” என்று தமிழகத்தில் நடைபெற்ற ரெய்டு குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.


Advertisement

சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரையின் வீட்டில் வருமான வரித்துறையினர் 12 மணி நேர சோதனை நடத்தினர். இதையறிந்த திமுக தொண்டர்கள் நீலாங்கரை வீட்டின் முன் குவிந்தனர். இதனிடையே திமுக மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சன், என்.ஆர்.இளங்கோ, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் செந்தாமரையின் வீட்டின் அருகே ஆலோசனையில் ஈடுபட்டனர்.


Advertisement

அதேசமயத்தில் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக், கார்த்திக் நண்பர் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையறிந்த திமுக தொண்டர்கள் அண்ணா நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக், ராயனூரில் உள்ள திமுக நகரச் செயலாளர் தாரணி சரவணன் ஆகியோரின் வீடுகளிலும், திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையின் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

திருவையாறு தொகுதி வேட்பாளர் துரை சந்திரசேகரனின் ஆதரவாளரும் தஞ்சை திமுக வடக்கு ஒன்றியச் செயலாளருமான முரசொலி என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. பிரபல தனியார் மதுபான ஆலை உரிமையாளர் ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கதை வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்தவர் ஜெயமுருகன். அவரது அலுவலகத்தில் 2019ஆம் ஆண்டிலேயே ரெய்டு நடத்தப்பட்டத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசனின் வீட்டிலும் ஒரு மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


Advertisement

தமிழகத்தில் ரெய்டு - வருமான வரித்துறை விளக்கம்

3 குழுமங்கள், தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், சில குழுமங்கள், தனிநபர்கள் அரசியலில் பண விநியோகத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close