அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரின் வாகனங்களிலிருந்து வாக்குப்பதிவு பெட்டிகளை பொதுமக்கள் மீட்ட விவகாரம், அம்மாநில மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. என்னதான் நடந்தது? - முழு விவரம் இதோ...
மூன்று கட்டங்களாக நடைபெறும் அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது.
எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாததால் நிம்மதிப் பெருமூச்சில் இருந்தனர், பொதுமக்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும். ஆனால், அந்த நிம்மதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
அசாம் மாநிலம் கரிம்கஞ் என்ற பகுதியில் இரவு 10.30 மணி அளவில் வெள்ளை நிற வாகனத்தை உள்ளூர் மக்கள் சிலர் சிறைபிடித்து பிரச்னையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட, பொதுமக்கள் வாகனத்தை தாக்கியுள்ளனர்.
பதர்கண்டி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் கிருஷ்னேண்டு பால் என்பவருடைய AS 10B 0022 என்ற எண் கொண்டது அந்த வாகனம் என்பதும், வாகனத்திற்குள் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தற்போது அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த நிலையில், பாதுகாப்பு படை வீரர்களும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் உடன் இல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும், சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் காவல் துறையினர், அந்த வாகனத்தையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மீட்டுள்ளனர்.
ஆனால், அதற்குள் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Breaking : Situation tense after EVMs found in Patharkandi BJP candidate Krishnendu Paul’s car. pic.twitter.com/qeo7G434Eb
— atanu bhuyan (@atanubhuyan) April 1, 2021
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், 'வாக்குப்பதிவு பெட்டிகளை எடுத்துச் சென்ற வாகனம் திடீரென பழுதடைந்துவிட்டது. இதனால் சாலையில் வந்த வாகனத்தில் லிஃப்ட் கேட்டு, அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றனர். ஆனால், பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்ததற்கு பிறகே அது பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருடைய வாகனம் என தெரிய வந்தது' என்று விளக்கம் அளித்துள்ளது.
அதேநேரத்தில், கவனக் குறைவுடன் செயல்பட்ட 4 தேர்தல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வதாகவும், சம்பந்தப்பட்ட வாக்குப்பெட்டியின் வாக்குச்சாவடி மையத்தில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற வாகனத்தை தாக்கிய உள்ளூர் மக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
பொதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களை போலீஸ் அல்லது துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். அப்படி இருக்க, பாதுகாப்பு வீரர்கள் வந்த வாகனத்தில் எடுத்துச் செல்வதை விட்டுவிட்டு, எதற்காக பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரின் வாகனத்தில் மின்னனு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்பட்ட வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தபோது, அங்கு ஏன் ஒரு தேர்தல் ஆணைய அதிகாரி கூட இல்லாமல் இருந்தார்?
வாகனம் பழுதடைந்தால் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகனத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பது மிக அடிப்படையான விதி. அதை மீறி வேறு ஒரு வாகனத்தில், அதுவும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரின் வாகனத்திலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்டது எப்படி?
முறைகேட்டை தடுக்க முற்பட்ட உள்ளூர் பொதுமக்கள் மீது எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது?
இந்த சம்பவத்தில் 4 அதிகாரிகளை மட்டும் பணியிடை நீக்கம் செய்து உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை?
- இப்படி பல வினாக்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அலட்சியத்தால், தற்பொழுது தேர்தல் நேர்மையாக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து தனது கண்டனங்களை பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, 'வாகனம் மோசமானதாக உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் எண்ணங்கள் மோசமானதாக உள்ளது. ஜனநாயகத்தின் நிலைமையும் மோசமாக உள்ளது' என விமர்சித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக உள்ள சுஷ்மிதா தேவ், 'இது ஒரு குற்றச் சம்பவம். பாரதிய ஜனதா கட்சி தோல்வியில் இருப்பதால், எதைச் செய்தாவது வெற்றி அடைய வேண்டுமென முயற்சி செய்து வருகிறது' என்று விமர்சித்துள்ளார்.
இதேபோல பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் விளக்கமும் திருப்திகரமாக இல்லாத நிலையில், இது தொடர் பிரச்னையாக மாறி வருகிறது.
இந்தப் பின்னணியில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதும் கவனத்துக்குரியது.
- நிரஞ்சன் குமார்
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி