தேர்தல் காலத்தில் தெறிக்கவிடும் படைப்பாக வந்திருக்கிறது, யோகி பாபு நடித்துள்ள 'மண்டேலா'. சாதி - அரசியல் - தேர்தல் களத்தை பகடி செய்து பந்தாடும் இந்த சினிமா எப்படி இருக்கிறது? - இதோ ஒரு விரைவு விமர்சனம்...
ஒரு கிராமம்... அதில் வடக்கூர், தெற்கூர் என்ற இரண்டு பகுதிப் பிரிவுகள் (இரு சாதிகள்). ஒரு தலைவர். அவருக்கு இரண்டு பகுதியிலும் இரண்டு மனைவிகள். அவர்களுக்கு தலா ஒவ்வொரு மகன். அந்தத் தலைவருக்கு பின் பணத்திற்காக ஆசைப்பட்டு பதவிக்கு வர நினைக்கிறார்கள் மகன்கள்.
சாதிப் பிரச்னை வரும் என்பதால் சாலை, பள்ளி, குடிநீர், கழிப்பறை என எந்த அடிப்படை வசதியும் செய்யாமல் இருக்கும் அந்த ஊரில் தேர்தல் வருகிறது. இரு சாதி பிரிவிலும் போட்டியிடும் மகன்களுக்கு அவர்களின் அம்மாக்களுக்கு சாதி ஓட்டு சரிசமமாக இருக்கிறது.
அந்த நிலையில், பெயரே தெரியாத நிலையில் வீடு வாசலற்று மரத்தடியில் சிகை அலங்காரம் செய்து கொண்டு, அங்கேயே உறங்கும் யோகி பாபுவிற்கு வாக்காளர் அடையாள அட்டை வருகிறது. அவரின் ஓட்டை பெறுவதற்காக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல சலுகைகளை வழங்குகின்றனர். இது தன்னுடைய ஓட்டுக்கு கிடைக்கும் பணம் மற்றும் சலுகை என்பதால் 'வரும் வரை பெறலாம்' என்று நினைக்கிறார். ஆனால், அதுவே அவருக்கு ஆபத்தாக முடிகிறது. அதிலிருந்து அவர் தப்பிக்கிறாரா? அந்தக் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கிடைக்கின்றனவா? மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலா போல இந்த மண்டேலாவும் எதாவது செய்தாரா? - இப்படி பல கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடை சொல்கிறது 'மண்டேலா'.
படத்தின் முதல் காட்சியில், புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பறையை இரண்டு பிரிவினரும் போட்டி போட்டுக்கொண்டு உடைத்தெறியும்போது, தூரத்தில் இருந்து அதைப் பார்க்கும் மூன்று இளம் பெண்களின் வலியை ஒரே ஷாட்டில் கச்சிதமாக கடத்திருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். அந்த இடத்திலேயே படத்தின் க்ளைமாக்ஸ் 'இதுதான்' என்று யூகிக்க முடிந்தாலும், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சுவாரசியமாக நகர்கிறது. அதிலும் வசனங்கள் மிக நேர்த்தியாக அமைந்துள்ளன.
ஒவவொரு குடிமகனின் வாக்கு என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது, அதன்மூலம் என்னவெல்லாம் செய்யலாம், அதை மக்கள் எப்படி பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை அசத்தலான திரைக்கதை மூலம் யோசிக்க வைத்திருக்கின்றனர். இயக்குநர் சொல்ல நினைத்ததை மிக கச்சிதமாக சொல்லியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த திரைத் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள், ஊர்மக்கள், மண்டேலா... இவர்களின் யாருக்குதான் உண்மையான வெற்றி கிடைத்தது என்பதை நோக்கி சுவாரஸ்யமாக நகர்கிறது திரைக்கதை..
யோகிபாபுவின் திரையுலக வாழ்க்கையில் 'மண்டேலா' ஒரு மைல்கல். மக்களை நிறைவாக மகிழ்வூட்டியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான நடிகர்களின் தெரிவு மட்டுமின்றி, அவர்களின் நடிப்பும் மிகச் சிறப்பு. பலர் புதுமுகம் என்றாலும் நடிப்பில் முத்திரைப் பதிக்கின்றனர். குறிப்பாக யோகி பாபு உடன் வரும் சிறுவன், இரண்டு வேட்பாளர்கள் உடன் இருப்பவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து, அச்சு அசலாக நடித்துள்ளனர். அதேபோல் தபால்கார பெண்மணி ஷீலா ராஜ்குமாரும் கவனம் பெறுகிறார்.
ஃபர்ஸ்ட் லுக் வெளியான அன்றே 'மண்டேலா' படம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அது தந்த எதிர்பார்ப்பை கொஞ்சமும் குறைக்காமல், தான் சொல்ல வந்ததை ஜனரஞ்சகமான விஷயங்களுடன் சேர்த்துக் கொடுத்து வெற்றி அடைந்துள்ளார் இயக்குநர்.
படம் பேசும் பொருளும், படத்தின் தன்மையும் சிறு சிறு குறைகளைக் கூட நம் கண்களிலிருந்து மறைத்துவிட்டு, மிக முக்கியமான படமாக நம் கண்முன் விரிகிறது 'மண்டேலா'.
இந்தப் படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் உருவாக்கிய டிஜிட்டல் ஆர்ட் சிவாகுமார், ஒளிப்பதிவாளர் வித் அய்யண்ணா, இசையமைப்பாளர் பரத் சங்கர், எடிட்டர் ஃபிலோமின் ராஜ் அனைவரும் முக்கிய பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் மிகச் சரியாக இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். ஸ்டார் விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) நேரடியாக வெளியாகிறது. அதே நாள் இரவு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது 'மண்டேலா'.
தேர்தலுக்கு முன்பு இந்த இரண்டு தளங்களிலும் ஏராளமான மக்கள் படத்தை காணமுடியும். அதன்மூலம் தேர்தலையொட்டிய விழிப்புணர்வூட்ட முடியும் என்று மண்டேலா படக்குழு நம்பலாம். அந்த நம்பிக்கை வீண்போக வாய்ப்பில்லை, ஏனெனில், படம் தரக்கூடிய தாக்கம் அத்தகையது!
- செந்தில்ராஜா.இரா
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி