[X] Close >

டஃப் கொடுக்கும் 31 வயது இளைஞர்.. 12வது முறையாக உம்மன் சாண்டிக்கு கைகொடுக்குமா புதுப்பள்ளி?

Jaick-Vs-Oommen-Chandy-in-Puthuppally--Kerela-elections

கேரள உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பின் மீண்டும் உம்மன் சாண்டியை 'ஆக்டிவ்' அரசியலில் களமிறக்கி உள்ளது காங்கிரஸ் தலைமை. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவரை, தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு காங்கிரஸ் மீண்டும் அழைத்து வந்துள்ளது. நடக்கவுள்ள தேர்தலில் தனது ஆஸ்தான தொகுதியும், 11 முறை வென்ற தொகுதியுமான புதுப்பள்ளியில் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் உம்மன் சாண்டி. அவருக்கு எதிராக கடும் சவாலாக வலம் வருகிறார் 31 வயது இளைஞர் ஜெய்க் சி தாமஸ்.


Advertisement

இந்தத் தொகுதியில் உம்மன் சாண்டியை எல்.டி.எஃப் கூட்டணி களமிறக்கியுள்ள ஜெய்க் சி தாமஸ் தான் கடந்த முறையும் அவரை எதிர்த்து எல்.டி.எஃப் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது அவரின் வயது 26 மட்டுமே. சுவாரஸ்யமாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், புதுமுக வேட்பாளராக இருந்தபோதிலும், ஜெய்க் 44,505 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குப் பங்கில் 33.2% ஆகும். அந்த ஆண்டு புதுப்பள்ளியில் இருந்து 11-வது முறையாக போட்டியிட்ட உம்மன் சாண்டி 71,597 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குப் பங்கில் 53.42% ஆகும்.

இதற்கிடையே, இந்த முறை பாஜகவின் ஒற்றைத் தொகுதியான நேமம் தொகுதியில் இருந்து உம்மன் சாண்டி போட்டியிடுவார் என்று முதலில் தகவல்கள் கிளம்பின. ஆனால், புதுப்பள்ளியில் மீண்டும் போட்டி என்பதன் மூலம் அந்த தகவல் பொய் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பள்ளி மக்கள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக உம்மன் சாண்டிக்கு வாக்களித்து வருகின்றர். தொடர்ந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று புதுப்பள்ளியின் அசைக்க முடியாத தனிப்பெரும் தலைவராக இருந்து வருகிறார் உம்மன் சாண்டி.


Advertisement

image

புதுப்பள்ளி தொகுதியின் செல்வாக்குமிக்க தலைவர் 77 வயதான உம்மன் சாண்டிதான் என்பது ஒவ்வொரு முறையும் உறுதியாகிறது. கடந்த தேர்தலின்போது சோலார் ஊழல் வழக்கில் உம்மன் சாண்டியின் பெயர் கடுமையாக அடிபட்டபோதிலும், அவர் புதுப்பள்ளியில் இருந்து வென்றார். ஆனால், இந்த நிலைமை அப்படி அல்ல என்கிறது 'தி நியூஸ் மினிட்' நடத்திய கள ஆய்வு. இந்த முறை உம்மன் சாண்டிக்கு ஜெய்க் தாமஸ் கடுமையான டஃப் கொடுப்பார் என்கிறது அந்த ஆய்வு. பதவியில் இல்லாதபோதிலும் ஜெய்க் செய்த நற்பணிகள் அதற்கு ஒரு காரணம்.

புத்துப்பள்ளியில் ஆட்டோ ஓட்டும் சஜி என்பவர், "கொரோனா காலத்தில் அரசாங்கம் மக்களுக்காக செய்ததைத் தவிர, ஜெய்க் தனது சொந்த முயற்சியில், பொருள்களை வாங்கி மக்களுக்கு விநியோகித்தார். மக்களுக்கு உதவியாக இருந்துள்ளார். உம்மன் சாண்டி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். அவர் புதுப்பள்ளி மக்களால் எளிதில் அணுகக்கூடியவர். இருப்பினும், உம்மன் சாண்டியால் தொகுதியில் எந்தவொரு வளர்ச்சியும் இல்லை" என்று கள ஆய்வின்போது புகார் கூறியுள்ளார்.


Advertisement

இதேபோல் பலரின் கருத்தும் இருக்கிறது. கொரோனா, பெருவெள்ளம் என கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்களில் மக்களுடன் மக்களாக நின்று உதவிகளை செய்துள்ளார் ஜெய்க். அரசாங்கத்தின் உதவிகளை தாண்டி தனது சொந்த முயற்சியில் பல விஷயங்களை செய்துள்ளார். இது அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது. அந்தப் பகுதி இளைஞர்கள் மத்தியிலும் ஜெய்க் மீது ஈர்ப்பு உருவாகியுள்ளது. இதனுடன், எல்.டி.எஃப் கொள்கைகள், கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் வாக்குகளாக தனக்கு சாதகமாக மாற்றக்கூடும் என்றும் ஜெய்க் நம்புகிறார். அதற்கேற்ப தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகிறார்.

இதுதொடர்பாக 'தி நியூஸ் மினிட்' செய்தித் தளத்துக்கு பேசிய ஜெய்க், "உம்மன் சாண்டியைப் போன்ற பெரிய தலைவருக்கு எதிராக போட்டியிடுவது குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு தேர்தல் என்பது மக்களுக்கு இடையிலான சண்டை அல்ல. இது கொள்கைகளுக்கு இடையிலான சண்டை. எல்.டி.எஃப் அரசாங்கத்தில் கேரள மக்கள் முற்றிலும் திருப்தி அடைந்துள்ளனர். எல்.டி.எஃப் அரசாங்கத்தின் வெற்றியை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன" என்றார்.

இதற்கிடையே, புத்துப்பள்ளியை உள்ளடக்கிய பகுதியில் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிற்கும், யாக்கோபைட் சர்ச்சிற்கும் இடையே நடந்து வரும் பகை, உம்மன் சாண்டிக்கு பாதகமாக முடியும் என்கிறது ஒரு தரவு. உம்மன் சாண்டி ஆர்த்தடாக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர், ஜெய்க் சி தாமஸ் யாக்கோபிய மதத்தைச் சேர்ந்தவர்.

புத்துப்பள்ளி தொகுதியின் கீழ் வரும் மனர்காட் மற்றும் அகலகுண்ணம் போன்ற பஞ்சாயத்துகள், யாக்கோபிய மதத்தைச் சேர்ந்த உறுப்பினர்களில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ளன. இது கவலைகள் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும், புத்துப்பள்ளி, மீனாதம், பம்படி போன்ற பிற பஞ்சாயத்துகள் உள்ளன. அவை உம்மன் சாண்டிக்கு கைகொடுக்கும். உம்மன் சாண்டி இரு சமூகத்தினரையும் சென்றடையக்கூடியவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

image

சில கள நிலவரங்கள் குறித்து தொகுதியில் ஜெய்க் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதேவேளையில், உம்மன் சாண்டி இருக்கும் செல்வாக்கு குறித்தும் இங்கு பேசப்பட வேண்டும். புத்துப்பள்ளியைப் பூர்விகமாகக் கொண்ட தாமஸ் ஜிகி என்பவர் பல தசாப்தங்களாக உம்மன் சாண்டியின் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார். உம்மன் சாண்டியின் அணுகுமுறையால் ஈர்க்கப்பட்ட அவர், ``யார் வேண்டுமானாலும் உம்மன் சாண்டியைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை அவரிடம் சொல்ல முடியும். அதற்கான தீர்வைக் காண அவர் உண்மையான முயற்சிகளை மேற்கொள்வார்.

அவர் கடின உழைப்பாளி. உறுதியான தலைவர். அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 11 மணிக்குப் வரை மக்களாக உழைக்கக் கூடியவர்" என்ற ஜிகி, கடந்த ஐந்து தசாப்தங்களில் புதுப்பள்ளியின் வளர்ச்சி குறித்தும், உம்மன் சாண்டி தனது தொகுதிக்கு இன்னும் அதிகமாகச் செய்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு, ``அவர் தனது தொகுதிக்கு வளங்களையும் நிதிகளையும் கொண்டு வருவதாகக் கூறி பிரசாரம் செய்ய ஒரு பிராந்திய கட்சியின் தலைவர் அல்ல. அவர் ஓர் உண்மையான தலைவரைப் போலவே நடந்து கொள்கிறார், மேலும் அவரது தொகுதிக்கு தேவையற்ற நன்மைகளைத் தர விரும்பவில்லை, அதற்காக நாங்கள் அவரை மதிக்கிறோம்" என்கிறார்.

கள நிலவரங்கள், கருத்து கணிப்புகள் ஒருபுறம் இருக்க, அதைப்பற்றி கவலை கொள்ளாமல் 77 வயதிலும் தொகுதியில் சுறுசுறுப்பாக பிரசாரத்தை நடத்தி வருகிறார் உம்மன் சாண்டி. எல்.டி.எஃப் கொள்கைகள் இந்த நேரத்தில் வாக்குகளை தனக்கு சாதகமாக மாற்றக்கூடும் என்று ஜெய்க் நம்புகிற வேளையில், கோட்டயம் மாவட்டத்தில் புத்துப்பள்ளி தொகுதியில் மக்கள் மத்தியில் உம்மன் சாண்டியின் புகழ் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் கருத்து கணிப்புகள் குறித்த கேள்விக்கு, ``நான் புதுப்பள்ளி மற்றும் அதன் மக்களுடன் மிகவும் இணைந்திருக்கிறேன். மக்களும் அதே உணர்வை மறுபரிசீலனை செய்வார்கள்" என்று உறுதியுடன் கூறுகிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம், மக்கள் என்ன தீர்மானிக்கிறார்கள் என்பதை!

- உறுதுணை செய்திக் கட்டுரை: The News Minute

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close