[X] Close >

"எங்களை 18-ம் நூற்றாண்டு பழங்குடிகளாக பார்க்காதீர்கள்!"- குமரி மலைவாழ் மக்களின் குமுறல்கள்

Issues-of-the-tribal-people-in-hills-of-the-Western-Ghats-of-Kanyakumari-district

"எங்களையும் மனிதர்களாக மதித்து, அரசின் நலத் திட்டங்களையும், குடிநீர், சாலை, வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் முறையாக பெற்று கொடுத்தால். எங்கள் வாழ்க்கை நிலையும் மாறும்" என வேதனையுடன் கூறுகின்றனர், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கடையல் பகுதி மலைவாழ் மக்கள்.


Advertisement

தமிழகத்தில் அதிக வனப்பகுதிகளை கொண்ட மாவட்டமாக உள்ளது கன்னியாகுமரி. மாவட்ட பரப்பளவில் 36 சதவீதம் காடுகள்தான். குமரி மேற்கு தொடர்ச்சி மலையில் 48 கிராமங்கள் அமைந்துள்ளன. அதன்படி, விளவங்கோடு தொகுதி கடையல் பேரூராட்சியில் 1200 குடும்பங்கள். பத்மனாபபுரம் தொகுதியில் பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் பொன்மனை பேரூராட்சியில் 1200 குடும்பங்கள், நாகர்கோவில் தொகுதி தோவாளை தாலுகாவில் 300 குடும்பங்கள், மலை கிராமங்களில் வசிக்கின்றனர்.

இந்த 2,700 காணி பழங்குடி குடும்பங்களில் 8,000-க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இதுவரை நடந்துள்ள தேர்தல்கள், அதில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் இந்த மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, பாதுகாப்பான வீடு, பழங்குடியினருக்கான வேலை வாய்ப்பு இவற்றை நிறைவேற்றவில்லை என்கின்றனர்.


Advertisement

image

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி கடையல் பேரூராட்சியில் உள்ள செருயிடத்துகாணி மலை கிராமத்தில் 'புதிய தலைமுறை' சார்பாக கள ஆய்வு செய்து தகவல் சேகரித்தோம். ரப்பர் மர காடுகளுக்குள் கிராமம் ஒளிந்து கிடந்தது. ஆங்காங்கே ஆஸ்பெட்டாஸ் சீட் வீடுகள், அடுக்களைக்கு என தனி அறை இல்லை, வாசல் ஒர பலா மரங்களுக்கு இடையே சிறிய நீர் இறை கிணறு, மழை நீர் சேமிப்பு தொட்டி போல அனைவரது வீட்டிலும் இருக்கின்றன. இந்த கிணறுகள்தான் வீட்டின் குடிநீர் ஆதாரம். ஏற்ற இறக்கமான சாலைகள், வளர்ந்திருக்கும் மரங்களின் முழு அளவை காண்பிக்கிறது. சுற்றிலும் உள்ள ரப்பர் காடுகளில் பெண்களுக்கு கூலி வேலை இருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு உள்ளூரில் வேலை குறைவு என்பதால், அருகில் உள்ள கேரள மாநிலத்திற்கு கூலி வேலைக்கு செல்கிறார்கள்.

இந்தக் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. வனத்துறையே ஏற்பாடு செய்த குடிநீர் தொட்டியில் எப்போதவது தண்ணீர் ஏற்றிவிட்டு செல்கின்றனர். அதில் குறைவான தண்ணீரே குடிப்பதற்கு கிடைப்பதால் மற்ற வீட்டின் கிணறுகளில் கிடைக்கும் நீரையே குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.

image


Advertisement

வீட்டில் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால்கூட அவசர சேவைக்கு மருத்துவமனை செல்வதற்கு சாலைகள் சரியாக இல்லை. அதேநேரத்தில் போக்குவரத்திற்கான வாகன வசதிகளும் இல்லை என்கின்றனர். வீட்டைச் சுற்றிலும் காட்டுப் பன்றிகள் போன்ற வன விலங்குகளின் தொல்லை அதிகளவில் இருக்கிறது என்கின்றனர்.

"நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே பேருந்து இயக்கப்படுவதால் அதை நம்பியே மற்ற தேவைகளுக்கு நாங்கள் சென்றுவர வேண்டி உள்ளது. கூடுதலாக பேருந்து சேவைகள் இயக்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கையையும் அம்மக்கள் முன்வைத்தனர்.

image

மேலும், மலை கிராமங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்த அளவாவது வருமானம் கிடைக்கும் வகையில் தொடர்ச்சியாக பணிகள் இங்கு கிடைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர் இங்குள்ள பழங்குடியினப் பெண்கள்.

800 வருடங்களுக்கு மேலாக மலை கிராமங்களில் வசிக்கும் இந்தப் பழங்குடி மக்களுக்கு 2006 வன உரிமைச் சட்டத்தின்படி வாழும் நிலத்திற்கான பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், 2002 முதல் 2021 வரை வனங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வனவிலங்கு சரணாலயம், யானைகள் பராமரிப்பு திட்டம், சுற்றுச்சூழல் அதிர்வு தாங்கு மண்டலம், புலிகள் சரணாலயம், பல்லுயிர்ப் பெருக்க மையம், அகத்தியர் நில பாதுகாப்பு இயக்கம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டுகிறது. ஆனால் மக்களிடம் இதுவரை கருத்து கேட்பு கூட்டம் கூட நடத்தாமல் Buffer zone எனக் கூறி மலை கிராமங்களில் இடிந்த வீடுகளை புதுப்பிக்கவோ, கட்டுமான பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வந்து புதிய வீடுகள் கட்டவோ, புதிதாக கழிப்பறை கட்டவோ வனத்துறை அனுமதி வழங்குவது இல்லை. இது இந்த மக்களை வெகுவாக பாதித்து உள்ளது.

பழங்குடி மற்றும் ஆதி திராவிட மக்களுக்கு என ஆண்டுதோறும் கோடிகளில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், வனத்துறையோ புலிகள் சரணாலயம் எனக் கூறி பழங்குடி மக்களுக்கு கிடைக்க கூடிய தொகுப்பு வீடுகள் திட்டத்தை அனுமதிக்கவில்லை. பழங்குடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு பணிகளும் பழங்குடியினருக்கான பணியிடங்களில் முறையாக கிடைப்பதில்லை என்கின்றனர்.

"சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக வலம் வரும் அரசியல்வாதிகள், இனி எங்களை 18-ம் நூற்றாண்டு பழங்குடிகளாக பார்க்காமல், மனிதராக பார்த்தால் போதும் எங்களுக்கு சேர வேண்டிய அரசின் உதவிகளை முறையாக பெற்றுத் தந்தால் போதும்" என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

- நாகராஜன்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close