"ஓட்டு கேட்டு உள்ளே வராதே!" - பொதுக் கழிப்பறை கட்டி தராததால் தேர்தல் புறக்கணிப்பு

"ஓட்டு கேட்டு உள்ளே வராதே!" - பொதுக் கழிப்பறை கட்டி தராததால் தேர்தல் புறக்கணிப்பு
"ஓட்டு கேட்டு உள்ளே வராதே!" - பொதுக் கழிப்பறை கட்டி தராததால் தேர்தல் புறக்கணிப்பு

கோவை மாவட்டம் ஒன்டிபுதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பொதுக் கழிப்பறை கட்டி தரப்படாததால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

சிங்காநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் பொதுக் கழிப்பறை கட்டித்தர வேண்டி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் என பலரிடம் மனு அளித்தும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இந்தத் தேர்தலை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் இளைஞர் சந்துரு கூறும்போது, "ஆஞ்சநேயர் காலனியில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மக்களுக்கு பொதுக் கழிப்பிடம் இல்லாததால் இளம் பெண்கள், வயதானவர்கள் உட்பட அனைவரும் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

குறிப்பாக, பெண்களை பலர் வீடியோ எடுத்து மிரட்டுகின்றனர். இப்பிரச்னைகளை சரிசெய்ய பொதுக் கழிப்பறை கட்டித் தர வேண்டி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இங்குள்ள 250 குடும்பத்தினரும் சுமார் 1.45 சென்ட் அளவிலான வீட்டில்தான் வசிக்கின்றனர். ஒரு வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் வீட்டுக்குள் தனி கழிப்பறை கட்டிக் கொள்வது சாத்தியமில்லாதது.

எனவே, நாங்கள் வசிக்கும் பகுதியில் அரசு எங்களுக்கு பொதுக் கழிப்பறை கட்டித்தர வேண்டும். இதற்கு முன்னர் தேர்தல்களில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய வேட்பாளர்கள் யாரும் நிறைவேற்றவில்லை. எனவே, எங்கள் பகுதியில் வசிக்கும் சுமார் 1500 வாக்காளர்களும் இந்தத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக திரண்ட இந்த மக்கள் தங்கள் கைகளில் "ஓட்டு கேட்டு உள்ளே வராதே" என்ற வாசகம் பொறித்த பதாகை ஒன்றையும் ஏந்திருயிருந்தது கவனிக்கத்தக்கது.

- சுரேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com