[X] Close >

”தேமுதிகவுக்கு களத்தில் 2%க்கும் குறைவான வாக்குகளே உள்ளன” பத்திரிகையாளர் மாலன் பேட்டி

Journalist-Maalan-opinion-on-DMDK-filed-condition

தமிழகத்தில் அரசியல்களம் அனல் பறக்க ஆரம்பித்து இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்த தேமுதிக, தற்போது தனித்துவிடப்பட்ட கட்சியைப்போல் ஆகிவிட்டது. அதிமுகவிடம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தாங்கள் சரியான முறையில் நடத்தப்படவில்லை என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது, தேமுதிக களத்தில் உள்ள நிலவரத்தை காட்டிலும் மிக அதிகமான தொகுதிகளை கேட்பதாக அதிமுக கருதியதுதான்.


Advertisement

உண்மையில் தேமுதிகவின் வாக்குவங்கி சரிந்துவிட்டதா? கட்சியின் பலம் குறைந்து வருகிறதா? என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மூத்த பத்திரிகையாளர் மாலனை தொடர்பு கொண்டு பேசினோம்.

image


Advertisement

அவர் கூறும்போது, “ தேமுதிக அதிகபட்ச வாக்குகளை பெற்றது 2011 ஆம்ஆண்டு சட்டமன்ற தேர்தலில்தான். அதிமுக உடன் கூட்டணி வைத்து தேமுதிக சந்தித்த அந்தத் தேர்தலில், அக்கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றிபெற்றது. அதன்பிறகு வந்த 2014, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

2006-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற தேமுதிக 8.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் 10 சதவீத வாக்குகளை பெற்றது.

குறிப்பாக 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை தவிர்த்து, பிற தொகுதிகளில் தேமுதிக டெபாசிட் இழந்தது. அதில் விஜயகாந்தும் அடங்குவார். யதார்த்தம் இப்படி இருக்கும் போது, எங்களுக்கு இவ்வளவு தொண்டர்கள், இவ்வளவு வாக்குகள் இருக்கிறது என தேமுதிக கூறுவதற்கு எந்தவித நிரூபணமும் இல்லை.


Advertisement

image

2019 தேர்தலுக்கு பிறகு விஜய்காந்தின் உடல்நலம் மிகவும் நலிந்தது. முதலில் தேமுதிக தனிநபர் சார்ந்த கட்சி. ஆகவே தனிநபர் பலவீனம் அடையும்போது அது அந்த கட்சியை பாதிக்கும். அது பொருளாதாரம், உடல்நலம், மக்கள் செல்வாக்கு என எதுவாகவும் இருக்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் விஜய்காந்துக்கு மாற்றாக அங்கு ஒரு தலைவர் இல்லை. சுதீஷ் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார். மற்றொரு விஷயம் 2011-ஆம் ஆண்டு தேமுதிகவிடம் பண்ருட்டி இராமச்சந்திரன், நடிகர் அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நிரம்பிய பலமான அணி இருந்தது. ஆனால் தற்போது விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்களே முன்னணியில் இருக்கிறார்கள். 

2019-இல் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றதால் அவர்களை அதிமுக, கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முன்வந்தது. அங்கு அவர்களின் பலம் குறித்து விளக்கி கூறும்போது அதை தேமுதிகவால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஈகோ அடிப்படையில் விலகி சென்றார்கள். தேர்தல் என்பது கட்சியை கட்டமைத்துக்கொள்வதற்கும், நிலை நிறுத்திக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அதை நீங்கள் சரியாக பயன்படுத்தாதபோது உங்கள் கட்சி வீழ்ச்சியை சந்திக்கும்.

image

யதார்த்த களத்தில் தேமுதிகவின் வாக்குவங்கி 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. இந்தத்தேர்தலில் அது குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

தேமுதிக மீதான நம்பகத்தன்மை குறைவதற்கான காரணம், அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். தேமுதிகவின் இந்த செயல்பாடு பிற கட்சிகளிடம் அவர்கள் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக எதிர்ப்பு பிரசாரத்தை முன்வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன், தேமுதிக கூட்டணி வைக்கும்போது அதிமுகவின் வாக்குகள் தேமுதிகவிற்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ” என்றார்.

- கல்யாணி பாண்டியன்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close