[X] Close >

'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!

Mamata-Banerjee-and-her-election-strategy-in-West-Bengal

மம்தா Vs பாஜக, மம்தா Vs கம்யூனிஸ்ட் + காங்கிரஸ் கூட்டணி... இப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது மேற்கு வங்கத் தேர்தல். மம்தா என்ற ஒருவரை வீழ்த்த பெருங்கூட்டமே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி நொடிக்கு நொடி விறுவிறுப்படைந்திருக்கும் மேற்கு வங்கத் தேர்தலில் என்ன வியூகத்தின் அடிப்படையில் வெற்றிக்கனியை பறிக்க மம்தா முயல்கிறார் என்பதைப் பார்ப்போம்.


Advertisement

'பெங்காலி பெருமை'!

'குஜராத் அஸ்மிதா' (Gujarati asmita) என்ற பிரசாரத்தை பாஜக முன்னெடுத்தது. அது நல்ல பலனையும் தந்தது. அதுபோன்ற ஒரு பிரசாரத்தைத்தான் மேற்கு வங்கத்தில் முன்னெடுத்து வருகிறார் மம்தா. 'பெங்காலி பெருமை' என்ற பிரசாரத்தின் வாயிலாக மாநில மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை நிறுவி வருகிறார். இதற்கு முக்கியமான காரணம், மேற்கு வங்கத்தில் 86% மக்கள் சொந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 சதவீதம் பேர் மட்டும்தான் வெளியூர்வாசிகள்.


Advertisement

மதம், சாதியைக் கொண்டு மக்களை ஒருங்கிணைத்து வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று எண்ணியிருக்கும் பாஜகவுக்கு 'பெங்காலி பெருமை' என்ற ஒற்றை வார்த்தை அச்சுறுத்துகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். காரணம், மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த முடியாமல் திணறடிக்கிறது மம்தாவின் வியூகம். சாதி, மதம் ரீதியான ஒருங்கிணைப்பத்தை தாண்டி மண்ணின் மைந்தர்கள் என்ற ஒருங்கிணைப்பே பலம் பெறுகிறது. ஆகவேதான் 'பெங்காலி பெருமை' என்ற பிரசாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.

image

கடந்த 2019ம் ஆண்டு பாஜக பேரணியின் சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் மார்பளவு சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'பெங்காலி சின்னங்களை அவமதிப்பது' தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தது. பாஜகவின் ஆக்ரோஷமான தேசியவாதம் மற்றும் இந்துத்துவ கொள்கையை எதிர்ப்பதற்கு மம்தா கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் இந்த பிராந்தியவாதம்.


Advertisement

வாக்குச் சிதறல்:

2019 பொதுத் தேர்தலில், இடதுசாரிகளின் 33% வாக்கு வீழ்ச்சியால் பாஜக (23%) பயனடைந்தது. இடதுசாரிகள் அதன் வாக்குகளில் ஒரு பகுதியை மீண்டும் வென்றால், பாஜகவின் வாக்கு வங்கி குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. இது திரிணாமுல் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கும். அதேபோல மம்தா எதிர்ப்பு வாக்குகள் என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சென்றடையாமல், காங்கிரஸ் + கம்யூ., கூட்டணிக்கும், பாஜகவுக்கு சிதறடிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

தலைமைத்துவ காரணி!

மேற்கு வங்கத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து வெளிப்படுத்தாமலேயே தேர்தலை சந்திக்கின்றன. இது அக்கட்சிகளுக்கு பாதகமாக அமையும் வாய்ப்புள்ளது. மம்தாவின் முதல்வர் வேட்பாளர் முகம், மக்களுடனான நெருக்கம் ஆகியவை மக்கள் மனதில் மம்தாவுக்கான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் முகம் இல்லாதது பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

மாநிலத் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் முதல்வர் வேட்பாளரின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர் என்ற கருத்துக்கணிப்பு ஆய்வு ஒன்று கூறுகிறது. அப்படிப் பார்க்கும்போது, அறிவிக்கப்பட்ட முதல்வர் வேட்பாளர் அல்லது வெளிப்படையான முதல்வர் தேர்வு இல்லாதது மம்தாவுக்கு நன்மையாக அமையும்.image

பாஜக மற்றும் இடதுசாரிகளுக்கு மம்தாவைப் போல மாநிலம் தழுவிய வசீகரமான தலைவர் இல்லை என்பது முக்கியமான பிரச்னை. மோடியை மட்டுமே பாஜக அதிகம் நம்பியிருப்பது, அதற்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 'மோடி இல்லையென்றால் யார்?' ('If not Modi, who?') என்பது எந்த அளவுக்கு பாஜகவுக்கு கைகொடுத்ததோ அதேபோலதான், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 'தீதி இல்லையென்றால் யார்?' ('If not Didi, who?') என்ற வாசகமும் கைகொடுக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

2019 பொதுத் தேர்தலுக்கான சி.எஸ்.டி.எஸ் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, பதிலளித்தவர்கள் 32% பேர் மோடி பிரதமர் வேட்பாளராக இல்லாதிருந்தால் தாங்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஆக, வேட்பாளர் முகம் என்பது வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது.

சிறுபான்மை வாக்கு ஒருங்கிணைப்பு:

மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மூன்றாவது மாநிலம் மேற்கு வங்கம் (2.47 கோடி). முஸ்லிம் வாக்குகள் 125 தொகுதிகளில் (சட்டமன்ற பலத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகம்) வெற்றியாளர்களை தீர்மானிக்கும் வகையில் உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் இந்த 95 இடங்களை வென்றது. 2016-ல் இதுபோன்ற 90 இடங்களை வென்றது.

image

மத்திய - மாநில தேர்தல் வேறுபாடு!

2019 பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் நடைபெறும் அனைத்து மாநிலத் தேர்தல்களிலும், மாநில மற்றும் பொதுத் தேர்தல்களுக்கு இடையில் தேர்தல் முடிவுகளில் வேறுபாடு காணப்படுகிறது. இது பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக குறைந்துள்ளதை காட்டுகிறது. 2019 பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் சராசரியாக, பாஜகவின் வாக்குப் பங்கு 13% (தனியாக) மற்றும் 29% (கூட்டணி அடிப்படையில்) குறைந்துள்ளது. ஆக, இது மேற்கு வங்கத்திலும் பிரதிபலிக்கும் என்பதில் மாற்றமில்லை.

அதிரடி வேட்பாளர் பட்டியல்:

மம்தாவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 தாழ்த்தப்பட்ட பிரிவினர், 17 பழங்குடி வேட்பாளர்களை மம்தா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேற்கூறப்பட்ட காரணிகளைப் அடிப்படையாக வைத்து, 'தீதி'யை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் இப்போதைக்கு தெளிவாக தெரிகிறது!

- மலையரசு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close