[X] Close >

தீவிரம் காட்டும் ராகுல்... கேரளத்தில் கரையேறுமா காங்கிரஸ்?

Rahul-impact-in-Kerala-Elections-2021

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவுக்கு பிப்ரவரி 21-ம் தேதி முதல் 4 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில், தனது சொந்த தொகுதியான வயநாட்டில் 2 நாள்கள் தங்கியிருந்தவர், பிப்ரவரி 22-தேதி நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டார், பிப்ரவரி 23-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஷங்குமுகம் கடற்கரையில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து இறுதிநாளான பிப்ரவரி 24-ம் தேதி நீல நிற சட்டை - காக்கி பேன்ட் அணிந்து மீனவர்களுடன் கடலில் குதித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மீம்ஸ்கள் தெறிக்கிவிடப்பட்டன.


Advertisement

"அவர் என்னை கடலில் நீச்சலடிக்க தன்னுடன் சேர்ந்து குதிக்குமாறு கூறினார். எனக்கு குழந்தைகள் இருக்கின்றனர்; என்னால் இந்த ரிஸ்க் எடுக்க முடியாது" என்று கூறியிருக்கிறார் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரிச்சூர் காங்கிரஸ் எம்.பி டி.என்.பிரதாபன். கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சிகு வர போராடும் காங்கிரஸுக்கு இதைவிட கூடுதலான நம்பிக்கையான பாய்ச்சல் தேவைப்படுகிறது.

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல், கேரளாவில் காங்கிரஸுக்கு மிகப் பெரிய உந்துசக்தியை கொடுத்தது. (20 இடங்களில் 19 இடங்களை கைப்பற்றியிருந்தது ஐக்கிய ஜனநாயக முன்னணி) மொத்தம் 47.2 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இது கடந்த 4 தசாப்தங்களைவிட கூடுதல் வாக்குக சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

ராகுல் காந்தியின் பிரசாரம்தான் இதற்கு அச்சாணி என ஊடகங்களால் கூறப்பட்டது. தேசிய அளவில் தங்களுக்கு மாற்றம் தேவை என நினைத்த சிறுபான்மையினர், மாநிலம் முழுவதும் காங்கிரஸுடன் இணைந்ததும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. மேலும், கேரளாவில் உள்ள பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு வாக்களிப்பது வீணாகிவிடும் என்று நம்பினர். பான் - இந்தியா மட்டத்தில் அவர்கள் குறைவாக இருப்பதும் இதற்கு மற்றொரு காரணம்.

image

வரும் சட்டப்பேரவைத் தேர்தலானது காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா, சாவா போராட்டமாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் புதுச்சேரியில் வி.நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தபோது, தென்னிந்தியாவில் தனது கடைசி அரசாங்கத்தையும் காங்கிரஸ் இழந்தது. கேரளாவில் காங்கிரஸ் வெற்றிபெற தவறினால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அக்கட்சிக்கே தெரியும். அதுமட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களைப் போல, பாஜகவுக்கு காங்கிரஸார் அணி மாறும் அபாயம் கூட இருக்கிறது.


Advertisement

"ராகுல் காந்திக்கு கேரளாவில் ரசிகர்களும், அவரை விரும்பும் மக்களும் இருக்கின்றனர் என்பது உண்மைதான். அனைவரிடமும் நட்பாக பழகும் குணம் மக்களுடன் அவரை எளிதாக கனெக்ட் செய்துவிடும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அது காங்கிரஸுக்கான வாக்குகளாக மாறுமா என்பது எனக்கு தெரியவில்லை" என்கிறார் பிரபல மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா.

மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தேர்வானது, வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் நம்புகிறார். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தனது செல்வாக்கின் மூலம் வாக்காளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்றும், முதல்வர் பினராயி விஜயனுக்கு சவாலாக இருப்பார் என்றும் அவர் கருதுகிறார்.

image

குறிப்பாக, கேரளாவில் தனது கடந்த காலங்களில் ஆண்டதே போதும் என்று காங்கிரஸ் நினைத்துவிட்டதாக தெரிகிறது. 2011-16 ஆட்சியிலிருந்த காங்கிரஸ் சோலார் ஊழல் மற்றும் சரிதா நாயர் சர்ச்சையால் ஆட்சிக்கட்டிலை இழந்தது. இதையடுத்து, பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படவேண்டிய காங்கிரஸ் வாயை மூடி, ஒரு பார்வையாளராக பினராயி விஜயன் ஆட்சியை கவனித்து வருகிறது. இயற்கைப் பேரழிவாக இருந்தாலும் சரி, பெருந்தொற்று நோய் காலமாக இருந்தாலும் சரி, காங்கிரஸின் செயல்பாடு என்பது சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளாவில் வெற்றிக்கு பக்கபலமாக சிறுபான்மையினர் வாக்குகள் இருக்கும் என கூறப்படுகிறது. காரணம், 45 சதவீத்தத்துக்கும் அதிகமானோர் அங்கு சிறுபான்மையினராக இருக்கின்றனர்.

"சிறுபான்மையினரை ஆதரித்தால் மட்டுமே காங்கிரஸுக்கு வெற்றி சாத்தியம். முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடக்கு கேரளா தான் காங்கிரஸின் தலைவிதியை மாற்றி அமைக்க முடியும். சுமார் 60 தொகுதிகளை கொண்டிருக்கும் வடகேரளாவில் காங்கிரஸுக்கு வெறும் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுக்க ராகுல் காந்தியால் முடியுமானால் கேரளாவில் காங்கிரஸ் தனது வெற்றியை நிலை நிறுத்த வாய்ப்புள்ளது" என்கிறார் கேரள மீடியா அகாடமி மற்றும் பிரபல பத்திரிகையாளர் என்.பி. ராஜேந்திரன்.

கேரளாவில் சிறுபான்மையினர்தான் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்பதை பினராயி விஜயன் அரசு பெற்ற வெற்றியை கொண்டு நம்மால் கணக்கிட முடியும். இடதுசாரி ஜனநாயக முன்னணி கடந்த தேர்தலில் 43.5 சதவீத வாக்குகளைப் பெற்று, 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 91 இடங்களை வென்றது. (42 சதவீத வாக்குகள் தான் வெற்றியாளரை தீர்மானிக்கின்றன) எனவே, காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை குறிவைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆட்சிக்கு வர கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைந்தபட்சம் 5 சதவீதம் வாக்குகளை கூடுதலாக பெற வேண்டியது கட்டாயம். 2016-ல் 38.8 சதவீதத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸுக்கு இரண்டு பெரிய சவால்கள் உள்ளன. ஒன்று, முதல்வர் பினராயி விஜயனின் பெரும் இருப்பு; மற்றொன்று, மக்களுடன், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைக்கக்கூடிய ஒரு பிரபலமான தலைவரைக் காங்கிரஸ் கண்டுபிடிப்பது. கேரள பூர்வீக மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால், ராகுலின் வருகைக்குப் பிறகு கட்சியின் வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை கொண்டிருந்தார்:

"காங்கிரஸ் மற்றும் யுடிஎஃப் ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் தயாரிப்புகளில் இடதுசாரி மற்றும் பாஜகவை விட முன்னணியில் உள்ளன. வரும் தேர்தலில் இடதுசாரிகளை விட பெரும்பான்மையான இடங்களை நாங்கள் பெறுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம் கேரளத்தில் மீண்டும் காங்கிரஸின் கை ஓங்குமா என்பதை!

- மலையரசு

தகவல் உறுதுணை: India Today

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close