[X] Close >

'முட்டல் மோதல் வராமல் பார்த்துப்போம்!' - சுவர் விளம்பர சித்திரக்காரர்கள்

Wall-paint-Graffiti-Artist-Earning-Livelihood-by-drawing-political-parties-Symbols-for-the-Upcoming-Tamil-Nadu-Legislative-Assembly-Election

இன்றைய டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் தங்களை தகவமைத்துக் கொண்டன. ஃபேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சமூக வலைத்தளங்கள் மூலமாக வாக்காளர்களுக்கு வலை விரிக்கும் பணிகளுக்கு பஞ்சமில்லை. கட்சியின் கொள்கை, கோட்பாடு, தேர்தல் வாக்குறுதி, ஆன்லைன் மூலமாக உறுப்பினர் சேர்ப்பு என அனைத்து வகையிலும் முடிந்தவரை இணைய சேவைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. அதேநேரத்தில் மக்கள் மனதில் தங்களது கட்சியின் சின்னத்தை பதியவைக்கும் விதமாக சுவர்கள் மூலமாக சின்னத்தை வரைந்து பிரபலப்படுத்துவது, வேட்பாளரின் பெயரை நினைவுபடுத்துவது மாதிரியான பழைய டெக்னிக்குகளையும் அரசியல் கட்சிகள் பின்பற்றி வருகின்றன.


Advertisement

image

பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ள திருவண்ணாமலையை சேர்ந்த அர்ஜுனனிடம் பேசினோம். "பதினேழு வருஷமா சுவர்ல கட்சி சின்னங்கள், தலைவர்களோட படங்கள நான் வரைந்து வர்றேன். ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட சுவரில் அரசியல் கட்சிக்காக படம் கூட நான் போட்டு இருக்கேன். காலையில ஆறு மணிக்கெல்லாம் எங்க வேல ஆரம்பமாகும். முதல்ல சுவத்துக்கு வெள்ளை அடிப்போம். அது காஞ்சதும் அதுல அவுட்லைன் போடுவோம். நாங்க எந்த கட்சிக்கு வரையுறோமோ அந்த கட்சியோடு தலைவர், துணை தலைவர், மாவட்ட நிர்வாகிகள், அடிப்படை நிர்வாகிகள்னு நிறைய பேரோட பெயரே எழுதுவோம். பெரும்பாலும் தமிழ்ல தான் நாங்க எழுதுவோம். அதை எழுதி முடிச்சதும் அந்தக் கட்சி கொடிக்கு ஏத்த மாதிரி கலர் கொடுத்து அந்த சுவத்துக்கு உயிரோட்டம் கொடுப்போம். 


Advertisement

image

எல்லா நேரத்துலையும் எங்களுக்கு வேல இருக்கும். ஒரு நாளைக்கு 600 ரூபா சம்பளம் கிடைக்கும். ஓவியர்களுக்கு ஒத்தாசையா வர்ற ஹெல்பருக்கு நானூறு ரூபா கிடைக்கும். அதோட எங்களுக்கான சாப்பாட்டு செலவையும் கட்சி நிர்வாகிங்க தான் கவனிச்சிக்கணும். தேர்தல் நேரத்துல எங்களுக்கு வேல பளு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். நாங்க எழுதுற சுவருக்கு சொந்தமான வீட்டு உரிமையாளர்களோட சம்மதத்தோடு அவங்க விரும்புற கட்சிக்கான சின்னத்த தான் வரைவோம். அது தான் எங்க வழக்கம்" என்கிறார் அவர்.

சமயங்களில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் சுவர் விளம்பரம் செய்ய தடை வந்தால் தங்கள் பாடு திண்டாட்டம் தான் என சொல்கின்றனர் இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள்.


Advertisement

"நான் பல வருஷமா இந்த வேலைய தான் பாத்துகிட்டு வர்றேன். கட்சிகளோட சின்னங்கள வரையுறதுல நான் ஸ்பெஷலிஸ்ட். உதயசூரியன், இரட்டை இலை, மாம்பழம், முரசு, பம்பரம், சைக்கிள், கை, தாமரை, கதிர் அருவா மாதிரியான சின்னங்கள இப்போ அதிகம் வரைஞ்சுகிட்டு வர்றேன். இது தவிர சுயேட்சை வேட்பாளர்களுக்கு வேண்டியும் சின்னங்கள் வரையுறது உண்டு. ஒருமுறை தேர்தல் அப்போ காங்கிரஸ் கட்சிக்காக பசுவும் கன்றும் சின்னத்த வரஞ்சு கொடுத்திருக்கேன். சதுர அடி கணக்குல கூலி பேசிக்கிட்டு வேலைய ஆரம்பிச்சிடுவேன். கட்சிகளோட அடையாளமா இருக்குற தலைவர்களையும் தத்ரூபமா வரைவேன். தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து சிந்தனை வரைந்த அனுபவம் இருக்கு. என் மூச்சு இருக்குற வரைக்கும் என் கை இந்த பிரஷ்ஷ புடிச்சு இருக்கும்" என்கிறார் மதுரையை சேர்ந்த லோகநாதன். 

image

சுவர் பிடிப்பதில் கட்சிகளுக்கும் முட்டல் மோதல் வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே சுவரை ரிசர்வ் செய்து கொள்ளும் வழக்கமும் இருப்பதாக சொல்கின்றனர் இந்த சித்திரக்காரர்கள். ஒருமுறை எழுதினால் அதிகபட்சம் மூன்று மாத காலம் வரை இந்த எழுத்துகள் நிலைத்திருக்கும் எனவும் உத்திரவாதம் கொடுக்கின்றனர் சுவர் எழுதும் சித்திரக்காரர்கள்.

அதேபோல தேர்தல் நேர கூட்டணிக்கு ஏற்ப, சுவர் எழுத வேண்டி இருக்கும் எனவும் சொல்கின்றனர். உதாரணமாக அதிமுக மற்றும் பாமக கூட்டணி வைத்தால் மாம்பழத்தில் இரட்டை இலையை சேர்த்து படம் போட வேண்டுமென சொல்கின்றனர். தேர்தல் கமிஷனின் கெடுபிடி தங்கள் தொழிலுக்கு கொஞ்சம் அதிகம் என்கின்றனர் இந்த பணியில் உள்ள சித்திரக்காரர்கள்.  

- எல்லுச்சாமி கார்த்திக்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close