புதுச்சேரியில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதில் சிக்கல் - கள நிலவரம் என்ன?

புதுச்சேரியில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதில் சிக்கல் - கள நிலவரம் என்ன?
புதுச்சேரியில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதில் சிக்கல் - கள நிலவரம் என்ன?

புதுச்சேரியில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்கிறது. ஆனால், சட்டப்பேரவை கூட்டணி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மெளனம் காத்து வருகிறார். இதற்கு பாஜக தலைவர்களின் செயல்பாடுகளே காரணம் என கூறப்படுகிறது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து, காங்கிரஸ் ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்த நமச்சிவாயம்தான், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் என சொல்லப்படுகிறது.

இதற்கு சான்றாக அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, "நமச்சிவாய" முழக்கமிட்டது என்.ஆர்.காங்கிரஸ்-க்கு முதல் அதிருப்தியாக பார்க்கப்படுகிறது. பாஜக மூத்தத் தலைவர் அமித்ஷாவின் மேடைப் பேச்சு என்.ஆர். காங்கிரஸ்-க்கு மற்றொரு பேரிடியாக அமைந்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலேயே ஆட்சி என்பதில் ரங்கசாமி உறுதியாக இருக்கும் நிலையில், பாஜக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு அதிருப்தியின் உச்சகட்டம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கல்யாண சுந்தரம் பாஜகவில் இணைந்தது, முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்தன் அமித்ஷாவை சந்தித்தது போன்ற நிகழ்வுகளும் அமித்ஷாவின் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரங்கசாமி புறக்கணிக்க காரணமாக கூறப்படுகிறது. ஆதலால், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்துபோட்டியிட வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com