[X] Close >

கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!

dengue-fever-prevention-and-control

தமிழகத்தில் டெங்கு அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் எப்படி வருகிறது, அதனை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.


Advertisement

''டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனும் கொசு வகையினால் பரவும் நோய் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருசில அறிகுறிகளை கொண்டு டெங்கு நோயின் தாக்கத்தை கண்டறிந்துவிடலாம். காய்ச்சல் ஆரம்பித்த முதல் மூன்று நாட்கள் உடல் உஷ்ணத்தில் (104-106 டிகிரி காய்ச்சல்) கொதிப்பது, நான்காம் நாளில் இருந்து  உள்ளங்கையும் காலும் சில்லென குளிர்வது, மூட்டின் பூட்டுகள் அவிழுமாறு வலி எடுப்பது, நன்றாக உண்ணும் குழந்தை ஒரு வாய் உணவு உண்ணவே சலித்துக் கொள்வது, நாவு வறண்டு போகுமாறு தாகம் எடுப்பது, அசதி, முன்னுக்குப்பின் காய்ச்சல் அதிகமாகிக் கொண்டே செல்வது, கண்ணுக்குப் பின் வலி, எப்போதும் மஞ்சள் நிறத்தில் செல்லும் மலம் கருப்பாக மாறுவது, நிறமற்ற சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் ஆவது, பல் ஈர்களில் ரத்தம் கசிவது, கல்லீரலில் பித்தம் இருந்தால் டெங்கு என அறிந்துக் கொள்ளலாம்.

image


Advertisement

டெங்குவின்போது நமது உடலில் நடப்பது என்ன?

100-க்கு 95 பேருக்கு வரும் டெங்கு காய்ச்சல் மற்ற வைரஸ் காய்ச்சல்களைப்போல் நம்மை ஒன்றும் செய்யாமல் கடந்து செல்லும். டெங்கு வைரஸ் நான்கு வகைகளாக இருப்பதால் முதல் முறை ஏற்கெனவே டெங்கு வந்தவருக்கு மீண்டும் 3 முறை டெங்கு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு முதன்முதலாய் டெங்கு வருவதை Primary infection என்போம். இரண்டாவதாக டெங்கு வந்தால் அதை Secondary infection என்போம். இவையிரண்டில் Secondary infectionதான் கவனிக்காமல் விட்டால் அதிகம் ஆபத்தில் முடிகிறது.

VASCULOPATHY - ரத்த நாளங்களின் சுவர்களின் ஸ்திரத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துவது; THROMBOCYTOPENIA - ரத்த தட்டணுக்களை அழித்து பாதிப்பை ஏற்படுத்துவது; PLATELET DYSFUNCTION - ரத்த தட்டணுக்களை அதன் வேலையை செய்யவிடாமல் தடுப்பது; COAGULOPATHY - ரத்தம் உறைவதை தடுத்து ரத்தப்போக்கை உண்டு செய்வது ஆகிய நான்கு விஷயங்கும் டெங்குவின்போது நமது உடலில் நடைபெறுகிறது.  உள்ளே வந்த டெங்கு வைரஸிற்கும் அதன் விளைவாக உடலில் தோன்றும் எதிர்ப்பு சக்திக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தின் விளைவாய் நடக்கும் விசயங்கள் தான் இவையனைத்தும்.


Advertisement

முதல் மூன்று நாள் கடும் வெப்பம் இருப்பதால், நமது உடலில் உள்ள நீர்ச்சத்து வற்றிக் கொண்டே வரும். இது DEHYDRATION ஆகும். இதை சரிசெய்ய அதிகமாக நீராகாரங்களை பருக வேண்டும். ORS திரவத்தை ஒரு லிட்டர் நீரில் ஒரு பெரிய பாக்கெட்டை கலந்து பருக வேண்டும்.வாந்தி இல்லாதவர்களுக்கு இந்த திரவத்தை பருகக் கொடுக்கலாம். வாந்தி வயிற்றுப்போக்கு இருப்பவர்களுக்கு ரத்த நாளம் வழி IV திரவங்களை மருத்துவர் அறிவுரையின் பேரில் போட்டுக்கொள்ளலாம். இதற்கு மருத்துவரின் அறிவுரை அவசியம்.

பக்கத்தில் மெடிக்கல் சாப் வைத்திருப்பவர் / ரிடையர்டு நர்ஸ் போன்றவர்களிடம் கட்டாயம்  ஐவி திரவங்கள் ஏற்றிக்கொள்ள வேண்டாம்  அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே. தேவைக்கு மேல் திரவம் ஏற்றுவதும் ஆபத்தில் முடியும்.

image

அடுத்த மூன்று நாட்களான போர் காலத்தில் ரத்த நாளங்களில் இருக்கும் கொஞ்சநஞ்ச நீர்சத்தும் (PLASMA LEAKAGE) நாளங்களின் சுவர் பழுதடைந்து இருப்பதால் வெளியேறி வயிற்றுப்பகுதியில் (ASCITES) / நுரையீரலின் வெளிப்பகுதியில் அந்த நீர் கோர்க்கும். ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர்ச்சத்து குறைந்தால்,  நமது முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது குறையும் இதனால் அந்த உறுப்புகள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம்.

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், தட்டணுக்களும் அழிக்கப்படுவதால் ரத்தம் உறைவது பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இது இரு வகைப்படும்.

1.வெளியே தெரியும் ரத்தக்கசிவு ( Visible external bleeding)

பற்களின் ஈறுகளில் இருந்தும், தோல்களில் அடிப்பகுதியில் ரத்தக்கசிவு

2. வெளியே தெரியாத ரத்தகசிவு (Occult internal bleeding)

வயிற்றில் உள்ளே நடக்கும் ரத்தகசிவு. இதை மலம் கருப்பாக செல்வதை கொண்டு அறியலாம்.

இந்த ரத்தக்கசிவின் விளைவாக நமது நாளங்களில் உள்ள ரத்தம் இன்னும் அளவு குறைகிறது. ஆகவே நமது முக்கிய உறுப்புகளான கல்லீரல், மூளை, கிட்னிகள் போன்றவற்றிற்கு ரத்த ஓட்டம் குறைகிறது. இதை CIRCULATORY SHOCK என்கிறோம். ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இந்த பாதிப்பு உயிரை பறித்து விடுகிறது.

ஆக,  இதன் மூலம் நாம் அறிவது, டெங்குவின் முதல் குறி நமது நீர்ச்சத்து தான். போதுமான அளவு நீர், கஞ்சி, பால், இளநீர், மோர் என்று நீர்ச்சத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் மூலம் நமது ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர்ச்த்தை நம்மால் பேண முடியும்.

* நமது ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வாய்வழி விவரங்கள் எடுக்க இயலா சூழ்நிலையில்,     நாளங்கள் வழி திரவங்கள் ஏற்றப்படும். மொத்தத்தில் நமது ரத்த நாளங்களில் போதுமான அளவு நீர்ச்சத்து பேண வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.

* ரத்தக் கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டால் தேவையான அளவு ரத்தம் ஏற்றப்படும்.

* தட்டணுக்கள் அபாய அளவை விட குறைந்தால் தட்டணுக்கள் ஏற்றப்படும். ரத்தக்கசிவு இல்லாத சூழ்நிலையில் தட்டணுக்கள் குறைவதால் எந்த பயமும் இல்லை.

* தட்டணுக்களின் அளவுகளுக்கும் நமது ரத்த நாளங்களின் உள்ளே இருக்கும் நீர்ச்சத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை:

* முதல் நாள் - பாராசிட்டமால் மாத்திரை மட்டும் கொண்டு காய்ச்சலை சரி செய்யலாம் / குளிர்ந்த நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஓய்வு முக்கியம்.

* இரண்டாவது நாள் காய்ச்சல் இருப்பின் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். மருந்து கடைகளில் செட் மாத்திரை வாங்கக் கூடாது.

* மூன்றாவது நாள் வரை கடும் காய்ச்சல் அடித்து, சட்டென உடல் குளிர்ந்தால் உடனே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும்.

* அங்கே , தங்கி சிகிச்சை பெறச் சொன்னால், உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வேண்டும்.

* காய்ச்சல் வந்தால் தினமும் போதுமான அளவு நீரை பருக வேண்டும். ஓ.ஆர்.எஸ் உப்புக்கரைசல் நீரை பருகுவது நல்லது. உணவை கஞ்சியாக குடிப்பது நல்லது.

* சிறுநீர் கழிப்பது ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் நிகழ வேண்டும். அதில் குறைபாடு இருப்பின் உடனே உள்நோயாளியாக சேர வேண்டும்.

* மலத்தில் ரத்தம் வெளியேறுதல் / மலம் கருப்பாக செல்லுதல், வயிற்று வலி, வாந்தி போன்ற அறிகுறிகளை கண்டறிந்தால் உடனே மருத்துவமனையை நாட வேண்டும்.

* கடும் ஜுரம் அடிக்கும் வேலையிலும் காய்ச்சல் விட்ட மூன்று நாட்களும் ஓய்வு கட்டாயம் தேவை.

அரசு மற்றும் பிற மருத்துவமனைகளில் உள்நோயாளியாக தங்கியிருப்போர் , மருத்துவர் அனுமதியின்றி முன்கூட்டியே மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வரக்கூடாது. டெங்கு காய்ச்சலில், ஜுரம் விட்ட அடுத்த மூன்று நாட்கள் தான் ஆபத்தானவை என்பதை நினைவில் கொள்க)

* கடும் ஜுரம் அடிக்கும் ஒருவர், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைச்சலை தவிர்க்க வேண்டும்.

* டெங்கு நோய் ஒரு பகுதியில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்தால் அந்த இடத்திற்கு இயன்றவரை பயணம் செல்வது கூடாது. குழந்தைகள், முதியோரை அங்கு அழைத்துச் செல்ல கூடாது.

* உங்கள் ஊரில் டெங்கு பரவிக்கொண்டிருந்தாலோ, உங்கள் வீட்டில் யாருக்கேனும் டெங்கி காய்ச்சல் வந்திருந்தாலோ அடுத்த இரண்டு வாரம் நீங்களும் டெங்கு பரவாத பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

டெங்கு என்பது நமது வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நன்னீர் நேங்குவதால் அதில் முட்டையிட்டு வளரும் கொசுவால் வரும் நோயாகும். இந்த கொசு கழிவு நீரில் வளராது, முட்டையும் இடாது. ஆகவே, தங்கள் வீட்டிற்குள் வீட்டின் அருகில் இருக்கும் இடங்களை (காலி இடமாக இருப்பினும்) அதை டெங்கு புழு வாழும் தண்ணீர் இல்லாத இடமாக வைத்துக் கொள்வது நமது பொறுப்பு. அரசு மட்டும் செய்ய வேண்டிய வேலை அல்ல இது. நாம் சமுதாய பொறுப்புடன் செயல்பட வேண்டிய தருணம் இது. தங்கள் வீட்டின் குப்பைகளை சரிவர அதை சேகரிக்க வருபவர்களிடம் அளிக்க வேண்டும். வீட்டை சுற்றி கொட்டக்கூடாது. நம் வீட்டிலும் அண்டை அயலாரிடமும் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே டெங்கு குறித்த விழிப்புணர்வுடன் இருந்து அந்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவோம்''.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close