[X] Close >

வரி, நிதிப் பகிர்வு, மானியம்...- தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசு மீது அடுக்கப்பட்ட குறைகள்!

tamilnadu-government-condemned-to-union-government-about-fund-released

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


Advertisement

அவர் பட்ஜெட் உரையில் “2021-22 முதல் 2025-26 வரையுள்ள காலத்திற்கான 15-வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கையுடன், நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான குறிப்பாணை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிக்குழுவினால் அளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில், தமிழ்நாடு போன்று சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கு உரிய பலன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, 15வது நிதிக்குழுவின் இறுதி அறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கை, தமிழ்நாட்டின் நியாயமான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் இருப்பதுடன் முந்தைய நிதிக்குழுக்களில், குறிப்பாக 14வது நிதிக்குழுவில் இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்யவில்லை.

image


Advertisement

மத்திய அரசிடமிருந்து, மாநிலத்திற்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாகப் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. 14வது நிதிக்குழுவில், மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து, 15வது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கையில் 4.189 சதவீதமாக ஓரளவிற்கு உயர்ந்து, தற்போது இறுதி அறிக்கையில் 4.079 சதவீதமாக குறைந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டிற்கான வருவாய் பற்றாக்குறை மானியமான 4,025 கோடி ரூபாயை வழங்க முதன்முறையாக இடைக்கால அறிக்கை பரிந்துரை செய்திருந்தது. இது நமது மாநிலத்திற்கு தொடர்ந்து உதவுகின்ற வகையில் அமையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், இறுதி அறிக்கையில் 2021-22 ஆம் ஆண்டில், வருவாய் பற்றாக்குறை மானியத்தைக் குறைத்து 2,204 கோடி ரூபாய் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகை, முதலாவது ஆண்டிற்கு மட்டும்தான் (2021-22) வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்ட மொத்த உள்ளாட்சி அமைப்பு மானியத் தொகை, 2020-21 ஆம் ஆண்டில் 5,344 கோடி ரூபாயிலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 3,979 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. 13வது நிதிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட 5,455.90 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்பு மானியத்தைவிட, 14வது நிதிக்குழுவின் ஐந்தாண்டு காலத்திற்கான உள்ளாட்சி அமைப்பு மானியம் மும்மடங்கு அதிகரித்து 17,009.74 கோடி ரூபாயாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனை ஒப்பிடுகையில், 15வது நிதிக்குழு 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 2025-26 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கான உள்ளாட்சி அமைப்பு மொத்த மானியமாக 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மானியங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவில் அதிகரிக்கப்பட்டதையே காட்டுகிறது.

14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட தொகையை விட, தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானியத் தொகை 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. அதாவது, 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 8,232.31 கோடி ரூபாயிலிருந்து, 2021 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 7,187 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், 15வது நிதிக்குழுவால், தேசிய நகர்ப்புற மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் நகர்ப்புற மக்கள்தொகை விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், தேசிய ஒட்டுமொத்த மக்கள்தொகை மற்றும் பரப்பளவில், தமிழ்நாட்டின் மக்கள்தொகை மற்றும் பரப்பளவின் விகிதாச்சாரத்தை தவறான அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளின் மானியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு போன்ற நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


Advertisement

முந்தைய நிதிக்குழுவால், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒட்டுமொத்த மானியத் தொகையில், நிபந்தனையில்லாத மானியத்தின் பங்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 90 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மானியங்கள் செயல்திறன் மானியமாகவும் ஊக்க மானியமாகவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்படும். முந்தைய அனுபவத்தினால், உண்மையில் இந்த மானியங்கள் உரிய நேரத்தில் விடுவிக்கப்படுமா என்ற ஐயம் உள்ளது.

14வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியம் மற்றும் 2,029.22 கோடி ரூபாய், செயல்திறன் மானியம், மத்திய அரசால் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்த அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக, 2019-20 ஆம் ஆண்டுக்கான உரிய அடிப்படை மானியம் 3,796.81 கோடி ரூபாய் இவ்வாண்டில் தான் பெறப்பட்டுள்ளது. 2017-18 முதல் பெரும்பாலான மாநிலங்களுக்கு 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட செயல்திறன் மானியம் மத்திய அரசால் விடுவிக்கப்படவில்லை. செயல்திறன் மானியத்திற்காக சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் தமிழ்நாடு பூர்த்தி செய்து, அதன் கோரிக்கைகளை சமர்ப்பித்தது. 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய ஒட்டுமொத்த செயல்திறன் மானியங்களையும், மேலும் காலதாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். 15வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பிற்கான மானியத்தை மத்திய அரசிடமிருந்து உரிய நேரத்தில் பெறுவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

image

14வது நிதிக்குழு பரிந்துரைத்தது போல் அல்லாமல், மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் பரிந்துரைத்துள்ளது. நீதித்துறை மற்றும் புள்ளியியல் துறை உட்பட ஆளுகை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள், சுகாதாரம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வேளாண்மை மற்றும் ஊரக உட்கட்டமைப்பு, உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகளுக்காக தமிழ்நாட்டிற்கு 4,784 கோடி ரூபாய் செயல்திறன் ஊக்கத்தொகையையும், மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஆனால், மத்திய நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்ட குறிப்பாணையில், துறைகளுக்கான குறிப்பிட்ட மானியங்களைப் பொறுத்தவரையில், ‘நடைமுறையில் உள்ள மற்றும் புதிய மத்திய அரசால் பொறுப்பேற்கும் மற்றும் மத்திய துறை திட்டங்களை வடிவமைக்கும்போதும், செயல்படுத்தும்போதும், ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட துறைகளை மத்திய அரசு உரியவாறாக கருதிப் பார்க்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய துறை மற்றும் மத்திய அரசால் பொறுப்பேற்கப்பட்ட திட்டங்களுக்கான அவர்களின் பங்கிற்குப் பதிலாக, 15வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மானியங்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதுநாள் வரை பின்பற்றப்பட்ட நடைமுறையிலிருந்து இது பெருமளவில் விலகுவதாக அமையும்.

சென்னை நீர்நிலைகளைச் சீரமைத்தல், வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பழங்காலக் கோயில்களைப் புனரமைத்தல், பாரம்பரிய கட்டடங்களைப் பராமரித்தல், பாரம்பரிய நீர்நிலைகளை மறுசீரமைத்தல் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நகரங்களின் மேம்பாடு உள்ளிட்ட ஐந்து திட்டங்களுக்கு மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியமாக, தமிழ்நாட்டிற்கு 2,200 கோடி ரூபாயை குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய நிதியமைச்சரின், நடவடிக்கை எடுக்கப்பட்ட குறிப்பாணையில், ‘மாநில அரசிடம் உள்ள நிபந்தனை இல்லாத நிதி ஆதாரங்கள் மற்றும் மத்திய அரசின் நிதி சார்ந்த பொறுப்புகளைக் கருத்திற்கொண்டு, மேற்கூறிய பரிந்துரைக்கு உரிய கவனம் செலுத்தப்படும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஒரு தீர்ப்பாகச் செயல்படுத்தும் வழக்கத்தைப் பின்பற்றி, 15வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட, மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் எந்த ஒரு கூடுதல் நிபந்தனைகளையும் விதிக்காமல், மாநிலங்களுக்கு நேரடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

15வது நிதிக்குழு அதன் அறிக்கையில், மத்திய அரசால் விதிக்கப்பட்ட மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்கை குறிப்பிட்டுள்ளது. இவை, மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய வரி வருவாயின் பங்காக இல்லை. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கானது, 2011-12 ஆம் ஆண்டில் 10.4 சதவீதத்திலிருந்து, 2019-20 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தப் போக்கை நிதிக்குழு குறிப்பிட்டிருந்தாலும், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் கோரியபடி, அடிப்படை வரி விகிதத்தில் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை இணைப்பது அல்லது அவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய மொத்த வரி வருவாயுடன் சேர்ப்பது குறித்து எந்தவொரு திட்டவட்டமான பரிந்துரையையும் 15வது நிதிக்குழு செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

image

2020 ஆம் ஆண்டு மே மாதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வையில் மத்திய அரசு மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பங்கை கணிசமாக உயர்த்தி, அடிப்படை தீர்வையின் பங்கைக் குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான பல்வேறு வரிகளின் காரணமாக மத்திய அரசின் வருவாய் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டில் 48 சதவீத வளர்ச்சியைக் கண்டது. ஆனால், இதே காலகட்டத்தில், 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான ஆயத்தீர்வையின் பங்கு குறைந்து, 39.40 சதவீதம் மட்டும் பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதியன்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில், மத்திய வரிகளிலிருந்து பகிர்ந்தளிக்கப்படும் உரிய பங்கினை மாநிலங்கள் பெறும் வகையில், அனைத்து மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி விகிதத்துடன் இணைக்கவேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் மத்திய நிதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். முதலமைச்சரும் இப்பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இருப்பினும், 2021-22 ஆம் ஆண்டின் மத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை ஆயத்தீர்வையை மேலும் குறைத்து, விவசாய உட்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வரி விதிக்கப்பட்டது.

இதேபோல் 2013-14 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதனிநபர் வருமான வரி மீதான கூடுதல் கட்டணம் மேலும் விரிவாக்கப்பட்டு, அதிகரித்ததன் மூலம் மத்திய அரசிற்கு பெருமளவிலான வருவாயை அளித்து வருகிறது. ஆனால், இந்த அதிகரிக்கப்பட்ட வருவாயில் இருந்து, மாநிலங்களுக்கு எந்தவிதமான பங்கும் கிடைப்பதில்லை. 2021-22 ஆம் ஆண்டின் மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் தங்கம், வெள்ளி, மதுபானங்கள், கச்சா, சமையல் எண்ணெய், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி மற்றும் முற்றா நிலக்கரி, ஆப்பிள்கள், பருப்பு வகைகள் மற்றும் தரமான உரங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக வேளாண்மை உட்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடிய மத்திய வரி வருவாயை மேலும் குறைத்துள்ளன. அனைத்து மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்களை அடிப்படை வரி விகிதத்துடன் இணைக்கவும், மாநிலங்கள் தங்களது உரிய வருவாயின் பங்கினைப் பெறுவதை உறுதிசெய்யவும் மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எகிறியடிக்கும் எடப்பாடி பழனிசாமி... ஓரங்கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம்!

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ ஆகிய இரண்டு புயல்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் தமிழ்நாடு தாக்கப்பட்டது. இதனால், பயிர்கள், உடைமைகள் மற்றும் பொதுச் சொத்துகள் பெருமளவில் சேதமடைந்தன. மொத்த சேதங்களை மதிப்பிட்டு, நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்காக 3,758.65 கோடி ரூபாயும், புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களுக்காக 1,514 கோடி ரூபாயும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பருவம் தவறிப் பெய்த கனமழை சேதங்களுக்காக 900.82 கோடி ரூபாயும் வழங்கக்கோரி மத்திய அரசிடம் கோரிக்கைமனு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளுக்காக கணிசமான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2020-21 ஆம் ஆண்டின் மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து இதுவரை மொத்தம் 11,943.85 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடையிலிருந்து 200 கோடி ரூபாய் கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கான செலவினங்களை மேற்கொள்வதற்காக, மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணைய நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு, மாநிலப் பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அதிக அளவிலான செலவினங்கள், 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளுக்காக, மாநிலப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதிக்கு, மத்திய அரசின் பங்கு 1,020 கோடி ரூபாயுடன், தமிழ்நாட்டிற்காக 15வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தொகையான 1,360 கோடி ரூபாய் உண்மையில் போதுமான அளவில் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. எனவே, தேசியப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close