[X] Close >

"ராமர் கோயிலுக்கு நிதி தரமுடியாது. ஆனால்..." - கர்நாடக அரசு Vs முன்னாள் முதல்வர்கள்!

Siddaramaiah--Kumaraswamy-question-donation-collection-on-Ram-Mandir

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப்படுவது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஆளும் அரசுக்கு இடையில் ஒரு புயலே வீசத் தொடங்கியுள்ளது.


Advertisement

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் விவகாரம்தான் தற்போது கர்நாடக மாநில அரசியலில் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியிருக்கிறது. ஆளும் பாஜக அரசு, ராமர் கோயிலுக்கான வசூலில் முறைகேடு செய்கிறது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என இரு கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்றாக எடியூரப்பா அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். முன்னாள் முதல்வர்களான குமாரசாமி மற்றும் சித்தராமையா ஆகியோர் அயோத்தியில் ராமர் கோயிலை நிர்மாணிப்பதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக கடுமையாக பேசியுள்ளனர்.

ஆளும் பாஜகவின் பல ஆர்வலர்கள் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற பல அமைப்புகளுடன், வீடு வீடாகச் சென்று 'ஸ்ரீ ராம் மந்திரி நிதி சமர்பனா அபியான்' பிரசாரத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர். இந்த அமைப்புகள் எந்த அதிகாரத்தின் கீழ் நிதி சேகரிக்கின்றன, இந்த நோக்கத்திற்காக சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் அதே காரணங்களுக்காக இந்த அமைப்புகளால் முன்பு சேகரிக்கப்பட்ட பணம் குறித்து யார் தெளிவுபடுத்துவார்கள் என்று இரு தலைவர்களும் ஆளும் அரசை நோக்கி சரமாரியாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

image

முன்னாள் முதல்வர் குமாரசாமி, "நான் கோயில்கள் கட்டுவதற்கு எதிரானவன் அல்ல; தனியார் நிறுவனங்களின் நன்கொடைக்கு நான் எதிரானவன். அவர்களுக்கு அனுமதி வழங்கியவர் யார்? அவர்கள் மக்களை அச்சுறுத்துகிறார்கள். நான் கூட ஒரு பாதிக்கப்பட்டவன். ஒரு பெண் உட்பட மூன்று பேர் என் வீட்டிற்கு வந்தார்கள், 'நீங்கள் ஏன் பணம் கொடுக்கவில்லை' என்று கேட்டு என்னை மிரட்டினார்கள்.

ராமர் கோயில் எங்கள் நாட்டின் பிரதான பிரச்னை என்று அவர்கள் சொன்னார்கள். அதற்கு ஏதேனும் அங்கீகாரம் இருந்ததா? வி.எச்.பி இதில் தயவுசெய்து வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 1989-ல் கூட எல்.கே. அத்வானி இதற்காக பணம் சேகரித்திருந்தார். அந்தப் பணம் என்ன ஆனது? அந்தப் பணத்துக்கு எதைக் கணக்கு கொடுப்பார்கள்?.


Advertisement

ராம் மந்திர் கட்டுமானத்திற்காக நன்கொடைகளை சேகரிப்பவர்கள் பணம் செலுத்தியவர்கள் மற்றும் பணம் செலுத்தாதவர்களின் வீடுகளை தனித்தனியாக குறித்து கொண்டு வருகின்றனர். ஹிட்லரின் ஆட்சியின்போது லட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தபோது ஜெர்மனியில் நாஜிக்கள் செய்ததைப் போன்றது இது. ஜெர்மனியில் நாஜி கட்சி நிறுவப்பட்ட அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிறந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். நாஜிக்கள் ஏற்றுக்கொண்ட ஒத்த கொள்கைகளை ஆர்எஸ்எஸ் செயல்படுத்த முயற்சித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய கவலைகள் உள்ளன. நாட்டில் இப்போது மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன" என்று பேசியிருக்கிறார்.

இதேபோல் சித்தராமையாவோ, "அயோத்தியில் உள்ள கோயிலுக்கு நிதி திரட்டுவதற்காக பாஜக பொதுமக்களின் உணர்ச்சிகளை சுரண்டுகிறது. ராம் மந்திர் நிறுவப்படவுள்ள நிலத்தின் சர்ச்சைக்குரிய தன்மை காரணமாக இதற்கு பங்களிக்க மாட்டேன். அதற்கு பதிலாக வேறு இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டால் தானம் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் நீடித்த சர்ச்சைகள் நிலவுகின்றன. எனினும், ராம் மந்திர் நிறுவப்படுவதற்காக இதற்கு முன் சேகரிக்கப்பட்ட நிதிகள் எல்லாம் என்ன ஆனது.

image

கடந்த காலத்திலும் இதே நோக்கத்திற்காக பொதுமக்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டது. ஆனால், அத்தகைய நிதி அல்லது செங்கற்கள் சேகரிக்கப்பட்ட விவரங்கள் எதுவும் யாருக்கும் தெரியவில்லை. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு பொதுமக்களிடமிருந்து பணம் சேகரிப்பவர்கள், அதைத் தவறாக பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதால், இதற்குப் பொறுப்பு யார் என்று கூறப்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார். அயோத்தி ராம் மந்திர் விவகாரத்தில் சித்தராமையா இப்படி பேசியிருக்கும் அதே வேளையில் மற்றொரு காரியத்தை செய்திருக்கிறார்.

ஆம், அயோத்தி ராம் மந்திர் நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறியவர், தற்போது தனது சொந்த ஊரில் ராமர் கோயில் கட்ட இருக்கிறார். இதற்கான அறிவிப்புகளை அவரே வெளியிட்டு இருக்கிறார். மைசூரு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் ஒரு பகுதியாக இருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, இதுபோன்ற கோயில்கள் எல்லா கிராமங்களிலும் கட்டப்பட்டுள்ளன என்றும், இதேபோன்ற ஒன்றை தனது சொந்த கிராமத்தில் கட்டி வருவதாகவும் கூறினார்.

- மலையரசு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close