[X] Close >

”என் அம்மா நயன்தாராவுக்கு டப்பிங் பேசினார்; இப்போது நானும் பேசுகிறேன்” – ரவீனா ரவி பேட்டி!

actress-raveena-ravi-special-interview

சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்’, ’ஈஸ்வரன்’, ’பூமி’  என ஒரே சமயத்தில் மூன்று பட ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்த உற்சாகத்தில் இருக்கிறார் நடிகையும் டப்பிங் ஆர்டிஸ்டுமான ரவீனா ரவி. ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவில் ஆரம்பித்து சமந்தா, மாளவிகா மோகனன், எமி ஜாக்சன், நிதி அகர்வால், அமலாபால், ராஷிகண்ணா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துக்கொண்டு வரும் ரவீனா ரவி, கவனத்தை ஈர்த்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ’காவல்துறை உங்கள் நண்பன்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து நடிப்பிலும் பாராட்டுக்களை குவித்தார்.


Advertisement

தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் வெளியிடும்  ‘ராக்கி’  படத்திலும் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார். ரவீனா ரவியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்…

இந்த ஆண்டின் துவக்கத்திலேயே மூன்று பட ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்தது எப்படியிருக்கிறது?


Advertisement

ரொம்ப சந்தோஷமா இருக்கு. 2020 ஆம் ஆண்டில் கொரோனா சூழலால் டப்பிங் பணியே இல்லாமல் மோசமாகப் போனது. ஒரு அலுவலகப் பணிக்குச் சென்றால் மாதம்தோறும் சம்பளம் கிடைக்கும். எங்களுக்கு அப்படி எதுவும் கிடையாது. கொரோனாவால் திரைக்குப் பின்னால் இருப்பவர்கள் ரொம்பவே அடிப்பட்டுத்தான் இருந்து வந்தோம். கடந்த ஆண்டின் சோகம் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி என் குரலில் தொடர்ச்சியா படங்கள் வருவதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

image

’டப்பிங் ஆர்டிஸ்ட்’ துறையில் நுழையும் ஆர்வம் வந்தது எப்படி?


Advertisement

எனது அம்மா, பாட்டி எல்லோருமே டப்பிங் ஆர்டிஸ்ட்தான். அதனால், இயல்பிலேயே எனக்கும், அந்த ஆர்வம் வந்துவிட்டது. சிறு வயதிலிருந்தே விளம்பரப் படங்களுக்குப் பேச ஆரம்பித்தேன். ஆனால், டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை எல்லாம் ஆகவேண்டும் என்று எதுவும்  முடிவு செய்யவில்லை. கல்லூரி சேரும்போது அம்மா ஸ்ரீஜா ரவி விஸ்காம் எடுத்துப் படிக்கச் சொன்னார். நான்தான்  வேறு துறையை தேர்ந்தெடுத்துப் படித்தேன். ஆனாலும், எல்லாம் தானாக அமைந்துவிட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என டப்பிங் பேசுகிறீர்களே? எப்படி இத்தனை மொழிகளை கற்றுக்கொண்டீர்கள்?

எனக்கு தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். வீட்டில் மலையாளம் பேசிக்கொள்வோம். படிக்கும் இடங்களில் தமிழ் பேசுவேன். அதனால், இரண்டு மொழிகளும் அத்துபடி. ஆனால், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, மராத்தி கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும்; புரியும். படத்தின் ரைட்டர்கள் உதவியுடன் மற்ற மொழிகளை புரிந்துகொண்டு டப்பிங் பேசுகிறேன். பழகிவிட்டால் அதுவும் எளிதுதான். தெலுங்கு ‘பிரேமம்’ படத்தில் மடோனாவுக்கும், ‘ஐ’ படத்தில் எமி ஜாக்சன் என பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளேன். தமிழிலும் இந்த இருவருக்கும் பல படங்களில் நான்தான் குரல் கொடுத்தேன்.

image

டப்பிங் ஆர்டிஸ்டாக இருந்துகொண்டு எப்படி ஹீரோயின் ஆனீர்கள்?

டப்பிங் பேசச்செல்லும்போது இயக்குநர்கள் பார்ப்பார்கள். நல்லா தமிழ் பேசும் பொண்ணு இருக்காங்க என்பது தெரியும். என் போட்டோவைப் பார்த்துவிட்டு இயக்குநர் சுரேஷ் சங்கையா ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நடிக்க கேட்டிருந்தார். எனது முதல் படம் அதுதான். நான் ரொம்ப கூச்ச சுபாவம். டப்பிங் நேரத்தில் பேசும்போது, அழும்போது  எல்லோரையும் வெளியே அனுப்பி விடுவேன். ஆனால், நடிக்க வந்ததும் மும்பை சென்று 3 மாதம் நடிப்புப் பயிற்சி கற்றுக்கொண்டேன். அது முடித்தபின்புதான் கூச்ச சுபாவம் போனது.

அருண் மாதேஸ்வரனின் ’ராக்கி’ படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறதே?

வசந்த் ரவி, பாரதிராஜா சார், ரோகிணி மேடம் நான் என நான்கே பேர்தான் நடித்திருக்கிறோம். எனக்கு காட்சிகள் ரொம்ப குறைவு என்றாலும் ரொம்ப ஸ்ட்ராங்கான ரோல். ஹீரோயின்  கிடையாது. வசந்த்தின் தங்கை கேரக்டர். கண்டிப்பாக நார்மல் கமர்ஷியல் படம் கிடையாது. இதுவரை வராத கதை. கேரக்டர்கள் பெரிதும் பேசப்படும். விக்னேஷ் சிவன் சாரும், நயன்தாரா மேடமும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் சார் ’நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க’ன்னு பாராட்டியிருந்தார்.

image

நீங்களும் ஹீரோயின் ஆகிவிட்டீர்கள். இப்போது, உங்கள் படங்களுக்கு  யார் டப்பிங் பேசினார்கள்?

(சிரிக்கிறார் )நானேதான்… நானேதான். வேறு யாரையாவது குரல் கொடுக்க சொல்லுங்கள் என்று சொன்னேன். இயக்குநர்கள்தான் என்னையே பேசச்சொன்னார்கள்.

உங்களுடைய குரல் எந்த நடிகையின் குரலுக்கு மேட்சாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்?

நயன்தாரா மேடம். மலையாளத்தில் ‘பாஸ்கர் தி ராஸ்கல், ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ என பல படங்களில் நயன்தாரா மேடமிற்கு குரல் கொடுத்துள்ளேன். படம் பார்த்துவிட்டு ’டப்பிங் சூப்பர்’ என்று நன்றி தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தார். அதற்கு முன்பு, எனது அம்மாதான் நயன்தாரா மேடமிற்கு எல்லா படங்களுக்கும் டப்பிங் பேசிவந்தார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ’பாடிகாட்’ படத்திற்கும் நயன்தாரா மேடமிற்கு அம்மா டப்பிங் பேசினார். தமிழில் நடிகை ஷாலினி, சுவலட்சுமி என பலருக்கும் பேசியுள்ளார். உஜாலா, டாடா ஸ்கை விளம்பரங்களுக்கும் நயன்தாரா மேடத்திற்கு நான் டப்பிங் பேசியிருக்கிறேன். டப்பிங் பேசுவது ரெகுலராக இருந்தாலும் வாய்ஸ் டெஸ்ட் நடக்கும். 30 லிருந்து 35 பேர் வரை பேசுவார்கள். அதில் எது பெஸ்ட் என்று பார்த்துவிட்டுதான் இயக்குநர் தேர்வு செய்வார். அதுவே பெரிய விஷயம்.

image

டப்பிங்கில் அழுவும் சீன் வந்தால் என்ன செய்வீர்கள்?

அழும் சீன் கஷ்டம் என்று சொல்ல முடியாது. ரொம்ப அழ மாட்டோம். குரல் அழும் படி மாற்றிக்கொள்ளவேண்டும். நயன்தாரா மேடமுக்கு முதன்முறையாக ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் பேசும்போது கொஞ்சம் கடினமாக இருந்தது. அப்படத்தில், ஒரு பெண்ணிற்கு அம்மாவாக நடித்திருப்பார். நான் அப்போது காலேஜ் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு தாய்க்கு முதிர்ந்த குரலில் பேசவேண்டும் என்றபோது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. குரலில் அந்த முதிர்ச்சியை கொண்டுவந்தேன். அனைவரும் பாராட்டினார்கள்.

மறக்க முடியாத பாராட்டு எது?

நான் டப்பிங் பேசிய முதல் படம் ‘சாட்டை’. அப்பட ஹீரோயின் மகிமா நம்பியாருக்கு கொடுத்திருந்தேன். அம்மாவும் அப்பாவும் பார்த்துவிட்டு கண் கலங்கி பாரட்டினார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். எப்போதும் அம்மா பாராட்டுவதுதான் எனக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

image

பெண்கள் டப்பிங் துறைக்கு வர என்ன செய்யவேண்டும்?

படங்களில் டப்பிங் பேசவேண்டும் என்றால் யூனியனில் மெம்பர்ஷிப் எடுக்கவேண்டும். அதில், பதிவு செய்துவிட்டு உறுப்பினராகவேண்டும். அதன்பிறகு, இயக்குநர்கள் அழைப்பார்கள். மற்றபடி டெக்னிக்கலாக டப்பிங்க் பேசுவதை ஈஸியாக கற்றுக்கொள்ளலாம். யுட்யூபில்கூட வகுப்புகள் இருக்கின்றன. வீட்டிலேயே பயிற்சிகள் செய்து கற்றுக்கொள்ளலாம்.  மற்றபடி கேரளாவுக்கெல்லாம் சென்று பேசினால் மூன்று நாளிலேயே பேசி முடித்துவிடுவோம். குறைவான காட்சிகள் என்றால், ஒரேநாளில் முடித்துவிடலாம். ஈஸ்வரன் படத்தில் ஒரே நாளில் முடித்துக்கொடுத்தேன்.

image

அடுத்து என்ன படம்?

’வட்டார வழக்கு’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ’டூலெட்’ படத்தில் நடித்த சந்தோஷ் இதில் நடிக்கிறார்.

- வினி சர்பனா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close