[X] Close >

'இதுவரை நிதி, நிர்வாக நெருக்கடி… இப்போது அரசியல் நெருக்கடி…' - புதுச்சேரி அரசு இனி?

Puducherry-Legislative-Assembly-Congress-Government-falling-Majority-to-run-the-Government-and-faces-floor-test

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுளள்து. அதற்கு காரணம், மூத்த அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருவதுதான். கடந்த சில நாட்களில் மட்டுமே ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியை நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்களின் கடிதத்தை புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கெல்லாம் முன்னதாக கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சியின் பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

“முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எங்களுடைய கூட்டணி கட்சிகளின் 14 எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலரிடம் மனுவாக கொடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார் புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. அவருடன் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர். 

இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் காங்கிரஸ் அரசின் பலத்தை நிரூபிக்க சொல்லி நிர்பந்தித்து வரும் சூழலில், “எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 


Advertisement

image

சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம்?

புதுச்சேரி சட்டப்பேரவை 30 தொகுதிகளை உள்ளடக்கியது. இது தவிர மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களும் உள்ளனர். ஆக மொத்தம் 33 உறுப்பினர்கள். இதில் ஆளும் காங்கிரஸ் அரசு, திமுக மற்றும் சுயேட்சையின் பலத்துடன் ஆட்சி செய்து வருகிறது. 


Advertisement

உழவர்கரை, இலாசுப்பேட்டை, காலாப்பட்டு, ராஜ் பவன், நெல்லித்தோப்பு (முதல்வர் நாராயணசாமியின் தொகுதி), அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், திருநள்ளார் என 10 தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த 2016 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தவிர உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி, நிரவி திருமலைராயன்பட்டினம் ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலில் திமுக உறுப்பினர்கள் வென்றிருந்தனர். அதுபோக சுயேட்சையாக வெற்றிபெற்ற மாகே தொகுதியின் உறுப்பினர் ராமச்சந்திரனும் ஆளும் அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 14.

எதிர்க்கட்சிகளின் பலம்?

புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பது நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (என்.ஆர். காங்கிரஸ்). இந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரியின் முன்னாள் முதல்வர். மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம், கதிர்காமம், இந்திரா நகர், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு ஆகிய ஏழு தொகுதிகளில் உறுப்பினர்களாக உள்ளனர். இது தவிர, எதிர்க்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக சார்பில் முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, உப்பளம் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதிகளில் உறுப்பினர்கள் உள்ளனர். கூடுதலாக பாஜகவின் மூன்று நியமன உறுப்பினர்களும் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளனர். ஆக மொத்தம் எதிர்க்கட்சியின் பலம் 14.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலம் இப்போதைக்கு சம நிலையில் உள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பாக கவனிக்க உள்ளார். அவர் ஆளுநராக பொறுப்பேற்றதும் சட்டப்பேரவை கூட்டப்படும் என தெரிகிறது. அப்படி நடந்தால் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், ஆட்சி களைக்கப்படும் என சொல்கின்றனர் உள்ளூர் அரசியல் விமர்சகர்கள்.

image

நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க முடியுமா?

“நியமன எம்எல்ஏக்கள் பொறுத்தவரை, அரசியலமைப்பு சட்டம் 239ஏ (1)ன்படி புதுச்சேரி சட்டப்பேரவை அமைக்கப்பட்டுள்ளது.  மக்களால் தேர்வான 30 எம்எல்ஏக்கள் தவிர மத்திய அரசு 3 நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. நியமன எம்எல்ஏக்களை நியமிப்பது, வாக்களிப்பது  விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவும், பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்கவும் உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அண்மையில் புதுச்சேரி வந்திருந்தபோது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருந்தார். 

“நிதி நெருக்கடி. நிர்வாக நெருக்கடி. இப்போது அரசியல் நெருக்கடி என இந்த ஐந்து ஆண்டுகளை ஒரு போராட்டமாகத்தான் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்துள்ளது. கடந்த தேர்தலில்  கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றாமல் வரும் தேர்தலை காங்கிரஸ் சந்திக்க உள்ளது. நியமன உறுப்பினர்களின் உரிமைதான் இப்போது ஆளும் அரசுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது” என்கிறார் மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் ஜெகன்நாதன். 

image

காங்கிரஸ் கட்சியில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள உறுப்பினர்களில் மூவர் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதில் மூத்த உறுப்பினர் ஒருவரது பெயரும் அடிபடுகிறது. 

“புதுச்சேரியில் கட்சி மாறுவது என்பதெல்லாம் காலம் காலமாக இருந்து வருகின்ற வழக்கம்தான். இங்கே கொள்கை, கட்சி, சின்னம் என்பதையெல்லாம் தாண்டி மக்கள் வேட்பாளர்களின் முகத்தை பார்த்துதான் வாக்களிப்பார்கள். அதனால் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறியவர் என்ற பாகுபாடுகளை எல்லாம் வாக்காளர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள்” எனவும் தெரிவித்துள்ளார் ஜெகன்நாதன். 

ஒட்டுமொத்தத்தில்  இப்போதே புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

- எல்லுச்சாமி கார்த்திக்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close