திஷா ரவியை அடுத்து வளைக்கப்படும் இருவர்... தீவிரமாகும் 'டூல்கிட்' வழக்கு!

திஷா ரவியை அடுத்து வளைக்கப்படும் இருவர்... தீவிரமாகும் 'டூல்கிட்' வழக்கு!

திஷா ரவியை அடுத்து வளைக்கப்படும் இருவர்... தீவிரமாகும் 'டூல்கிட்' வழக்கு!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான இணையச் செயல்பாடுகள் விவகாரத்தில், பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் மீதான கைது நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, உலக அளவில் கவனத்துக்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டு, 'டூல்கிட்' ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதைப் பகிர்ந்ததற்காக இப்போது பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டிருக்கிறார். திஷா மீது தேசத் துரோகம், வன்முறையைத் தூண்டிவிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெங்களூருவில் திஷா ரவியை கைது செய்த டெல்லி போலீஸ், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்றத்தில் உடைந்து அழுதார் திஷா.

இதற்கிடையே, திஷா ரவி கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, 'டூல்கிட்' தொடர்பாக மேலும் இரண்டு செயற்பாட்டாளர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை ஜாமீன் வழங்காத கைது வாரன்டுகளை இன்று பிறப்பித்துள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தானுக்கு எதிராக ஜாமீன் வழங்காத வாரண்டுகளை நாங்கள் பிறப்பித்துள்ளோம். எங்களின் சைபர் பிரிவு 'டூல்கிட்' வழக்கில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளது. நாங்கள் விரைவில் அவர்களை கைது செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு அதிகாரி `` 'டூல்கிட்' தயாரிப்பதில் ஜேக்கப் மற்றும் சாந்தனு ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலிஸ்தானி சார்பு கூறுகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தனர்" என்று கூறியிருக்கிறார். டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கையை அடுத்து நிகிதா ஜேக்கப் மும்பை நீதிமன்றத்தை நாடியுள்ளார். முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதுடன், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் நகலையும் அவர் கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரிக்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com