[X] Close >

PT Web Explainer: விஸ்வரூபம் எடுக்கும் பிட்காயின்... விபரீதங்களால் பெருகும் கவலைகள்!

Why-has-Tesla-invested-in-bitcoin-and-Impacts-on-Elon-musk-move

தனியார் கிரிப்டோகரன்ஸிகளை தடை செய்வது குறித்து மத்திய அரசு சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு எலான் மஸ்க் முதலீடு செய்திருக்கிறார்.


Advertisement

முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பிட்காயினில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், பிட்காயின் மூலமான பேமென்ட் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பால் பிட்காயின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பிட்காயின் விலை 45,500 டாலர் வரை சென்றிருக்கிறது. இந்த ஆண்டுக்கு மட்டும் சுமார் 57 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

2018-ம் ஆண்டு சுமார் 20,000 டாலர்கள் வரை பிட்காயின் மதிப்பு உயர்ந்தது. அதன் பிறகு சரியத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகும் முன்பு கூட சுமார் 5,000 டாலரில் இதன் விலை இருந்தது. ஆனால், தற்போது பல மடங்கு உயர்ந்து சுமார் 46,000 டாலரை நெருங்கிக் கொண்டிருக்கிறது.


Advertisement

image

பெரும் அளவுக்கு 'டெஸ்லா' பங்குகளை ஷார்ட் செய்திருக்கும் மைக்கேல் பரி, எலான் மஸ்கின் நடவடிக்கைக்கு வேறு காரணம் கூறுகிறார். டெஸ்லாவின் தரம் குறித்து சீன ஒழுங்குமுறை ஆணையம் டெஸ்லாவுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த சம்மன் குறித்து பொதுவெளியில் கருத்து உருவாகக் கூடாது என கருதிய மஸ்க், பிட்காயினில் முதலீடு செய்து சர்வதேச கவனத்தை வேறு பக்கம் திருப்பி இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

பிட்காயின் என்றால் என்ன?


Advertisement

பிட்காயின் என்பது விர்ச்சுவல் கரன்ஸி. இது பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. பிட்காயின் என்பது உருவாக்க கூடியது. தேவைப்பட்டால் ரூபாயை ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப அச்சிட்டுக்கொள்ளும். அதேபோல பிட்காயின் மைனிங் என்று சொல்லுவார்கள். அதற்கான தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும் என்று சொல்ல முடியாது. மொத்தம் 21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே உருவாக்க முடியும். இதில், 90 சதவீத பிட்காயின்கள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுவிட்டது. மிதமுள்ள காயின் விதிமுறைகளுக்கு ஏற்ப அடுத்துவரும் காலங்களில் உருவாக்கப்படும். இதற்கென சர்வதேச அளவில் மைனிங் நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் சந்தை மதிப்புக்கு ஏற்ப பணத்தை கொடுத்தால் பிட்காயின் கிடைக்கும்.

image

தங்கம் போல...

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கரன்ஸி இருக்கும். ஆனால், தங்கத்தை சர்வதேச கரன்ஸி என்று கூறுவார்கள். எந்த நாட்டிலும் தங்கத்தை விற்று பணமாக்க முடியும். அதேபோல தங்கம் என்பது மெட்டல், அதற்கென பிரத்யேக மதிப்பு என எதுவும் இல்லை. அதேபோல பிட்காயின் என்பது சர்வதேச கரன்ஸி. இதனையும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உருவாக்க முடியாது. ஆனால், சர்வதேச அளவில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஒரு நாட்டில் சமமாக இருப்பது என்ன? - மொழியா, கலாசாரமா, உணவு பழக்கவழக்கமா... இல்லை, மதமா? இதுபோல எத்தனை பதில்கள் கொடுத்தாலும் ஒன்றே ஒன்றுதான் சமம். அது அந்த நாட்டின் கரன்ஸி. ஆனால், அதற்கே சிக்கல் என்னும்போதுதான் சர்வதேச அளவில் உள்ள முக்கிய நாடுகள் எதிர்வினையாற்றுகின்றன. டாலருக்கு ஃபெடரல் ரிசர்வ் பொறுப்பு, ரூபாய்க்கு ரிசர்வ் வங்கி பொறுப்பு. இதுபோல ஒவ்வொரு நாட்டின் கரன்ஸிக்கும் மத்திய வங்கி பொறுப்பேற்கும். ஆனால், பிட்காயினுக்கு யார் பொறுப்பு என்னும் கேள்வி அனைத்து அரசுகளுக்கும் இருக்கிறது. அதனாலே பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகள் மீது அரசுகள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் உள்ளன.

இதன் காரணமாகவே கிரிப்டோ கரன்ஸிகளுக்கு தடைவிதிப்பது மற்றும் சொந்த டிஜிட்டல் கரன்ஸியை உருவாக்குவது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. 2013-ம் ஆண்டு முதல் கிரிப்டோகரன்ஸிகளுக்கு மாற்றுவழியை கண்டறிய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இருந்தாலும் இதுவரை தெளிவான திட்டத்தை மத்திய அரசு வெளியிடவில்லை. 2018-ம் ஆண்டு தற்காலிக தடைவிதிக்கப்பட்டது. ஆனால், 2020-ம் ஆண்டு இந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.

இந்த நிலையில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கிரிப்டோகரன்ஸியை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என வரைவு விதிமுறைகளை இந்தியா உருவாக்கி இருக்கிறது. அதேபோல #IndiaWantsCrypto என்னும் ஹாஷ்டாக்கும் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரிஸ்க் என்ன?

பிளாக்செயின் தொழில்நுப்டத்தில் செயல்படுவதால் யார் கொடுக்கிறார், யார் பெறுகிறார் என்பது குறித்த தகவல்கள் தெரியாது. அதாவது எதற்காக பிட்காயின் பயன்படுத்தப்படுகிறது அரசுக்கு தெரியாது. 'பிட்காயினை பயன்படுத்தி வரும் காலத்தில் யாராவது அணு ஆயுதங்கள் வாங்கினால், எப்படி கட்டுப்படுத்து எப்படி கண்டறிவது?' என ஜெரோதா நிறுவனத்தின் தலைவர் நிதின்காமத் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

image

பிட்காயினுக்கு என்று பிரத்யேக மதிப்பு ஏதும் கிடையாது. பிட்காயினை வாங்க வேண்டும் என மக்கள் விரும்புவதை தவிர வேறு காரணங்கள் கிடையாது என பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் ஆண்ட்ரு பெய்லி தெரிவித்திருக்கிறார். மேலும், பேமென்டுக்காக பிட்காயினை பயன்படுத்துவது எனக்கு பதற்றமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் முன்னாள் தலைவரும் தற்போதைய ஜோ பைடன் அமைச்சரவையில் பங்கு வகிக்கும் ஜெனட் ஏலனும் இதுகுறித்த அச்சத்தை தெரிவித்திருக்கிறார். வரும் காலத்தில் கிரிப்டோகரன்ஸியில் நடக்கும் முறைகேடுகள் பெரும் சிக்கலாக உருவாக கூடும். தகவல் திருட்டு, அந்நிய செலாவணி மோசடி, நிதி மோசடி மற்றும் தீவிரவாத செயல்களுக்கு இதன் மூலம் பணம் செல்லலாம் என அச்சம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், புதுமை என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, தவறான செயல்களை யாரும் தெரியாமல் செய்வதற்காக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில் ஒரு பிட்காயின் ஒரு லட்சம் டாலரை தொடும் என்னும் கணிப்புகளை பார்க்க முடிகிறது. ஒரு முதலீட்டின் மீதான ரிஸ்க் என்ன என்று தெரியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய ரிஸ்க்.

பிட்காயின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரமிது.

- வாசு கார்த்தி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close