[X] Close >

சென்னை டெஸ்ட் போட்டியிலிருந்து இந்தியா கற்றுக்கொண்டது என்ன ? - விரிவான அலசல்

What-lessons-that-team-India-learned-from-the-loss-at-Chennai-against-India

சென்னை டெஸ்ட் போட்டியிலிருந்து இந்தியா கற்றுக்கொண்டது என்ன ? - விரிவான அலசல்


Advertisement

இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட்டு விட்டார்களா?

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பெருமையுடன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சென்னையில் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது பல கிரிக்கெட் அணிகளுக்கும் இயலாத காரியம். அதுவும் கடந்த முறை இங்கிலாந்து இங்கு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இப்போதும் அதேபோல இங்கிலாந்தை வீழ்த்திவிடலாம் என கேப்டன் கோலி தவறான கணக்கு போட்டுவிட்டாரா என தெரியவில்லை.


Advertisement

image

ஏனென்றால் ஆஸ்திரேலியாவை எப்படி அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது போல, இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டுதான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி. அது மட்டுமல்லாமல் ஆசிய நாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணிகளில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. அதாவது அந்த அணி மொத்தம் ஆசியாவில் 30 வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டார்களா கோலி குழுவினர் என தெரியவில்லை. ஏனென்றால் இந்தப் போட்டியின் அணி தேர்வே அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை.

குல்தீப் யாதவை தேர்வு செய்யாதது ஏன்?


Advertisement

சென்னை சேப்பாக்கம் மைதானம் பொதுவாகவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதுதான். அதனால் இந்திய அணி மூன்று முழு நேர ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது நல்ல முடிவுதான். ஆனால் அதில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தேர்வு செய்தது சரி என்றாலும் ஏன் குல்தீப் யாதவுக்கு பதிலாக ஷபாஸ் நதீமை சேர்த்தார்கள் என்பது ரவி சாஸ்திரிக்குதான் வெளிச்சம். ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லாத குறையை 'சைனா மேன்' ஸ்பின்னரான குல்தீப் யாதவால்தான் தீர்க்க முடியும்.

image

ஒரு காலத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு அஸ்வினை காட்டிலும் குல்தீப் யாதவ்தான் முதல் சாய்ஸ் என்று சொன்ன ரவி சாஸ்திரி. இப்போது பல டெஸ்ட் தொடர்களில் அவரை பெவிலியின் பெஞ்சிலேயே உட்கார வைத்துவிட்டார். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை குறையொன்றும் இல்லை. சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை முதல் 3 நாள்கள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும். அடுத்த இரண்டு நாள்கள் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கக் கூடியவை. பல்லாண்டு காலமாக சேப்பாக்கம் ஆடுகளத்தில் மாற்றம் ஏதுமில்லை.

பீல்டிங்கில் சொதப்பிய இந்தியா

அதனால் இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாகவே பந்துவீசினர் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனாலும் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது ஏகப்பட்ட சொதப்பல் செய்தனர் இந்திய பீல்டர்கள். அதுவும் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சில எளிதான கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டனர். இந்தப் போட்டியை பொறுத்தவரை பவுலிங்கில் பெரிய குறை ஏதுமில்லை என்றாலும் மிகப்பெரிய குறை இந்திய பேட்டிங்கில் இருக்கிறது. அதவும் இரண்டு இன்னிங்ஸிலும் இந்தியாவுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.

image

சொதப்பும் ரோகித் சர்மா , ரகானே:

இதில் ரோகித் சர்மாவை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை முதல் இன்னிங்ஸ் 6, இரண்டாவது இன்னிங்ஸில் 12. இதில் சுப்மன் கில் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினாலும் அரை சதம் அடித்த பின்பு அதை பெரிய ஸ்கோராக்க தெரியாமல் அவசரப்பட்டு ஷாட்டாடி ஆட்டமிழந்துவிடுகிறார். சுப்மன் கில்லுக்கு சிறு சிறு திருத்தம் சொன்னால் போதுமானது. ஏனென்றால் அவர் மிகப்பெரிய நம்பிக்கை அளிக்க கூடியவராக இருக்கிறார். ஆனால் ரோகித் சர்மாவை வைத்து என்ன செய்வது என்பதுதான் அணி நிர்வாகத்துக்கு குழப்பமாக இருக்கும். எனினும் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் ரோகித் களமிறங்குவார் என்றே தெரிகிறது.

அதேபோல ரஹானேவின் பேட்டிங்கும் கவலைக் குறியதாகவே இருக்கிறது. பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் சதமடித்துவிட்டால் அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடுவார்கள். ஆனால் அது என்ன பிரச்னையோ ரஹானேவுக்கு என தெரியவில்லைய. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரஹானே. அதன் பின்பு 4,22,24,37,1,0 ரன்களை எடுத்துள்ளார். எனவே அவரின் பேட்டிங்கும் கவலை தரும் விதமாகவே இருக்கிறது. ஏனென்றால் டெஸ்ட் போட்டிக்கு 5 ஆவது பேட்ஸ்மேன் மிக முக்கியமானவர். அதுவும் சென்னை போன்ற ஆடுகளத்தில் விளையாட விவிஎஸ் லஷ்மண் போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்ததால் பல போட்டிகளின் தோல்வியை இந்தியா தவிர்த்து இருக்கிறது.

image

அதனால் அடுத்தப் போட்டியில் ரஹானே "பார்முக்கு" திரும்புவது அவசியமாகிறது. மேலும் அணியிலும் மாற்றம் மேற்கொள்ளப்படுவதும் அவசியமாகிறது. அடுத்தப் போட்டியில் ஷபாஸ் நதீமுக்கு பதிலாக குல்தீப் யாதவையும். இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக முகமது சிராஜையும் களமிறக்கலாம். இஷாந்த் சிறப்பாகதான் பந்துவீசினார். ஆனால் பல நாள் காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பவர் என்பதால் ஓய்வளிக்கலாம். முகமது சிராஜ் நல்ல பார்மில் இருப்பதால் சென்னை ஆடுகளத்தில் அவருடைய பந்துவீச்சு எடுபடும். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் ஆடுகளத்தில் பெரிய மாற்றம் இருக்காது.

வியூகங்களை மாற்றுங்கள்:

ஆனால் இந்தியா அடுத்தப் போட்டியில் வெற்றிப்பெற தன்னுடைய சில வியூகங்களை மாற்ற வேண்டியிருக்கிறது. சென்னை ஆடுகளம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்குதான் புதியது, இதுபோன்ற 'லோ பவுன்ஸ்' ஆடுகளங்கள் இந்தியா முழுவதுமே இருக்கிறது. இதுபோன்ற களங்களில் பலரும் விளையாடிதான் தேசிய அணியில் இடம்பிடித்து இருக்கிறார்கள். எனவே இதுபோன்ற பேட்டிங் சொதப்பல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மேலும் இங்கிலாந்தை எளிதான அணியாக கணித்ததே சென்னையில் இந்திய அணி கற்றப்பாடமாக இருக்கும். எனினும் இந்தியா வெற்றிப்பெறாமல் சென்னையை விட்டு செல்லாது என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close