[X] Close >

PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்

The-people-of-Tamil-Nadu-do-not-like-a-government-that-operates-remotely-Rahul-Gandhi

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்று தொண்டர்களால் அழைக்கப்படும் ராகுல் காந்தி தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களை சந்தித்து வந்தார்.


Advertisement

இந்நிலையில், 'புதிய தலைமுறை'-யின் 'தலைவர்களுடன் ஒருநாள்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் எழுப்பிய கேள்விகளுக்கு, ஒரே வார்த்தை, ஒரே வரி, மற்றும் விளக்கமான பதில்களை அளித்தார் ராகுல் காந்தி. அதன் ஒரு பகுதி...

image


Advertisement

நீங்கள் தமிழகத்தில் மத்திய அரசு பற்றி அதிகம் பேசுகிறீர்கள் மாநிலத்தை பற்றி ஏன் பேசவில்லை?

"மாநில அரசு, மத்திய அரசின் ஒரு இணைப்புதான். மாநில அரசு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மாநில அரசை பற்றி அதிகம் பேசவில்லை. தமிழகத்தில் யாரை வேண்டுமானலும் கேட்டுப்பாருங்கள். தமிழக அரசை ஆர்எஸ்எஸ் நரேந்திர மோடி கூட்டணி மிரட்டிக் கொண்டிருந்தபது தெளிவு. இது குறித்து மக்கள் மனதில் எந்த குழப்பமும் இல்லை."

தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் சுதந்திரமாக செயல்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி என்னிடம் கூறினார். மாநில அரசுக்கு எதிராக திட்டமிட்ட பரப்புரை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்?


Advertisement

"அது உண்மையானல், தமிழகத்தில் மிக அதிகம் விரும்பப்படாத பாஜகவுடன் அவர் ஏன் கூட்டணியில் இருக்கிறார். அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்க அவர் ஏன் நிர்பந்திக்கப்படுகிறார். தமிழகத்தில் யாரை கேட்டாலும் பாஜகவை எதிர்ப்பதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட சூழலில், தான் பாஜகவுடன் நிற்கப் போவதில்லை எனக் கூறுவதில் அவருக்கு என்ன சிரமம்."

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கூட்டணி 39-ல் 38 இடங்களில் வெற்றிபெற்றது. 2021 தேர்தலில் இதேபோன்றதொரு வெற்றி சாத்தியமா?

"நரேந்திர மோடியால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு அரசை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என நான் கூறியுள்ளேன். எனவே, மக்களவைத் தேர்தல் போன்றதொரு முடிவை எதிர்பார்க்கலாம். எங்கள் வாழ்வை கட்டுப்படுத்தலாம் என நினைக்கும் ஒரு நபர் எங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் இப்போதும் உள்ளது."

புதுச்சேரியில் உங்கள் கூட்டணியில் சிறிது கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இது தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

"திமுகவுடன் எங்களுக்கு மிக நல்ல உறவு இருக்கிறது. சில சிறிய பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அது கூட்டணியை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை."

image


கடந்த தேர்தலில் நீங்கள் 41 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். இம்முறை காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்?

"இதை ஊடகத்தில் விவாதிப்பது முறையாக இருக்காது. தொலைக்காட்சியில் இதை விவாதிப்பது அவமதிக்கும் செயலாக அமைந்துவிடும்."

உங்கள் அன்னை சோனியா காந்திக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் நல்ல புரிதல் இருந்தது?

"எனக்கும் நல்ல புரிதல் இருந்தது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். சொல்லப்போனால் கருணாநிதியுடனான எனது கடைசி சந்திப்பு எனக்கு மிகவும் ஊக்கமளித்த ஒரு சந்திப்பு."

ஆனால் அவர் உயிருடன் இருந்த காலத்தில் நீங்கள் தமிழகம் வந்தபோது அவரை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக விமர்சனங்கள் இருந்தனவே?

"இது சரியானதல்ல. அவரை கடைசி முறை சந்தித்தபோது அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருப்பதை உணர்ந்தேன். ஆனால் நேரம் குறைவாக இருந்ததால் வேதனையடைந்தேன். நான் அறிந்துகொள்ள விரும்பும் தமிழக மக்களின் உணர்வுகளை அவர் நன்கு அறிந்திருந்தார். இதில் அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அது நடைபெறாததால் நான் ஏமாற்றம் அடைந்தேன்."

மு.க.ஸ்டாலினுடன் அதே போன்றதொரு புரிதல் இருக்கிறதா?

"ஸ்டாலினை எனக்கு மிகவும் பிடிக்கும்."

உங்கள் கூட்டணி அப்படியே முழுமையாக இருக்கிறது என சொல்ல முடியுமா?

"ஆமாம்."

நீங்கள் ஒரு மாதத்தில் தமிழகத்திற்கு இரண்டு முறை வருகை தந்திருக்கிறீர்கள் இது கட்சியை வலுப்படுத்தும் முயற்சியா அல்லது திமுகவிடமிருந்து கூடுதல் தொகுதிகளை பேரம்பேசும் முயற்சியா?

"நான் தமிழகத்திற்கு அடிக்கடி வரப்போகிறேன். எனக்கு இங்குவர பிடிக்கிறது என நான் முதலிலேயே கூறியிருக்கிறேன். பாஜவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பாஜக படுதோல்வி அடைவதை உறுதி செய்வது எங்களது கடமை. பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது சரியான வார்த்தையும் இல்லை."

image

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பின் தமிழகத்தில் சாதகமான சூழல் நிலவுவதாக பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாக கருதுகிறீர்களா?

"காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு தனி இடம் உண்டு. பலதரப்பட்ட கொள்கைகளுக்கு இடையில் நாங்கள் பலமாக இருக்கிறோம். எனவே, எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன். காங்கிரஸில் ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது. தமிழக மக்களுக்கு நாங்கள் நிறைய செய்ய முடியும்."

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் ஆட்சியமைப்போம் என்கிறது பாஜக. அதுபோல காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது இலக்கு இருக்கிறதா?

"தற்போது பாஜகவை வீழ்த்துவதுதான் எங்கள் இலக்கு. நாட்டுக்கே பேராபத்தாக கருதும் பாஜகவின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம். 20 ஆண்டுகளுக்கு பிறகோ, 50 ஆண்டுகளுக்கு பிறகோ என்ன நடக்கும் என்பதை பற்றி கவலையில்லை. 50 ஆண்டுகளுக்கு பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும்."

எதை செய்யவதாக இருந்தாலும் அதற்கு அதிகாரம் தேவைதானே?

"அதிகாரம் முக்கியமானதுதான், அதே போன்று உண்மையும் முக்கியமானதுதான். உண்மைதான் அடித்தளம் என கருதுகிறேன்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை இழந்தீர்கள். இங்கு முன்னேற வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறீர்களா?

"தமிழகத்தில் காங்கிரஸ் கடசிக்கு பெரிய இடமும் வாய்ப்பும் இருப்பதாக கருதுகிறேன். எங்களது முதல் குறிக்கோள் ஆர்எஸ்எஸ்-ஐ தோல்வியடைய வைப்பதுதான்."

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் உங்கள் கூட்டணிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும்?

"தமிழகத்திற்கு ஒரு தொலைநோக்கு திட்டத்தை அளிக்க விரும்புகிறேன். உற்பத்தித் துறையில் தமிழகம் ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்த காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். ஏழைகளுக்கு ஆதரவான ஒரு அரசு வேண்டும். நெசவாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரின் நலனிலும் அக்கறை செலுத்தம் ஒரு அரசு வேண்டும் என விரும்புகிறேன். இது ஏழைகளின் நலனுக்காக உழைக்கும் அரசு என மக்கள் நினைக்கும் ஒரு அரசை உருவாக்க விரும்புகிறோம். இது தமிழகத்துக்கான காங்கிரஸ் கட்சியின் பார்வை."

பிஜேபியினர் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கத்தை ஏற்கெனவே முன்னெடுத்துள்ளனர்?

"காங்கிரஸ் மத்தியப் பிரதேசம், கோவா, தேர்தல்களில் வெற்றிபெற்றது. ஆனால் அவர்கள் பணபலத்தை பயன்படுத்தி இந்த அரசுகளை வீழ்த்தினர். ராஜஸ்தானில், வடகிழக்கில் எங்களது அரசுகளை வீழ்த்த மோசமான வழிமுறைகளை பின்பற்றினர். நான் ஏற்கெனவே சொன்னபடி அவர்கள் அரசியல் அமைப்புகளை கைப்பற்றிவிட்டனர்."

பொருளாதார கொள்கைகள், வெளியுறவுக் கொள்கை என பலவற்றிலும் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒத்திருக்கின்றனவே?

"இல்லவே இல்லை. காங்கிரஸ் எங்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக கூறியதில்லை.”

ஜி.எஸ்.டி காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டது தானே?

"பண மதிப்பிழப்பு நடவடிக்கையை புத்தியுள்ள எந்த அரசும் நினைத்து பார்த்திருக்காது. நாங்கள் முன்வைத்த ஜிஎஸ்டி பாஜகவின் ஜிஎஸ்டியிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டது. நாங்கள் ஒரே வரி, மிகக் குறைந்த வரி எனக் கூறினோம். அவர்கள் உங்களுக்கு 5 வரிகளை அளித்துள்ளனர். எனவே, காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகள் பாஜகவின் பொருளாதாரக் கொள்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை."

இந்த நேர்காணலின் முந்தையப் பகுதி > PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close