[X] Close >

வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு

Sharing-the-experience-of-the-doctor-who-gave-the-covid19-vaccine

“ஊசி போடப்பட்ட 48 மணி நேரங்களுக்குப் பிறகு எங்கள் அனைவருக்கும் இருந்த சிறு அசெளகிரியங்கள் நீங்கின. அனைவரும் எந்த பிரச்சினையும் இன்றி நலமுடன் இருக்கிறோம்” என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.


Advertisement

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கல் தொடங்கி விட்டது. இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடந்த 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இந்தத் தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், அச்சமும் நிலவி வருகிறது. இதுதொடர்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிவகங்கையில் பொதுநல மருத்துவராக பணியாற்றி வரும் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:-  


Advertisement

image

‘’கடந்த 18-ம் தேதி பணி நிமித்தமாக திருச்சி மாவட்டத்திற்கு சென்றிருக்கையில் அங்குள்ள சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்டேன்.

கோவிஷீல்டு தடுப்பூசி எனது இடக்கை தோளில் தசை வழி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அரை மணிநேரம் மேற்பார்வை அறையில் தங்கியிருந்தேன். தடுப்பூசி பெற்ற பிறகு அரை மணிநேரத்திற்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டு வந்தேன்.


Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் எனது தந்தையும், திருநெல்வேலி மாவட்டத்தில் எனது மனைவியும் கோவிஷீல்டு தடுப்பூசி அதே நாளில் பெற்றனர். தடுப்பூசி பெற்ற அன்று முதல் 24 மணிநேரங்களுக்கு ஊசி போட்ட இடத்தில் லேசான வலி தவிர எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

எனது தந்தைக்கு ஊசி போட்ட அன்று இரவு எனது தந்தைக்கு லேசான தலைவலி மற்றும் உடல் சோர்வு மட்டும் இருந்தது. பாராசிட்டமால் மாத்திரை மட்டும்  ஒன்று விழுங்கினார். தலைவலி சரியானது நன்றாக உறங்கி விட்டார். அடுத்தநாள் காலை அவருக்கு தலைவலி இல்லை.

மனைவிக்கு முதல் 24 மணி நேரத்தில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. எனக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாள் மாலையில் எனக்கு உடல் சோர்வும் உடல் வலியும் இருந்தது. பாராசிட்டமால் 650 மில்லிகிராம் எடுத்தேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் வலி தீர்ந்து விட்டது.

இதே நேரத்தில் எனது மனைவிக்கு லேசான காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டது. அவரும் பாராசிட்டமால் 650 மில்லிகிராம் மாத்திரை எடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்ததில் குணமானது. எனது தந்தைக்கு ஊசி போட்ட இடத்தில் வலியும் லேசான வீக்கவும் இருந்தது.

ஊசி போடப்பட்ட 48 மணி நேரங்களுக்குப் பிறகு எங்கள் அனைவருக்கும் இருந்த சிறு அசெளகிரியங்களும் நீங்கின. இன்று ஊசி போட்டுக்கொண்டு எங்கள் அனைவருக்கும் 72 மணிநேரங்கள் கடந்துவிட்டன. அனைவரும் எந்த பிரச்சினையும் இன்றி நலமுடன் இருக்கிறோம்.

தடுப்பூசி குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்ட எங்களது அனுபவத்தை விளக்கியுள்ளோம். இது எங்களைப்போன்ற பல முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியைப் பெற உந்து சக்தியாக அமையும் என்ற நோக்கத்துடன் பகிர்கிறோம்'' என்றார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close