[X] Close >

மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கா, விரக்தியா... நந்திகிராம் போட்டி ஏன்? - ஓர் அலசல்

Masterstroke-or-desperation-and-calculated-move--Why-Mamata-will-fight-from-Nandigram

அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது மேற்கு வங்க மாநிலம். இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் நடந்த பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ''என் ஆத்மா என்னிடம், நந்திகிராம் உனக்கு அதிர்ஷ்டமான இடம். எனவே, நீ நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்கிறது. ஆம்... நான் சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். நந்திகிராம் எனது அக்கா. பவானிபூர் (மம்தாவின் தற்போதைய தொகுதி) எனது தங்கை. சாத்தியம் இருந்தால் நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவேன்.


Advertisement

திரிணாமுல் காங்கிரஸில் இருந்தவர்கள், இங்கு பதவி சுகம் அனுபவித்துவிட்டு, வேறு கட்சிக்குச் செல்வதை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. அவர்களால், திரிணாமுல் உருவாக்கப்படவில்லை. கொள்ளையடித்த பணத்தை, சொத்துகளை பாதுகாக்கவே இப்படி கட்சி மாறுகிறார்கள் சிலர். இவர்கள் மேற்கு வங்கத்தை பாஜகவிடம் விற்க முயற்சித்து வருகிறார்கள். நான் இருக்கும் வரை அனுமதிக்கமாட்டேன்" என சமீபத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவரும், நந்திகிராம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுவேந்து அதிகாரியைக் குறிவைத்து ஆவேசமாக பேசினார்.

மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியை தேர்ந்தெடுக்க காரணம், சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மீதான எதிர்ப்பு. மம்தா பானா்ஜி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை வகித்து வந்த சுவேந்து அதிகாரி, சமீபத்தில் அப்பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகி, கடந்த டிசம்பர் மாதத்தில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு செக் வைக்கும் விதமாகவே மம்தா நந்திகிராம் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள்.


Advertisement

ஆனால், அதையும் தாண்டி சில அரசியல் கணக்குகள் இருப்பதாக கூறுகிறார்கள் மேற்கு வங்க நிலவரம் அறிந்தவர்கள். அதற்குமுன்பு நந்திகிராம் தொகுதியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

image

மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தன இடது முன்னணி கட்சிகள். அவர்களின் சரிவுக்கு வித்திட்டது சிங்கூர் மற்றும் நந்திகிராம் சம்பவங்கள். சில ஆண்டுகளுக்கு முன் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடது முன்னணி அரசு சிங்கூர் மற்றும் நந்திகிராம் பகுதியில் ஏற்கெனவே மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட நிலங்களைக் கையகப்படுத்தி கார்ப்பரேட்கள் தொழிற்சாலை அமைப்பதற்கு கொடுக்க முயன்றது. விவசாயிகளிடம் மிகவும் இரக்கமற்ற முறையில் நிலம் கையகப்படுத்தியது அப்போதைய கம்யூனிஸ்ட் அரசு.


Advertisement

அதுவரை கம்யூனிஸ்ட்களை சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு எதிர்த்து வந்த மம்தாவுக்கு சிங்கூர் மற்றும் நந்திகிராம் பிரச்னைகள் மிகப்பெரிய ஆயுதங்களாக மாறின. அதை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார் மம்தா. கைமேல் பலன் கிடைத்தது. போராட்டத்தை தொடர்ந்து நடந்த வன்முறையில் 2007 நவம்பர் 25-ல் நந்திகிராமில் ஆளும் சி.பி.எம் தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அது கிளர்ச்சியாக வெடித்தது. இதுவே, மம்தாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இந்தப் போராட்டங்களில் மம்தாவுக்கு அனைத்துமாக இருந்தவர்தான் சுவேந்து அதிகாரி. இந்தத் தொகுதியில்தான் கடந்த மாதம் வரை சுவேந்து எம்எல்ஏவாகவும் இருந்தார்.

சமீபகாலமாக மம்தாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதை அடுத்து, சுவேந்து திரிணாமுல் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தாவின் 'அரசியல் கணக்கு'!

வெறும் சுவேந்து மற்றும் பாஜக எதிர்ப்பு என்ற மனநிலையில் மட்டும் மம்தா நந்திகிராம் தொகுதியை தேர்ந்தெடுக்கவில்லை. கடந்த இரண்டு முறையாக பவானிபூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் மம்தா. 2016-ஆம் ஆண்டில், மம்தா இந்த தொகுதியில் ஏறக்குறைய 48 சதவீத வாக்குகளைப் பெற்றார். இது 2011-ல் 77.46 சதவீதமாக இருந்தது. இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தல் மம்தாவுக்கு ஓர் எச்சரிக்கையை கொடுத்தது.

பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி பகுதியில் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் எதிர்க்கட்சிகளுடன் போட்டிபோட்டது. மேலும், அருகிலுள்ள ராஷ்பேரி பிரிவில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியது திரிணாமுல். இந்த வித்தியாசம் மம்தா பானர்ஜியை சற்று எச்சரிக்கையாக ஆக்கியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் பிஸ்வநாத் சக்ரவர்த்தி கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில், ''நந்திகிராமில் சுமார் 30 சதவீத சிறுபான்மையினரின் வாக்குகள் உள்ளன. நந்திகிராம் நிச்சயமாக ஓர் ஆச்சரியமான நடவடிக்கை. ஆனால் அவர் பவானிபூரை விட எளிதான தொகுதிக்கு இடம் பெயரக்கூடும் என்று நாங்கள் கிட்டத்தட்ட கணித்தோம், ஆனால் நடக்கவில்லை. பவானிபூரின் மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெங்காலி அல்லாதவர்கள், குறிப்பாக குஜராத்திகள். பவானிபூரில் உள்ள பல வெளிமாநிலத்தவர்களை வெளியாட்கள் அல்லது அந்த பகுதியில் வசிக்கும் வங்காளரல்லாதவர்களுக்கு எதிரான சொல்லாடல்களால் அந்நியப்படுத்தி வருகிறார் மம்தா. இது அவருக்கு பின்னடைவை தரக்கூடும்" என்றார்.

வேறு சில அம்சங்களும் உள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர் மாவட்டங்களில் மம்தா பானர்ஜி திரிணாமுலின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பார். சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த சுவேந்து பூர்பா மெடினிபூர் மாவட்டத்திலிருந்து வந்தவர் என்றாலும், அவரது அரசியல் செல்வாக்கு முர்ஷிதாபாத், மால்டா, ஜார்கிராம், புருலியா, பாங்குரா மற்றும் பிர்பூம் ஆகிய தென் மாவட்டங்களிலும் வெகுவாக இருக்கிறது. 2010 காலகட்டங்களில் திரிணாமுல் கட்சியை இந்த மாவட்டங்களில் சென்று சேர்த்ததில் முக்கியப் பங்கு சுவேந்துவுக்கு உண்டு. இதனால்தான் அவரின் செல்வாக்கை உணர்ந்து தற்போது அவரை கட்சியில் சேர்த்தது பாஜக. அதற்கேற்பவே குறைந்தது 35 தொகுதிகளையாவது பாஜகவுக்கு கொண்டு வருவதாக சுவேந்து சமீபத்தில் கூறினார்.

image

2019 நாடாளுமன்றத் தேர்தலில், வட பெங்காலில் ஒரு சீட் கூட திரிணாமுல் கட்சி ஜெயிக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சுவேந்து பாஜகவில் இணைந்துள்ளது தெற்கு பெங்காலில் திரிணாமுல் அடிவாங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதனை தடுக்கவே மம்தா இப்படி ஒரு முடிவெடுத்துள்ளார்.

விரக்தி அல்லது மாஸ்டர் ஸ்ட்ரோக்?

மம்தா தொகுதியை மாற்றுவதை "பதற்றம் மற்றும் விரக்தியின் அடையாளம்" என்று பாஜக விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. ''நந்திகிராமில் உள்ள கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இப்போது மம்தா கட்சியில் சேர்ந்துள்ளனர். அப்படியானால் நீதி எங்கே? தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் தேர்தலின்போது அவர்களுக்கு பதில்களைக் கொடுப்பார்கள்" என பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா கூறியிருக்கிறார்.

பாஜக இப்படி விமர்சித்தாலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் இதை ஒரு "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்று பாராட்டி வருகிறார்கள். அமைச்சர் சுப்ரதா முகர்ஜி, ''நந்திகிராம் மம்தாவின் ஓர் உணர்ச்சிபூர்வமான இடம். நந்திகிராம் மற்றும் சிங்கூருடன் எல்லாவற்றையும் விட அதிகமாக இணைந்திருக்கிறார். பலர் பல விஷயங்களை ஊகிப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், முதல்வர்கள் மற்றும் பிரதமர் கூட ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தல்களை எதிர்த்துப் போராடிய சம்பவங்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

எது எப்படியோ, எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சமீபகாலமாக மற்ற கட்சிகளுக்கு தாவுவது உள்ளிட்ட காரணங்களால் கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் சோர்வடைந்து போயிருந்தனர். பாஜகவை எதிர்த்து மம்தா தீவிர அரசியல் செய்யவில்லை என்று அவர்கள் குமுறிக்கொண்டிருந்தனர். ஆனால், மம்தாவின் இந்த திடீர் அரசியல் ஆட்டம் அவர்களுக்கு எழுச்சியைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது மறுப்பதற்கில்லை என்கிறார்கள் மேற்கு வங்க அரசியல் நோக்கர்கள்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Print

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close