[X] Close >

ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை

Eeswaran-Movie-Review--Entertainment-impact-on-Suseenthiran-and-actor-Simbu-film

பொதுவாகவே மசாலாப் படங்களில் நாம் எதிர்பார்த்து செல்வதெல்லாம், இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு மட்டுமே. வேறெந்த கவலையும் புகுந்துவிடாமல் வெளியுலகை மறந்துவிட்டு சிறிது மகிழ்ந்து, கைதட்டி, விசிலடித்து ரசிக்கவைக்கும் மசாலாப் படங்கள் தரும் இன்பம் சுவாரஸ்யமானது. அதிலும் பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் வெளிவரும் படங்களுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு உண்டு. ஏற்கெனவே சந்தோஷ மனநிலையில் இருக்கும் ஒருவரை இன்னும் அதிகமாக சந்தோஷப்படுத்தவேண்டும். அப்படி பொங்கல் அன்று வெளியாகியிருக்கும் சிலம்பரசன் சற்று நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து வெளிவந்திருக்கும் 'ஈஸ்வரன்' திரைப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - அலசுவோம் வாருங்கள்.


Advertisement

ஒரு பெரிய குடும்பம். அந்தக் குடும்பத் தலைவர் பாரதிராஜா. சந்தர்ப்ப சூழ்நிலையால் குடும்ப உறுப்பினர்களுக்குள் எழும் ஒரு சண்டையின் காரணமாக அவர்கள் அனைவரும் கிராமத்துக்கு வருவதை பல வருடங்களாக தவிர்த்துவிடுகின்றனர். யாருமில்லா தனிமையில் உழலும் பாரதிராஜாவை புதிதாக அந்த ஊருக்கு வரும் சிலம்பரசன் அன்போடு கவனித்துக்கொள்கிறார். இந்த மொத்த குடும்பத்தையும் கருவறுப்பேன் என்று சபதம் செய்த வில்லன், சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவரிடமிருந்து சிம்பு எப்படி அந்தக் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதும், உண்மையில் சிம்பு யார் என்பதுமே படத்தின் கதை.

ஏற்கெனவே பலமுறை நாம் பார்த்த அதே அரைத்தமாவு கதைதான் என்றாலும் கூட, அதை கொடுத்த விதத்தில் இயக்குனர் சுசீந்திரன் சற்று தப்பித்துக்கொள்கிறார் என்றே கூறவேண்டும்.


Advertisement

படம் மொத்தம் இரண்டு மணி நேரமே ஓடுவதாலும், தேவையில்லாத பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், இழுவையான நகைச்சுவை காட்சிகள் என்று எதுவும் இல்லாமல், ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதையின் காரணமாக எங்குமே அலுப்பு ஏற்படவில்லை. உண்மையில் இது யாருமே எதிர்பாராத விஷயம்தான் எனலாம். ஏனெனில், 'ஈஸ்வரன்' டீசரிலும் ட்ரைலரிலும் அப்படி எந்த விசேஷமும் இருக்கவில்லை என்பதே உண்மை.

சிம்புவை பற்றி சற்று பேசலாம். பல பிரச்னைகளுக்கு பிறகு ஓரளவு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வெளிவரும் சிம்புவின் திரைப்படம் இது. சிம்புவுக்கென்று எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக மட்டும் இந்தப் படம் இல்லாமல், பொதுவான ரசிகர்களையும் ஓரளவு சந்தோஷப்படுத்தியே அனுப்புவது நல்ல விஷயம்.

சிம்பு தனது உடல் எடையைக் குறைத்து, 'கோவில்' படத்தில் இருந்த சற்றே இயல்பான உடல்மொழியோடு நடித்திருப்பது சிறப்பு. என்னதான் ஒரு பன்ச் வசனத்தில் நடிகர் தனுஷை வம்பிழுத்தாலும்கூட, ஆங்காங்கே தனது விரல் சேட்டைகளை வெளிக்காட்டினாலும் கூட, இரண்டு மணி நேர படத்தில் அவை பெரும் குறைகளாக தெரியாதது ஆறுதல்.


Advertisement

image

இயக்குநர் சுசீந்திரனின் புத்திசாலித்தனம் இங்கே குறிப்பிடவேண்டிய ஒன்று. சமீபத்தில் நாம் எதிர்கொண்ட லாக்டவுன், கொரோனா பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகிய எல்லாவற்றையும் 'கன்டென்ட்'டாக மாற்றி, அதன்மூலம் பல இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கிறார். அது புதிதாகவும் அதேநேரத்தில் கடந்த வருடத்தில் நமக்கே நடந்த விஷயம் என்பதால் மிக இயல்பானதாகவும் இருப்பது படத்திற்கு பெரும் பலம். அதேபோல், தேவையற்ற பாடல்களோ அல்லது சண்டைக் காட்சிகளோ இல்லாமல், முடிந்தளவு லாஜிக்கான காட்சிகளை அமைக்க முற்பட்டது பெரும் ஆறுதல்.

பாரதிராஜாவும் ஈர்க்கிறார். அவருக்கான பின்னணி கதை படத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால், வில்லனுக்கும் அவருக்குமான பகையில் அவ்வளவு அழுத்தமில்லை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. அது, படத்தின் பெரிய குறை. அடுத்து கதாநாயகிக்கான களமும் கூட மிகவும் மேம்போக்கான ஒன்றே. ஈடுபாடே வராத அளவிற்குத்தான் அந்தக் காட்சிகள் உள்ளன. நகைச்சுவை காட்சிகளில் பாலா சரவணன் ஈர்க்கிறார். இயல்பான அவரது முகபாவமும், வசன உச்சரிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது.

image

சென்டிமென்ட் இடைச்செருகலான இரண்டு காட்சிகளும், பாம்புகளை சிம்பு பிடிக்கும் காட்சிகளும் படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கிறது. ஆனால், முக்கிய வில்லன் செய்யவேண்டிய வேலையை முனீஸ்காந்த் செய்ததாக காட்டி இருப்பது ஏன் என்றும் புரியவில்லை. நல்ல திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ. அதேநேரத்தில், ஒரே ஒரு சண்டைக் காட்சிக்காக அந்த வில்லனுக்கு இவ்வ்ளவு பில்டப் தேவையா என்றுதான் இறுதியில் நினைக்கத் தோணுது.

தமனின் இசையில் வாத்திய சத்தம் அதிகம் இருந்தாலும்கூட படத்தை விட்டு அகலாமல் இருப்பதால் உறுத்தவில்லை. ஒரே கிராமத்தில் மொத்தப் படத்தையும் முடித்ததாலோ என்னவோ ஒளிப்பதிவாளர் திருவுக்கு வேலை அதிகமில்லை என்றே கூறலாம். இரண்டே மணி நேர படமாக நறுக்கென்று படத்தை தொகுத்து தந்த ஆண்டனிக்கு பாராட்டுகள்.

image

இதேபோன்று இன்னும் இரண்டு சுமாரான, குடும்பத்தோடு பார்க்கத் தகுதியான படத்தை தந்தாலே போதும், சிம்பு மீண்டும் லைம்லைட்டிற்கு திரும்பிவிடலாம். இன்னும் விரல் வித்தையை குறைத்துக்கொண்டு, இயல்பான கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க முயல்வது நல்லது.

ஆக, தமிழ் சினிமா ரசிகர்களின் நேரத்தைக் கொல்லாத அளவுக்கான பொழுதுபோக்கு சினிமாவாக வந்திருக்கிறது 'ஈஸ்வரன்'.

- பால கணேசன்

திரைப்பார்வைகள்:

> சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்! 

> மாஸ் காட்டிய 'ஜே.டி Vs பவானி' - பொங்கல் ட்ரீட் 'மாஸ்டர்' பட விமர்சனம் 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close