மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு மழைபெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தற்போது வரை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீர்காழி, கொள்ளிடம், குன்னம், ஆச்சாள்புரம், காழியப்பநல்லூர், தரங்கம்பாடி வரை அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. நிவர், புரெவி புயல்களால் ஏற்கெனவே பெய்த கனமழையால் வடிகால் வாய்க்கால் மற்றும் ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பதாலும் தற்போதைய மழைநீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை தொடர்ந்து நீடிப்பதால் மழைநீர் வடிய வழியின்றி தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் அழுகி வருகிறது. சில பகுதிகளில் முற்றிய கதிர்கள் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளது. புயலில் எஞ்சிய பயிர்களும், அறுவடை காலத்தில் பெய்யும் திடீர் மழையால் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர் கனமழையால் முற்றிலும் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி இடு பொருள் இழப்பீடாக ஹெக்டேருக்கு 20 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில். கணக்கெடுப்பு என்ற பெயரில் சீர்காழி பகுதிக்கு 80 சதவீதமும் கொள்ளிடத்தில் 70 சதவீதம் என பாரபட்சத்துடன் வழங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பயிர்களை இனி அறுவடை செய்வதும் அப்புறப்படுத்துவதும் இரட்டிப்பு செலவை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்த விவசாயிகள் தங்களுக்கு உளுந்து பயிறும் சாகுபடி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதிக்கபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு இழப்பீடும், 100 சதவீத காப்பீடும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி