மக்களுக்கு நம்பிக்கையூட்டும் உலகத் தலைவர்கள் வரிசையில், இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி செலுத்திக்கொள்வாரா என்ற கேள்வி இப்போது அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
மத்திய அரசு இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, ஜனவரி 16 தொடங்கி முதல் கட்டமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது. பல உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கு முன்பு, அந்நாட்டின் தலைவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டினர்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் கொரோனா தடுப்பூசியை முதன்முதலாக செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை விதைத்தனர். அந்த வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்வாரா என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி முதல் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என பீகார் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜித் சர்மா கோரிக்கை வைத்திருந்தார். அதுபோல நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கொரோனா தடுப்பூசியை முதன்முதலாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷ்வர்தன் போன்றோர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, மக்களுக்கு எவ்வித சந்தேகமும் கவலையும் ஏற்படாத வகையில், பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசியை முதலில் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால். இது குறித்து பிரதமர் அலுவலக தரப்பிலோ அல்லது மத்திய அரசின் தரப்பிலோ இதுவரை எந்த பதிலும் சொல்லப்படவில்லை.
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு