[X] Close >

"தியேட்டரில் இருக்கைகள் 50%? 100%? பரிசீலித்து சொல்லுங்கள்" : தமிழக அரசுக்கு உத்தரவு

High-court-ordered-Theatres-should-continue-with-50--seats-till-Jan-11

50% இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் காட்சிகளை அதிகப்படுத்துவது குறித்தும் தகவல் பெற்று ஜனவரி 11ல் தெரிவிக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடனேயே இயங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், போனிபாஸ், தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் ஆகியோர் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, அதனை ரத்து செய்து உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு, திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரப்பட்டது.

image


Advertisement

மனுதாரர்கள் தரப்பில், "மத்திய அரசு திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்கலாம் என குறிப்பிட்டுள்ள நிலையில், மாநில அரசு அதனை மீறும்வகையில் அரசாணையை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்களோடு ஆலோசிக்காமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூடிய அறையில் சமூக இடைவெளியை பின்பற்றுவது இயலாத ஒன்று. இது கொரோனா நோய்த்தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பாகவே அமையும். உருமாறிய கொரோனாவை கையாள்வது சிரமம். இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே அமையும்.
ஆகவே, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

தமிழக அரசு, திரையரங்க உரிமையாளர் சங்கம் தரப்பில், "விமானங்களில் ஒரே நேரத்தில் பலர் பயணிக்கின்றனர். அதனைப் போலவே திரையரங்குகளில் அதிக பட்சமாக 3 மணிநேரம் உரிய பாதுகாப்புடன் இருக்கப் போகின்றனர். திருநள்ளாறு கோவிலில் உரிய பாதுகாப்புகளுடன் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட நிகழ்வும் நடைபெற்றது. அரசியல்வாதிகள் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் கூட்டங்களும் நடைபெறுகின்றன.

image


Advertisement

கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், 50% இருக்கைகளுடன் இயங்கினால் திரையிடுவது கடினம். இதனால் திரையரங்க உரிமையாளர்களும், சுமார் 1 லட்சம் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆகவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்கக் கூடாது" என வாதிடப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில், "50% இருக்கைகளுடன் இயங்கும் பட்சத்தில், காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இது ஓரளவிற்கான ஆறுதலாக அமையும்" என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத்தரப்பில், "மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் திரைப்படங்களை திரையிட அனுமதியில்லை. காத்திருக்கும் இடம் உள்ளிட்ட பிற இடங்களில் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பான விளக்கப்படமும் வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த வழிகாட்டலை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்த வழிகாட்டலை முறையாக பின்பற்றுமாறு மாநில அரசுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

image

அதைத்தொடர்ந்து தமிழக அரசுத்தரப்பில் இது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், " 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை விதியின் கீழான வழிகாட்டல்களை மீறும் வகையிலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதே மனுதாரர்களின் வாதமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த வழிகாட்டலை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு அதி முக்கியத்துவம் அளிக்க இயலாது.

இவற்றை கருத்தில்கொண்டு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விரிவான விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிடப்படுகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது. அதே சமயம் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் சூழலில் காட்சிகளை அதிகப்படுத்துவது குறித்தும் தகவல் பெற்று ஜனவரி 11ல் தெரிவிக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடனேயே இயங்க வேண்டும் " என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close