[X] Close >

வெளிநாட்டில் ராகுல் காந்தி; காங்கிரஸில் பிரியங்கா மீது திடீர் 'ஸ்பாட்லைட்'... ஏன்?!

Rahul-s-abroad-trip-and-Spotlight-on-crisis-manager-Priyanka-Gandhi-in-Congress

காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட 136-வது ஆண்டு தினத்தின் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. சோனியா காந்தியும் பங்கேற்க முடியாத நிலை. அன்றைய தினம் தனிப்பட்ட முறையில் இத்தாலிக்கு சென்றுவிட்டார் ராகுல் காந்தி. அவரின் பயணச் செய்தி பலரையும் ஆச்சரியத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. காரணம், 136-வது ஆண்டு தின கொண்டாடத்தன்று காங்கிரஸ் இன்னொரு நிகழ்வையும் நடத்தி இருக்கிறது. விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பாஜக ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை மீறுவதை காட்டும் வகையில் காங்கிரஸ் அன்றைய தினம் ஒரு பிரசாரத்தையும் ஆரம்பித்தது. இந்தப் பிரசாரத்திற்கான யோசனையை வகுத்தவர் ராகுல் காந்தி. ஆனால், அவரே பிரச்சாரம் ஆரம்பிக்கும்போது இல்லாதது கட்சித் தலைவர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Advertisement

ராகுல் காந்தி இல்லாத நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் கவனத்தை ஈர்த்த மற்றொரு காட்சி இருந்தது. அது, பிரியங்கா காந்தி. கட்சித் தலைவர்கள், மூத்தவர்கள், பொருப்பாளர்களுடன் பிரியங்கா நடந்துகொண்ட விதம் கவனம் பெற்றது. விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசை கடுமையாக சாடிய பிரியங்கா, ஆக்ரோஷமாக பாஜகவை விமர்சனம் செய்தார். தனது சகோதரர் ராகுல் விலகி நிற்கும்போது, பிரியங்கா காந்தி கட்சிப் பணிகளில் காலடி எடுத்து வைப்பது இது முதல்முறை அல்ல.

image


Advertisement

பாஜகவுடன் கடுமையான சண்டை, ராஜஸ்தான் நெருக்கடி, அதைத் தொடர்ந்த சச்சின் பைலட்டுடனான தனது தனிப்பட்ட பேச்சால் நிகழ்ந்த சமாதானம், ஹத்ராஸ் பலாத்கார வழக்கில் நீதி கேட்டு போராடியது, ஆதித்யநாத் அரசாங்கத்தை எதிர்த்து போராடிய விதம் என அனைத்திலும் பிரியங்கா கவனம் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் எளிதில் பழகுவது, நேரம் கிடைக்கும்போது கட்சித் தலைவர்களைச் சந்திப்பது என பிரியங்காவின் பாணி, ராகுல் காந்தியை விட ஒருபடி மேலாக இருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

காங்கிரஸ் கட்சியின் ஒரு தூணாக இருந்தவர் அகமது படேல். கட்சிக்குள் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், தலைவர்களை சமாதானம் செய்வது, சர்ச்சைகளை தீர்த்து வைப்பது என பல்வேறு விஷயங்களில் துடிப்புடன் செயல்பட்டவர் அவர். ஒரு போன் காலில் பிரச்னைகளை தீர்த்து வைப்பார். ஆனால், அவர் மறைந்த பிறகு பிரச்னைகளுக்கு தீர்வுகாண ஒருவர் கூட காங்கிரஸில் இல்லை. தற்போது அகமது இடத்தில் பிரியங்காவை பொருத்திப் பார்க்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஏனென்றால், அதற்கும் பிரியங்காவின் செயல்பாடுதான் காரணம்.

சில மாதங்களுக்கு முன் அசோக் கெலாட்டின் ராஜஸ்தான் அரசுக்கு சச்சின் பைலட் மூலம் சிக்கல் வந்தது. எப்போதும் போல தலைமை பிரச்னைதான் அங்கும். முதல்வர் பதவி கேட்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் முகாமிட்டார். கிட்டத்தட்ட மத்தியப் பிரதேசத்தில் சிந்தியா போர்க்கொடி தூக்கியதுபோல அதே நிகழ்வு. இதனால் சிந்தியா எடுத்த முடிவை பைலட் எடுத்துவிடக்கூடாது என காங்கிரஸின் பல தலைவர்கள் பேச்சுவாத்தைக்கு முயன்றனர். ஆனால், பலன் இல்லை. பைலட்டை சமாதானம் செய்ய யாராலும் முடிவில்லை. அப்போதுதான் பிரியங்கா காலடி எடுத்து வைத்தார். பைலட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். ``உங்களுடைய நேரம் விரைவில் வரும்'' என்று பைலட்டுக்கு உறுதி கொடுத்தார். பிரியங்காவின் வார்த்தையை நம்பி கெலாட் அரசுக்கு மீண்டும் தனது ஆதரவை வழங்கினார். இந்தச் சம்பவத்துக்கு பிரியங்காவின் செல்வாக்கு மேலும் உயர்ந்து வருகிறது.


Advertisement

காங்கிரஸுக்கு தலைவலி கொடுக்கும் மற்றொரு பிரச்னை 23 பேர் குழு. சோனியா காந்தி இடைக்கால தலைவராக தொடர்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் அடங்கிய இந்த 23 பேர் குழு சமீபத்தில் கடிதம் எழுதியது பரபரப்பை கிளப்பியது. இவர்களுக்கு எதிராக ராகுல் காந்தி சீறினார். எனினும் தங்கள் நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக நின்றனர். காங்கிரஸின் செயற்குழு கூட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்திலும் தலைமை குறித்து இந்த 23 பேர் குழு பிரச்னைகளை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை சமாளிப்பது இப்போதைய தலைவலி என்று கருதப்படுகிறது.

image

ராகுல் ஆதரவாளர்கள், இவர்களை ஓரம்கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர். ஆனால், பிரியங்காவின் முடிவு இதில் வேறு மாதிரியாக இருக்கிறது. மூத்த தலைவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று நினைத்தவர்களிடமும் அவர் உடன்படவில்லை. அவர்கள் முரண்படுவது கட்சிக்கு நல்லதல்ல என நினைக்கிறார் பிரியங்கா. அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்த ஒரு கூட்டம் சமீபத்தில் நடந்தது. பிரியங்கா காந்தி இதில் கலந்துகொண்டது கவனிக்கத்தக்கது.

இப்படி பிரியங்காவின் நடவடிக்கைகள் பேசபடவே இப்போது அவரை அகமது படேல் இடத்தில் பொருத்திப் பார்க்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். வெறும் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே அவர்கள் பிரியங்காவை எதிர்நோக்கவில்லை. ஒரு பெண்ணால் மட்டுமே வலுவான மோடியை வெற்றிகொள்ள முடியும் என்ற வலுவான நம்பிக்கையும் அவர்கள் மத்தியில் உள்ளது. அனுபவமின்மை இருந்தபோதிலும், பிரியங்கா பாஜக மற்றும் மோடிக்கு எதிராக நிற்க முடியும் நம்புகிறார்கள். ராகுல் காந்தியின் பாணியில் உள்ள முரண்பாட்டிற்கு மாறாக பிரியங்காவிடம் இருக்கும் நிலைப்புத்தன்மை, ஆற்றல் கட்சிக்கு உதவும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.

இப்போதும் இதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் தலைமை பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல் - சரண் சிங் தியோ, ராஜஸ்தானில் அசோக் கெஹ்லாட் - சச்சின் பைலட் என ஓயாத பிரச்னைகள் உள்ளன. அதனை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இதனால்தான் தற்போது கட்சிக்கு ஒரு தலைவரை விட குழப்பங்களை துடைக்கும் ஒருவர் தேவை எனக் கருதுகிறார்கள் தொண்டர்கள். அந்த இடத்தில் பிரியங்கா சரியாக இருப்பார் என்று பேச்சு இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ள இந்தச் சூழ்நிலையில் அனைவரின் பார்வையும் பிரியங்காவின் மேல் விழுந்துள்ளது.

- மலையரசு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close