'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்! தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!' என்று மேடையெங்கும் முழங்கி வருபவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த சீமான் இயக்குநர், நடிகர், பாடகர், வசனகர்த்தா என பன்முகத்தன்மையுடன் தன்னை வெளிகொணர்ந்தார். பின்னர் 'நாம் தமிழர்' இயக்கத்தை 2010 ஆம் ஆண்டு முதல் கட்சியாக அறிவித்தார் சீமான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனை தலைவராக ஏற்று, தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து வரும் சீமான், ஒரு திரைப்படைப்பாளியாக - நடிகராக சினிமா துறையில் இருந்து வந்து, கடந்த 10 ஆண்டுகளாக அரசியல்வாதியாக வலம் வருபவர்தான் என்றால் அது மிகையல்ல. ஆனால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பதில் முக்கியமான நபரும் அவராகவே இருப்பது கவனிக்க வைக்கிறது. அதற்கு அவர் சொல்லும் காரணமும் முக்கியம்.
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு அதிகபட்சமான எதிர்ப்பை ஆரம்பத்தில் இருந்தே பதிவு செய்து வருகிறார் சீமான். இதற்கு காரணம் அவர் மீது தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு கிடையாது... தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்ற அவரது சிம்பிள் லாஜிக்தான். ரஜினி அரசியல் வருகை என சீமானிடம் கேள்வி எழுப்பினால் போதும், அவருக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துவிடும். எப்பேர்பட்டவரையும் தனது ஏளனமான சிரிப்பால் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் சீமான்.
அது ரஜினியில் தொடங்கி கமல், விஜய், எம்.ஜி.ஆர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் போன்றோரெல்லாம் ஆளத் தகுதியற்றவர்களா? இதற்கு மராட்டியத்தில் இருந்து ஒருவர் வரவேண்டுமா என்று அடுக்கடுக்கான வாதங்களை முன் வைக்கிறார் சீமான். இது ஒரு புறம் இருக்க, அடுத்து கமலுக்கு வருவோம். கமல் கட்சி தொடங்கியதும் முதல் ஆளாக சென்று ஆதரவு தெரிவித்தார் சீமான். "கமலுக்கு ஆதரவு எல்லாம் தெரிவிக்கவில்லை. கமல் சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் பேரில் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்" என்பது நாம் தமிழர் தரப்பு விளக்கம். அதன் பின்னர் கமல்ஹாசனின் அரசியல் நடவடிக்கைகளை கவனித்து, குறை கூற ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுப்பேன் என்று கூறும் ரஜினி - கமலை சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். அதோடு எம்.ஜி.ஆரையும் விட்டுவைக்கவில்லை. அவரது ஆட்சியை பற்றியும் சரமாரியாக பேசத் தொடங்கிவிட்டார்.
“பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்ஜிஆர். அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி எம்ஜிஆர் என்ன சிறந்த ஆட்சியை தந்தார்? கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம்.ஜி.ஆர். முல்லைப் பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம்ஜிஆர். அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார். தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் கிடைக்கும் அடி, எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே பயப்பட வேண்டும். அவர்களை அடிக்கிற அடியில் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்" என்றார் சீமான்.
என்ன விஜய்யுமா? என ஆச்சர்யப்பட்டனர் கேள்வியை கேட்ட செய்தியாளர்கள். அதற்கு காரணம் ‘விஜய் என் தம்பி’ என சீமான் அடிக்கடி கூறியதுண்டு. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரஜினியுடன் ஒப்பிட்டு பாராட்டியவர் சீமான். அப்படியிருக்க இவர் ஏன் விஜய்யையும் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை.
சமீப காலமாக விஜய் தமிழகத்தில் அனைத்து செயல்பாடுகளிலும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவியும் செய்து வருகிறார் விஜய். இவையனைத்தும் தான் தொடங்கி வைத்துள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாகவே விஜய் செய்து வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் விஜய் நடித்து வரும் படங்கள் பலவும் அரசியல், சமூக பிரச்னைகளையும், பெண்ணியக் கருத்துகளையும் கொண்டிருப்பதையும் கவனிக்க முடியும்.
இப்படியிருக்க நாம் தமிழர் கட்சியின் சீமான் தொடர்ந்து நடிகர்களை அரசியலுக்கு வரக்கூடாது என முட்டுக்கட்டை போடுவது ஏன் என கேள்வி எழும்பும்போது, அதற்கு அவரே பதில் சொல்கிறார். “தகுதிகளை வளர்த்துக்கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால் வரட்டும். குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசிலுக்கு வரட்டும்” என்கிறார்.
'வந்தா தலைவனா வந்து நாளைக்கே ஆட்சி கட்டிலில் உட்கார வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது. களத்திற்கு வந்து போராடி, தகுதிகளை வளர்த்துக்கொண்டு, மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு பின்னர் தேர்தலை சந்திக்க வேண்டும்' என்பதில் சீமான் தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது. சீமானின் எதிர்ப்பு அவரது வாக்கு வங்கியை அதிகரிக்குமா அல்லது பாதாளத்துக்கு தள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான அதிமுக கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் சீமான். அந்தத் தேர்தல்களைப் பொறுத்தவரையில், '2011-ல் காங்கிரஸ் நின்ற தொகுதிகளில் மட்டும் எதிர் பரப்புரை செய்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, தேமுதிக நின்ற தொகுதிகளில் மட்டும் எதிர் பரப்புரை செய்தார். இந்த இரு தேர்தல்களிலும் திமுக தொகுதிகளில் எதிர் பரப்புரை செய்யவில்லை” என்பது நாம் தமிழர் கட்சியினரின் விளக்கம். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட வைத்தார். ஆனால், அந்த தேர்தலில் இந்தக் கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. வாக்கு சதவிகிதத்தை பொருத்தவரை 1.07 சதவிகிம் பெற்று ஒன்பதாமிடத்தில் வந்தது. அதிகபட்சமாகக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிட்டு 12,497 வாக்குகள் பெற்றார்.
2019 நாடாளுமன்றத்தேர்தலில் ஆண், பெண் சரிபாதி வேட்பாளர்களை நிறுத்திய யுக்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 38 தொகுதிகளில் போட்டியிட்டு 16,45,185 வாக்குகள் பெற்றது நாம் தமிழர் கட்சி. வாக்கு சதவிகிதத்தைப் பொருத்தவரை 1.07 லிருந்து 3.87 ஆக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், 16 தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கு மேல் வாக்குகள் பெற்றன. தவிர, 22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 3.15 சதவிகித வாக்குகள் பெற்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை, வாக்கு சதவிகிதத்தில், தி.மு.க 32.76 சதவிகிதமும், அ.தி.மு.க 18.49 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சி 12.76 சதவிகிதமும், பா.ம.க 5.42 சதவிகிதமும் அ.ம.மு.க 5.16 சதவிகிதமும், நாம் தமிழர் கட்சி 3.87 சதவிகிதமும், மக்கள் நீதி மய்யம் 3.72 சதவிகிதமும், பி.ஜே.பி 3.6 சதவிகிதமும், தே.மு.தி.க 2.19 சதவிகிதமும் பெற்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வித்தியாசத்தை 2.80 சதவீதம் வாக்குகளை உயர்த்தியுள்ளது நாம் தமிழர் கட்சி. அதுமட்டுமில்லாமல் கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட 12 சதவீத வாக்குகளை ஏழை மக்கள் செலுத்தியிருப்பதாகவும். 100க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்களை வென்றிருப்பதாகவும் தெரிவிக்கிறார் சீமான்.
இந்த நிலையில், ரஜினி, கமல், விஜய், எம்.ஜி.ஆர் எதிர்ப்பால் சீமானின் வாக்கு வங்கிக்கும் பலமா? பலவீனமா என்ற கேள்வி எழாமல் இல்லை. ரஜினியின் எதிர்ப்பால் சீமானுக்கு பலம் குறைய வாய்ப்பே இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். “ரஜினி கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் ஆதரவாளர்களுக்கு சரிபாதியாக எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள் என்றே பார்க்கப்படுகிறது. அந்த வாக்கு வங்கி சீமானுக்கு ஆதரவாக சேர வாய்ப்புண்டு. அதேசமயம், கமல் கட்சி ஆரம்பித்து கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவரின் எம்.ஜி.ஆர் குறித்த பரப்புரை எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவரை எதிர்ப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு பெரிதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஏற்கெனவே கமல் களத்தில் இருக்கும்போது சீமான் கட்சி சோதித்து பார்த்து விட்டது. கிட்டதட்ட மநீமவை விட அதிக வாக்குவங்கியையே நாம் தமிழர் கட்சி கையில் வைத்துள்ளது.
ரஜினி - கமல் கட்சியால் பெரும்பாலும் திராவிட கட்சிகளின் வாக்கு வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர் எதிர்ப்பை பொறுத்தவரை அதிமுகவினர்தான். அதிமுகவினர் நாம் தமிழர் கட்சிக்கு வர வாய்ப்பில்லை என்று சீமான் கருதியிருக்கலாம். அதுமட்டுமில்லாமல் தனது கொள்கையில் இருந்து மாறாமல் இருக்க சீமான் அவ்வாறு ஒட்டுமொத்தமாக எதிர்த்து பேசியிருக்கலாம்.
விஜய்யை பொறுத்தவரை அரசியல் எதார்த்தத்தை அவருக்கு புரியவைக்கும் நோக்கிலேயே சீமான் பேசியிருக்கக் கூடும். ‘விஜய் புகழ் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக நிற்க வேண்டும். அவர் அரசியலுக்கு வரட்டும். வரவேண்டாம் என்று சொல்லவில்லை. வந்து அரசியல் செய்யுங்கள். களத்தில் நின்று மக்களுக்காகப் போராடி, நன்மதிப்பைப் பெற்று வரட்டும். வெறும் திரைக்கவர்ச்சியை வைத்து நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்’ என்கிறேன் என்றுதான் சீமான் கூறுகிறார். அதனால், அவர் சொல்வது நியாயம் தானே என்று சில ரசிகர்கள் நினைக்கக் கூடும், சில பரம விசிறிகளோ எங்கள் தளபதியை எப்படி சொல்லலாம் என்று ஆதங்கப்படக்கூடும். ஆனால் இதெல்லாம் வாக்குச்சாவடியில் எதிரொலிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
ஓட்டு மொத்தத்தில் ரஜினி, கமல், விஜய் என சீமான் எடுக்கும் எதிர்ப்பு அரசியல் எப்படிப்பட்ட பலனை தரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'