[X] Close >

'தடியடி, ஆதரவு, முழக்கங்கள்...' - ஒரு மாத கால விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை!

Farmers-protest-highlights-from-day-first-till-today

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் 30-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு மாதகாலம் கடந்துள்ள இந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை என்ன?


Advertisement
 • வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

image

 • ஹரியானா மாநிலம் அம்பாலா வழியாக பேரணியாக சென்ற விவசாயிகளை காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். இதற்கிடையில் பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழையாமல் இருக்க ஹரியானா மாநில அரசு தனது எல்லைகளை மூடியது. இதுதவிர பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவையும் ஹரியானா அரசு பிறப்பித்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எத்தனை தடைகள் வந்தாலும் தாங்கள் டெல்லி சென்றே தீருவோம் என விவசாய அமைப்பினர் உறுதியாக தெரிவித்தனர்.
 • ‘தலைநகரில் ஒன்று கூடுவோம்’ என்ற பெயரில் இரண்டு நாள் பேரணியை அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. ஆனால் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக விவசாயிகளின் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தனர். மறுப்பை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். தடியடியும் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்

image


Advertisement
 • போராட்டக்களத்தில் நவ்தீப் சிங் எனும் பட்டதாரி ஒரு இளைஞர் கவனம் ஈர்த்தார். ஷாம்பு எல்லைப் பகுதியில் விவசாயிகளை போலீஸ் தண்ணீர் பீய்ச்சி கலைக்க முயன்றது. அப்போது, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனத்தின் மேல் தாவி தண்ணீரை நிறுத்தினார். தண்ணீர் பீரங்கியை அணைத்தவுடன், பல விவசாயிகள் தங்கள் அணிவகுப்போடு முன்னேறினர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகின. நவ்தீப் ஹீரோவாக பேசப்பட்டார். அவர் மீது வழங்குகளும் பதியப்பட்டன.
 • தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரை பீய்ச்சியடித்தல், கல் வீச்சு.டெல்லி மற்றும் ஹரியானா மாநில எல்லையில் உள்ள ஊரான சிங்கு போர்க்களம் போல காட்சியளிக்கின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்ற போது எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அலையலையாக டிராக்டர்களில் வந்த விவசாயிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சியடித்தல், தடியடி என கலைந்து போகச் செய்ய முயற்சித்தனர்.

image

 • மணல் நிரப்பப்பட்ட லாரிகள், இரும்புக் கம்பிகளாலான தடுப்புகள் போன்றவற்றையும் வைத்து விவசாயிகளை தடுக்க முயற்சித்தனர். இதனால் ஆவேசமான விவசாயிகள் பதிலுக்கு கற்களை வீசத் தொடங்கியதுடன் காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளையும் தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர். நிலைமை மோசமான நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவசாயிகளை டெல்லிக்குள் காவல் துறை அனுமதித்தது
 • போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்தார். டிசம்பர் மூன்றாம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், கொரோனா தொற்று பரவல் மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

image

 • டெல்லி புராரி பகுதியில் இருந்து ராம் லீலா மைதானத்துக்கு போராட்ட களத்தை மாற்றினால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ஆனால், 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அமித் ஷாவின் கோரிக்கையை நிராகரித்தது
 • உணவு, குடிநீருடன் போராட்டக் களத்திற்கு வரத் தொடங்கினர் விவசாயிகள். தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என உறுதியாக கூறினர் விவசாயிகள்.
 • இந்திய விவசாயிகளின் பிரச்னை உலக நாடுகள் வரை சென்றது. அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அவரின் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ.

image


Advertisement
 • விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலக்கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. அனைத்தும் தோல்வி. அதன் பின்னர் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது. அதன் காரணமாக பல ரயில்களை ரத்து செய்துள்ளது வடக்கு ரயில்வே.
 • போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உணவு கொடுத்தது. இருப்பினும் அதை வேண்டாமென சொல்லி மறுத்ததோடு “நாங்கள் உணவு கொண்டு வந்துள்ளோம்” என தெரிவித்து அதிர்ச்சி அளித்தனர் விவசாயிகள். தங்களின் தீவிரத்தை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம் என சொல்லாமல் சொல்லினர் விவசாயிகள்.

image

 • பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. 10நாட்களை கடந்தது போராட்டம். “போராட்டக்குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் தொடர்ந்தால், எல்லைகளிலேயே தங்கி போராட்டத்தின் வேகத்தை விரைவுப்படுத்துவோம்” என்று உறுதி எடுத்தனர் விவசாயிகள்.
 • டெல்லியில் கடுங்குளிர் நிலவியது. ஆனாலும் சிறுவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலரும் போராட்டத்தில் பங்கெடுக்கத் தொடங்கினர். திரைத்துறையினர், விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள் என பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். மறுபுறம் ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கொண்டு வரும் பணியில் பஞ்சாப் மாநில விவசாயிகள் இறங்கினர்

image

 • விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆதரவு குவிந்தன. உணவுப்பொருட்கள் வந்து குவிந்தன. பல்வேறு கிராமங்களில் இருந்து பால் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்திற்கு வந்து சேர்ந்தது. பல விவசாயிகள் ட்ராக்டர்களில் வந்தனர். வாகன கோளாறுகளை சரிசெய்ய மெக்கானிக் டீம் இலவசமாக களம் இறங்கியது. நிதி திரட்டப்பட்டு மருந்துப் பொருட்கள் வாங்கப்பட்டன. சாப்பாத்திகள் போடுவதற்கு மெஷின்கள் வந்து இறங்கின.
 • கடுங்குளிரில் இருந்து விவசாயிகளை காக்கும் வகையில், புராரி போராட்டக் களத்தில் மத்திய அரசு தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தது. அந்த வசதிகளை மறுத்தனர் விவசாயிகள். பாஜவுக்கு எதிராகவும், அதானி, அம்பானிக்கும் எதிராகவும் விவசாயிகள் குரல் கொடுத்தனர். அதானி, அம்பானி நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

image

 • டெல்லியில் போராட்டத்தின் முதல் 17 நாட்களில் 11 விவசாயிகள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை மேற்கொள்காட்டி, மத்திய அரசை குற்றம்சாட்டினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. சட்டங்களை ரத்து செய்ய விவசாயிகள் இன்னும் எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று கேள்வியெழுப்பினார்.
 • டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலைத் தடுப்பதற்காக விவசாயிகள் ஷம்பு டோல் பிளாசாவை மூடினர். ராஜஸ்தானில் இருந்து 1,000 விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் டெல்லிக்கு வந்தனர்.
 • போராட்டத்தின் 19வது நாளில் விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரை வீட்டுக்குள் முடக்கிவைத்துள்ளது டெல்லி போலீசார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. பின்னர் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தார் கெஜ்ரிவால்.

image

 • நாளுக்குநாள் போராட்டம் தீவிரமாகியது. டெல்லி எல்லையில் சுமார் 60,000-க்கும் அதிகமானோர் குவிந்தனர். இதற்கு மேல் நிலைமையை சமாளிக்க முடியாது என்று ஹரியானா போலீஸ் கைவிரித்தது.
 • ''நாங்கள் விவசாயிகளின் மகள்கள். இந்தப் போரட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியது எங்கள் கடமை” என போராட்டத்தில் களம் இறங்கினர் பெண்கள். பள்ளிச்சிறுமிகளும் போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்தனர்
 • சூரிய ஒளி மூலம் மின்சாரம் உருவாக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுப்பதும், அது தோல்வியில் முடிவதுமாக இருந்தது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டன. யாரையும் பாதிக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

image

 • டெல்லி போராட்டக்களத்தில் குடிசைவாழ் குழந்தைகளுக்காக பள்ளிகளை தற்காலிகமாக தொடங்கி நடத்தினர் விவசாயிகள். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாபைச் சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் களமிறங்கினர். விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
 • விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த சீக்கிய பாதிரியார் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 26வது நாள் கடந்த நிலையில் 33 விவசாயிகள் இறந்ததாக தகவல் வெளியாகியது. அவர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் அஞ்சலி செலுத்தினர்.

image

 • நாட்கள் செல்ல செல்ல பல விவசாயிகள் சைக்கிள் மூலம் டெல்லி புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளேயே கடந்து சென்று போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தினர் சில விவசாயிகள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பிரதமர் மோடிக்கு தங்களது ரத்தத்திலேயே கடிதம் எழுதினர்.
 • விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் 30ஆவது நாளை எட்டியுள்ளது. ஏற்கனவே நடந்த பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய அரசு கூறியுள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடி வரும் 40 விவசாயிகள் சங்கத்தினருக்கும் மத்திய வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் கடிதம் எழுதினார். விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்கனவே அழைத்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close