[X] Close >

"தாக்குதல்... வலி... புன்னகை!" - ஆனது 20 ஆண்டுகள்... சென்னையில் சச்சினின் அற்புத ஆட்டம்!

20-years-back-Sachin-Tendulkar-made-a-century-in-Chennai-Chepauk

இந்தியாவுக்காக ஏராளமான வெற்றிகளையும் சிறந்த ஆட்டங்களையும் தந்தவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து 2013 ஆம் ஆண்டுடன் சச்சின் ஓய்வு பெற்றாலும், அவ்வப்போது அவரின் மிகச் சிறந்த ஆட்டங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருவார்கள். ஏறக்குறைய 24 ஆண்டுகள் சச்சின், இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இதில் பல இன்னிங்ஸ் மறக்க முடியாதது. பொதுவாக அதில் எப்போதும் இடம்பெறுவது சச்சின் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆடிய ருத்ர தாண்டவும் உண்டு.


Advertisement

image

டெஸ்ட் போட்டிகளிலும் மிக முக்கியமான இன்னிங்ஸ்களை சச்சின் விளையாடியுள்ளார். அதுவும் சென்னை சேப்பாக்கத்தில் அவர் விளையாடிய டெஸ்ட் இன்னிங்ஸ் அனைத்தும் 'மாஸ்டர் கிளாஸ்'. முதல் முறையாக 1992 இல் இங்கிலாந்துடன் 165, 1997 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 155, 1998 இல் பாகிஸ்தானுக்கு எதிராக 136, 2001 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 126 ரன்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம். இந்த அனைத்து சதங்களை காட்டிலும் 2008 இல் மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்பு அடுத்த வாரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்தான் பெஸ்ட்.


Advertisement

image

அந்தப் போட்டி இதே நாளில் 2008 இல் முடிவடைந்தது. டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டி டிசம்பர் 15 ஆம் தேதி சச்சினின் வெற்றி சதத்துடன் நிறைவடைந்தது. சச்சினின் வாழ்வில் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாடுமே, அத்தகைய தருணத்தில் சச்சினின் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்தது. அதைவிட முக்கியம், அந்தப் போட்டி முடிந்த பின்பு சச்சின் அளித்த பேட்டி. இன்று அன்றைய போட்டியைச் சற்றே பின்னோக்கி பார்க்கலாம்.

2008 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. அப்போது மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி சொந்த நாட்டுக்குத் திரும்பியது.


Advertisement

image

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்க, பலத்த பாதுகாப்போடு சென்னை சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்று, அடுத்து சில வாரங்களிலேயே இந்தப் போட்டி நடைபெற்றதால், ஒட்டுமொத்த உலகமும் சென்னை டெஸ்ட் நோக்கி திரும்பியது. அந்தாண்டுதான் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் போட்டி டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 123 ரன்கள் அடித்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்தியா 241 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

image

இந்தியாவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 311 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. இந்த இன்னிங்ஸிலும் ஸ்ட்ராஸ் 108 மற்றும் காலிங்வுட் தலா 108 ரன்களை குவித்தனர். இதனையடுத்து நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்குப் பின்பு 387 என்ற இலக்கை சேஸ் செய்ய இந்திய அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டிகளில் நான்காவது இன்னிங்ஸில் 387 ரன் சேஸ் செய்வது என்பது 90 சதவீதம் எட்டாக் கனிதான். இதனால் இங்கிலாந்துக்கு நிச்சயம் வெற்றி என்று பலரும் நினைத்திருந்தனர்.

image

ஆனால் இந்தியா வேற லெவலில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சேவாக் முதல் பந்திலிருந்தே அதிரடியைக் காட்டினார், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சிதறவிட்ட சேவாக் 68 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். இதனையடுத்து நான்காம் நாள் முடிவில் இந்தியா 131 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது. மறுநாள் கௌதம் காம்பீர் 66, டிராவிட்4, லட்சுமண் 26 ரன்களில் ஆட்டமிழக்க, சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார். தன் கிரிக்கெட் வாழ்வில் மீண்டுமொரு பிரஷர் இன்னிங்ஸ்க்கு தயாரானார். அவரோடு ஐந்தாவது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்திருந்தார் யுவராஜ் சிங்.

image

ஒரு பக்கம் சச்சின் பொறுப்பாகச் சீரான வேகத்தில் ரன் சேர்த்துக்கொண்டிருக்க, யுவராஜ் சிங்கோ தாறுமாறாக ஷாட்டுகளை அடித்துக்கொண்டு இருந்தார். இதில் கடுப்பான சச்சின், யுவராஜிடம் சென்று "இது சுழல் பந்துக்கு ஏதுவான ஆடுகளம். இப்படி பொறுப்பில்லாமல் ஆடக் கூடாது. நீ அவுட்டாகிவிட்டால், அடுத்து வருபவரால் இந்த பிட்சை புரிந்துகொள்ள முடியாது. அதனால் நாம் இருவரும் சேர்ந்து இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும்" என்றார். சச்சின் கட்டளைக்குப் பின்பு பொறுப்பான யுவராஜ் சிங்கை உலகமே ரசித்தது. சச்சின் - யுவராஜை அவுட் செய்ய இங்கிலாந்து வீரர்கள் திணறினர். மாலை மங்கிவிட்டது இருந்தும் பந்து தெரியவில்லை என சச்சின் - யுவராஜ் ஆட்டத்திலிருந்து விலகவில்லை.

image

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஓடச் செய்தனர், பீல்டர்கள் அனைவரும் பவுண்டரியில் நின்றபோதும் பவுண்டரிகளை விளாசினார் சச்சின். இந்த ஜோடி 163 ரன்களை எடுத்து, வெற்றி இலக்கை அடைந்தது. சச்சின் 99 ரன்களில் இருந்தார். எதிர்முனையிலிருந்த யுவராஜ் சிங், ரன் எடுக்காமல் சச்சினுக்கு ஸ்ட்ரைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். கடைசியாக, பவுண்டரி அடித்து தன் 41வது சதத்தை எட்டினார் சச்சின். இந்தியாவும் வெற்றி பெற்றது.

சச்சின் 103 ரன்களும், யுவராஜ் சிங் 85 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து நெகடிவ் பீல்டிங் முறையை கையில் எடுத்தது. பவுண்டரி முழுக்க பீல்டர்களை வைத்தது. ஆனால் கேப்பில் சச்சின் பவுண்டரிகளை விளாசினார். இந்தியா சிறப்பான வெற்றியை பதிவு செய்து தொடரையும் வென்றது.

image

வெற்றிக்குப் பின் பேசிய சச்சின் சற்றே உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார் ‛‛இது மும்பை மீதான தாக்குதல் என்று கருதவில்லை. இந்தியாவின் மீதான தாக்குதல். இதனால் மும்பை மட்டுமல்லாது ஒவ்வொரு இந்தியனும் பாதிக்கப்பட்டுள்ளார். என் மகள் உடன் படிப்பவர்கள் சிலர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த தாக்குதலின் வலியை நான் அறிவேன். இந்த கோரத் தாக்குதலிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றியால் மும்பை தாக்குதலை மறந்து விட முடியும் என்று சொல்லவில்லை. மாறாக, மக்கள் முகத்தில் புன்னகை வர இந்த வெற்றி காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்" என்றார் சச்சின்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close