[X] Close >

உலகப் புகழ்பெற்ற இயக்குநர் கிம் கி டுக் கொரோனா பாதிப்பால் மரணம்!

Popular-Korean-filmmaker-Kim-Ki-duk-dies-due-to-COVID-19

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59.


Advertisement

தெற்காசிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடமும் பிடித்த பிரபல இயக்குநர்களில் ஒருவர் கிம் கி டுக். கொரியாவைச் சேர்ந்த இவர் இயக்கிய ’சமாரிடன் கேர்ள்’, ’3 அயர்ன்’, ’ஒன் ஆன் ஒன்’ உள்ளிட்டப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவை.

image


Advertisement

வெனிஸ், பெர்லின் என சர்வதேச திரைப்பட விழாக்களில் இவரின் படம் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கிம் கி டுக், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது.

சமீபத்தில், சொந்தமாக வீடு வாங்குவதற்காக நவம்பர் 20-ல் லட்வியா நாட்டுக்கு சென்றிருந்திருக்கிறார் கிம். இதற்காக ஜுர்மலா என்கிற கடல் பகுதியில் வீடு பார்த்து வைத்திருந்தவர், அதனை பேசி முடிப்பதற்காக சென்றுள்ளார். நவம்பர் 20ம் தேதி சென்ற கிம் குறித்து அடுத்தகட்ட தகவல் ஏதும் வெளியாகததால் அச்சம் அடைந்த அவரின் நண்பர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர்.

இதன்பிறகுதான் அவர் கொரோனா பாதிப்பின் காரணமாக அவதிப்படும் தகவல் வெளிவந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் உயிரிழந்தார் என்று தகவலை தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரின் மறைவு செய்தியை அறிந்த உலக சினிமா ரசிகர்கள் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

யார் இந்த கிம் கி டுக்?!

உலக சினிமா ரசிகர்களுக்கு இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் இவரைத் தெரியாத ஒருவர் உலக சினிமா ரசிகராக இருக்க வாய்ப்பில்லை. தமிழகம், கேரளாவில் இருக்கும் உலக சினிமா ரசிகர்கள் நிச்சயம் கிம் கி டுக் ரசிகராக இருப்பார்கள். அதனால்தான் அவரை கொரியாவை விட தமிழகம் மற்றும் கேரளாவில் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இவரின் படங்கள் நாம் யோசிக்க இயலாத கருக்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்கும்.

இது எல்லாம் எப்படி சாத்தியம் என்று கேட்க தூண்டும், கதைக்களம், திரைக்கதை போன்றவற்றால் எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நபராக மாறினார் கிம். இவர் இயக்கிய 'சமாரிடன் கேர்ள்', '3 அயர்ன்', 'ஒன் ஆன் ஒன்' போன்ற படங்கள் இந்த ரகம் தான். இந்தியாவின் கலாசாரமும், கொரிய கலாசாரமும் ஒன்றாக இருப்பதால் அங்கு தயாராகும் படங்கள் இந்தியாவில் கல்லா கட்டும். அப்படி கல்லா கட்டிய படங்களில் முக்கியமானவை கிம்மின் படங்களாகதான் இருக்கும். இவர் படங்களின் டி.வி.டி-க்கள் பாலிவுட் வட்டாரங்களில் அதிகம் விற்பனை ஆகும் ஒன்று. கேரளாவில் இவருக்கென்று ரசிகர் மன்றமே உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தென் கொரியாவில் பிறந்தாலும், பாரிஸில் படிப்பை முடித்தவர் கிம். ஸ்கிரிப் ரைட்டராக தனது பணியை தொடங்கிய கிம், இதுவரை 24 படங்களை இயக்கியுள்ளார். இதில் ஐந்து படங்கள் சர்வதேச விருதுகளை வென்றுள்ளன. இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இவரே கதாசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. தனது தனித்தன்மையான கதை சொல்லாடல், படமாக்கும் விதம் போன்றவற்றால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த கிம் கி டுக்கின் மறைவு உலக சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பு!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close