[X] Close >

யானை - மனிதன் மோதலை தடுப்பது சாத்தியமா? - இதோ ஓர் உதாரணம்!

Human-Elephant-conflict-and-how-it-controlled-in-Valparai

ஆதிகாலத்தில் மனிதனும் விலங்குகளும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதன் - விலங்குகள் இடையே இடைவெளி அதிகரித்தது. அதில் பெரும்பாலான தவறுகள் மனிதன் செய்ததாக இயற்கை ஆர்வலர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட காட்டுயிர் என்றால் அது யானைகள்தான். மனிதன் அதன் வழித்தடங்களை ஆக்கிரமித்ததே யானை - மனிதன் இடையே மோதல் அதிகரித்தற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.


Advertisement

image

தமிழகத்தை பொறுத்தவரை கோவை மாவட்டம் வால்பாறை, ஈரோடு சத்தியமங்கலம், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவை யானை - மனிதன் மோதல் அதிகமாக இருக்கும் இடங்கள். இதில் கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யானை - மனிதன் மோதல் அதிகமாகவே இருந்தது. ஆனால், வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பினரின் கூட்டு முயற்சியால் இப்போது யானை - மனிதன் மோதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.


Advertisement

image

வால்பாறையே உதாரணம்:

முதலில் மனித உயிரிழப்பு ஏன், எப்படி, எப்போது, எங்கு ஏற்படுகிறது என்பது ஆராயப்பட்டது. வால்பாறையில் கடந்த 15 ஆண்டுகளாக யானைகளின் இடப்பெயர்வையும், பண்புகளையும் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமாரும் அவரது குழுவினரும் இதற்கான விடைகளைக் கண்டறிந்தனர். சுற்றிலும் வனப்பகுதியைக் கொண்ட, மனிதர்களின் அடர்த்தி மிகுந்த வால்பாறை பகுதியில் ஆண்டில் 10 மாதங்கள் யானைகள் நடமாட்டம் இருப்பின், பல வேளைகளில் யானைகளும் மனிதர்களும் எதிர்பாராவிதமாக ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடும்.


Advertisement

image

இதனால் மனித உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 1994 முதல் 2012 வரை 39 பேர் யானையால் எதிர்பாராவிதமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் 72 விழுக்காடு உயிரிழப்பு ஏற்பட்டது தேயிலை எஸ்டேட்டிலும், சாலையிலுமே. யானைகள் இருப்பதை அறியாமலேயே அவை நடமாடும் பகுதிகளுக்கு சென்றதுதான் முக்கிய காரணம். டிசம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரைதான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இதைத் தவிர்க்க பல்வேறு வழிமுறைகள், இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மூலமாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. இதில், 5 வழிமுறைகள் வெற்றியைத் தேடித்தந்தது.

image

உள்ளூர் தொலைக்காட்சி மூலம்: யானைகள் நடமாட்டும் குறித்த தகவல்கள் உள்ளூர் தொலைக்காட்சி மூலமாக தெரிவிக்கப்படுவதால் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் தகவல் அறிகின்றனர்.

குறுஞ்செய்தி மூலம்: இந்தச் சேவையில் உள்ள சுமார் 4,600 சந்தாதாரர்களில், யானையின் இருப்பிடத்தைப் பொருத்து தினமும் 1000க்கும் மேற்பட்டோருக்கு தகவல் உடனடியாகச் சென்றடைகிறது. இது, பல்வேறு வேலைகளுக்குச் செல்வோருக்கு பயனுள்ளதாக அமைந்தது.

image

ஒலிக் குறுஞ்செய்தி மூலம்: யானை இருப்பிடம் குறித்த தகவல்களைப் படிக்க முடியாதவர்களுக்கு, ஒலி வடிவிலும் குறுஞ்செய்தித் தகவல் அனுப்பப்படுகிறது.

மின்னும் சிவப்பு விளக்கு மூலம்: மனிதர்கள், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாக கருதப்படும் 37 இடங்களில் உயரமான பகுதியில் மின்னும் சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இது, இரவு நேரத்தில் குடியிருப்புக்குச் செல்வோருக்கு பெரிதும் பயன்படுகிறது.

image

அரசுப் பேருந்தில் ஒலிபெருக்கி மூலம்: வால்பாறை எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் 6 அரசுப் பேருந்துகளில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. பேருந்து செல்லும் எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் இருந்தால் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கைத் தகவல் தெரிவிக்கப்படும். பேருந்தில் இருந்து இறங்கிச் செல்வோருக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

இந்தச் சேவைகளால் தற்போது வால்பாறைப் பகுதியில் யானைகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் குறைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதியிலும் யானை - மனிதன் மோதலை தடுப்பதற்கான முயற்சியிலும் ஈடுட்டனர்.

image

இது குறித்து சுற்றுச் சூழலுக்கான கிரீன் ஆஸ்கர் விருது பெற்ற ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் கூறும்போது, "சத்தியமங்கலம் வனப்பகுதி மிகப் பெரியது. அதன் திட்டங்கள் எப்போது சாத்தியமாகும் என தெரியவில்லை. சில ஆண்டுகள் எடுக்கலாம். வால்பாறையில் யானை - மனிதன் எதிர்கொள்ளலை தடுக்க எஸ்.எம்.எஸ்., சிகப்பு விளக்கு கோபுரங்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வெற்றிபெற்றன. சத்தியமங்கலம் பகுதியின் தன்மையை வைத்து புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

ஒரு யானை, தினமும் 150 கிலோ உணவு சாப்பிட்டு 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தினமும் அவ்வளவு உணவும் தண்ணீரும் ஒரே இடத்தில் கிடைக்காது. அதனால், அதைத் தேடி பல்வேறு இடங்களுக்குப் பயணித்துக் கொண்டே இருக்கும். அந்தப் பயணத்தின்போதுதான் மனிதனை, யானைகள் எதிர்கொள்ளும் சம்பவம் நடக்கிறது. பொதுவாக அனைத்து விலங்குகளும் மனிதனை விட்டு விலகி இருக்கவே விருப்பப்படும். யானைகளும் அப்படித்தான். முறையான நடவடிக்கைகள், திட்டமிடல் இருந்தால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் யானை - மனிதன் எதிர்கொள்ளலை எளிதாகக் கையாளலாம்" என்றார் அவர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close