புரெவி புயல் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் சேதமடையும் அபாய நிலை உள்ளதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியது. ஆலங்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, கரம்பக்குடி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவிலிருந்து தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
இதேபோல் கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பலமான காற்று வீசினால், கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளும், நாட்டுப் படகுகளும் சேதமடையும் அபாய நிலை உள்ளதாகவும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினமே அறிவித்திருந்த நிலையில், தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் மீன்வளத் துறையினரும் கடலோர காவல் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், வருவாய்த்துறையினர் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதோடு, கனமழையின் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முதல் மழையின் அளவு அதிகரித்துள்ள நிலையில், புயல் கரையைக் கடக்கும்போது மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, வங்கக்கடலில் உருவான புரெவி புயல் நேற்றிரவு இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்து, இன்று அதிகாலை நிலவரப்படி, பாம்பனுக்கு கிழக்கே 90 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Loading More post
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
நெல்லை: ஆஃப் ஆன மைக்; ராகுல் காந்தியின் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை
வைரல் புகைப்படம்: ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி