[X] Close >

டெல்லியை  உலுக்கிய  போராட்டங்கள்: தலைநகரை தொடர்ந்து தாக்கும் போராட்ட புயல்கள்

protests-that-rocked-Delhi--continue-protests-to-hit-the-capital

தற்போது விவசாயிகள் போராட்டத்தால் இந்தியாவின் தலைநகரமே ஸ்தம்பித்து நிற்கிறது, புதுடெல்லி நாட்டின் தலைநகர் என்பதால் அங்கே அரசியல் ரீதியான போராட்டங்கள் நடை பெறுவது என்பது வழக்கமான நிகழ்வு. சமீப வருடங்களில் டெல்லியை உலுக்கிய முக்கிய போராட்டங்கள் எவை என்றும் அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்றும் பார்க்கலாம்…


Advertisement

image

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரி கட்சிகள்,  தொழிற்சங்கங்கள், விவசாயிகள் என்று பல்வேறு பிரிவினர் பல காலகட்டங்களில் டெல்லியிலேயே பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். நாடாளுமன்ற முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று தலைநகரை உலுக்கியதும் உண்டு. சமீப வருடங்களில் டெல்லியை உலுக்கிய முக்கிய போராட்டங்கள் எவை என்றும் அவை என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்றும் பார்க்கலாம்...


Advertisement

2011 ஆம் வருடத்திலேயே அண்ணா ஹசாரே தலைமையில் ஊழலை எதிர்த்து பெரும் போராட்டம் டெல்லியில் நடந்தது. 2ஜி உள்ளிட்ட ஊழல்கள் மக்களை வெறுப்பில்தள்ளி இருந்த நிலையில், அண்ணா ஹசாரே ஜந்தர் மந்தர் பகுதியில் மேடைஅமைத்து உண்ணாவிரதத்தை தொடங்கியபோது சிறிது சிறிதாக சேர்ந்த மக்கள்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போய்,  அப்போது ஆட்சியில்இருந்த மன்மோகன் சிங் அரசை உலுக்கியது. அந்தப் போராட்டத்திலே தற்போதுடெல்லியின் முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால்,  தற்போதுபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி,  பாபா ராம்தேவ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றுவரை

கருதப்படுகிறது. இவர்கள் அனைவருமே அண்ணா ஹசாரே தலைமையில் போராடியசூழ்நிலையில், டெல்லியின் தற்போதைய துணை முதல்வரான மணீஷ் சிசோடியாஉள்ளிட்டோர் பொது மக்களை ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை மிகவும்சிறப்பான முறையிலே சட்டம் ஒழுங்கு சீர் குறையாமல் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடிய போதும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் நடத்தினார்கள் என்பது இன்றும் டெல்லி மக்களால் நினைவு கூறப்படுகிறது.

மேல்தட்டு மக்கள் போராட்டங்கள் என்றால் பொதுவாக பங்கேற்க மாட்டார்கள் என்ற நிலை மாறி அவர்கள் கூட அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு தங்களுடைய குடும்பத்துடன் வந்து அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஜந்தர் மந்தரில் முதலில் நடந்த அண்ணா போராட்டம் பின்பு அங்கே மக்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்ததன் காரணமாக டெல்லியில் உள்ள மிகப் பெரிய மைதானம் ஆன ராம்லீலா மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் பெரும் போராட்டம் நடத்தி பிறகு அரசு தனது பல்வேறு கோரிக்கைகளை ஒப்புக்கொண்ட பிறகு டெல்லியில் இருந்து அண்ணா ஹசாரே புறப்பட்டுச் சென்றார் என்பது இன்னமும் மக்களின் நினைவில் பசுமையாக இருக்கிறது


Advertisement

 image

2012ம் வருடத்தில் நிர்பயா படுகொலைக்கு பிறகு மீண்டும் பெரிய அளவிலேயே டெல்லியில் போராட்டம் வெடித்தது. ஒரு இளம்பெண் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது,  அதன் பின்னர் அவர் அந்த பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு,  குற்றுயிரும் குலையுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது ஆகியவை டெல்லி மக்களை உலுக்கியது. இந்த கொடூரமான  குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் வேண்டும்  இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் பெருமளவில் போராட்டம் நடத்தினார்கள். எந்த அரசியல் தலைவர்களையும் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்க விடாமல் பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  மாணவர்கள், பெண்கள் ஆகியோர் முன்னின்று நடத்திய இந்த போராட்டத்தின்போது குடியரசுத் தலைவர் இல்லம் முற்றுகையிடப்பட்டது, அதன் பிறகு இந்தியா கேட் பகுதியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வருகிறார் என்ற சூழ்நிலையில்,  அந்த குடியரசு தின அணிவகுப்பு நடக்கவிருந்த இந்தியா கேட் பகுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். கண்ணீர்புகை குண்டு வீச்சு, மற்றும் குளிர்ந்த நீரை பீய்ச்சி அடிப்பது, மற்றும்  தடியடி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு பாதுகாப்பு படை வீரர்கள் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

2018  ஆம் ஆண்டில்  இதற்கு அடுத்தபடியாக நடந்த முக்கியமான போராட்டம் "ஒன் ரேங்க், ஒன் பென்ஷன்" என்று சொல்லப்படும் பாதுகாப்புப்படை வீரர்கள் ஒரு பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நடத்திய போராட்டம்.  இந்தப் போராட்டம் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் 2018 ஆம் வருடம் நடந்தது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நரேந்திர மோதி அரசு பாதுகாப்பு படைகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் முன்னாள் படைவீரர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று போராட்டம் நடந்தது மிகப்பெரிய அளவிலே டெல்லியில் எல்லோரையும் வியக்க வைத்தது. மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடந்த இந்த போராட்டத்தின் காரணமாக பாதுகாப்பு படைகளில் ஒரு பதவியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள் அனைவருக்குமே ஒரே அளவில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்கிற தன்னுடைய வாக்குறுதியை பின்னர் ஒரு குழு அமைத்தது நிறைவேற்றியது மத்திய அரசு.

image

 2019 ஆம் வருடத்திலேயே குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்து கடுமையான CAA எதிர்ப்பு போராட்டம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. இதிலே ஷாஹின் பாக் போராட்டம் என்பது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. டெல்லி ஜாமியா கல்லூரியிலே தடியடி நடந்தது, பல பேருந்துகள் எரிக்கப்பட்டது மற்றும் பல வாரங்களாக ஷாஹின் பாக் பகுதியிலே சாலை மூடப்பட்டிருந்தது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அந்த சமயத்திலே ஒவ்வொன்றாக நடந்தன. இந்த போராட்டம் கரோனா பரவல் காரணமாக முடிவுக்கு வந்தாலும்,  அதே சமயத்திலே வட-கிழக்கு டெல்லி பகுதியிலே மதக்கலவரம் நடந்தது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பல நாட்கள் தொடர்ந்து போராடி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டியது டெல்லியில் மக்களை இன்னமும் அச்சுறுத்தும் நினைவுகளாக இருந்து வருகின்றன. ஒரு சில நாட்களுக்கு டெல்லியின் வட-கிழக்குப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அளவுக்கு தொடர்ந்து வன்முறை நடந்தது. அதுவும் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் டெல்லிக்கு வந்திருந்த சமயத்தில் இத்தகைய கலவரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, இது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம் அந்த சமயத்திலே டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

தலைநகரான டெல்லியில் மண்டல் கமிஷனை எதிர்த்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு மிகப் பெரிய போராட்டங்கள் நடந்திருந்தாலும் அதற்கு முன்பும் அவசர நிலையை எதிர்த்தும் இந்திரா காந்திக்கு எதிராகவும் போராட்டங்கள் பல நடந்திருந்தாலும், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சட்டம் ஒழுங்கு சூழ்நிலை காரணமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இதுபோன்ற போராட்டங்கள் நடந்தால் உடனடியாக மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படுகின்றன மற்றும் சாலைகள் மூடப்படுகின்றன. இதைத்தவிர ஒரு சமயத்திலே ஜந்தர் மந்தர் பகுதியில் அனைவருக்குமே போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு சில போராட்டங்கள் பல மாதங்கள் வரை நீடித்திருந்த சூழ்நிலை எல்லாம் மாறி தற்போது டெல்லியில் அனுமதி பெற்று மட்டுமே போராட்டம் நடத்த முடியும் அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்த முடியும் என்கிற சூழ்நிலை நடைமுறையில் இருந்து வருகிறது.

-புதுடெல்லியிலிருந்து கணபதி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close