[X] Close >

பிரசாந்த் கிஷோரா, பாஜகவா..? - மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா பின்னணி!

Prasanth-Kishore-or-BJP-Background-on-the-resignation-of-the-West-Bengal-Minister

மேற்கு வங்க அமைச்சர் சுவேந்து ஆதிகாரி திடீர் ராஜினாமா பின்னணியில் இருப்பது பிரசாந்த் கிஷோரா அல்லது பாஜகவா என்று எழுந்துள்ள விவாதம், மேற்கு வங்க தேர்தல் அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.


Advertisement

'தேர்தல் வித்தகர்' என அரசியல் கட்சிகளால் கருதப்படுபவரும், ஐபேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோருக்கும் திரிணாமுல் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுக்கும் சமீபகாலமாக நேரடி மோதல் தொடங்கியுள்ளது.


Advertisement

image

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வேலைப்பார்த்து வருகிறார் பிரசாந்த் கிஷோர். அதன்படி, தேர்தலுக்காக பல யுக்திகளை செயல்படுத்த தொடங்கியுள்ளார். அவரின் ஆலோசனைப்படி கட்சிப் பொறுப்புக்கு, பழைய தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய முகங்களுக்கு பதவி கொடுக்கப்பட்டு வருகிறது. இதுதான் பிரச்னைக்கு ஆரம்பப் புள்ளி.


Advertisement

பிரசாந்த் ஆலோசனையால் புதிய தலைவர்களுக்கு பதவி கிடைத்தாலும், திரிணாமுல் காங்கிரஸின் முக்கியப் பிரமுகர்களும், சில எம்.எல்.ஏ-க்களின் கட்சிப் பதவிகளும் காலியாகின. பதவி இழந்த அனைவரும் பிரசாந்த் மீது கனலைக் கக்கினர். பிரசாந்தை பொதுவெளியில் நடைபெறும் கூட்டங்களில் தற்போது நேரடியாக தாக்கி வருகின்றனர்.

image


திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நியாமத் ஷேக், "நாங்கள் பிரசாந்த் கிஷோரிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ள வேண்டுமா? மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், இதற்கு பிரசாந்த் கிஷோர் மட்டுமே பொறுப்பாவார்" என்று அதிரடியாக பேசினார்.

இதேபோல் இன்னொரு மூத்த தலைவரான எம்.எல்.ஏ மிஹிர் கோஸ்வாமியோ, "திரிணாமுல் காங்கிரஸ் உண்மையில் மம்தா பானர்ஜியின் கட்சியா? இந்தக் கட்சி ஒரு கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று கடுமையாக சாடினார்.

இவர்களின் மோதல் விமர்சன அளவோடு நிற்கவில்லை. இதோ, இப்போது ஓர் அமைச்சர் ராஜினாமா அளவுக்கு வந்துள்ளது. திரிணாமுலின் வலுவான தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான சுவேந்து ஆதிகாரி தற்போது ராஜினாமா செய்துள்ளார். தான் வகித்து வந்த போக்குவரத்துத் துறை மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

image

சுவேந்து ஆதிகாரி ஒரு காலத்தில் மம்தாவின் தீவிர விசுவாசி. மம்தாவை மேற்கு வங்கத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்தியது 2007-ல் நடந்த நந்திகிராம் கிளர்ச்சி. 2007 நவம்பர் 25 அன்று நந்திகிராமில் தனது கட்சி உறுப்பினர்கள் மீது அப்போதைய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அது கிளர்ச்சியாக வெடித்தது. இதுவே மம்தாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இந்தப் போராட்டங்களில் மம்தாவுக்கு அனைத்துமாக இருந்தவர் சுவேந்துதான். இந்தத் தொகுதியில்தான் தற்போது சுவேந்து எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார்.

இப்படி தீவிர விசுவாசியாக இருந்தவர், தற்போது மம்தாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். திரிணாமுல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர், ஹுக்ளி ஆற்று பாலங்கள் வாரியத் தலைவர் என்று மம்தாவால் பதவிகளின் உச்சத்தில் உட்கார வைக்கப்பட்டவர் சுவேந்து ஆதிகாரி. ஆனால், சமீபத்தில் அதாவது பிரசாந்த் கிஷோர் கட்சிக்குள் நுழைந்த பிறகு, சுவேந்துவிடம் இருந்து மாவட்டப் பொறுப்பு பதவியை பறித்தார் மம்தா. இதனால் அதிருப்தி அடைந்த சுவேந்து, மம்தா தன் மீது எடுத்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்தது பிரசாந்தே என நினைத்து அவரை விமர்சித்து வந்தார்.

image

அதேபோல், அதிருப்தியில் மூன்று நாள்களுக்கு முன்பு, தனது வாரியத் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்த சுவேந்து நேற்று தனது அமைச்சர் பதவியையும் அதிரடியாக ராஜினாமா செய்தார். இப்போது மம்தா தரப்பு சுவேந்துவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சுவேந்து ஆதிகாரி பூர்பா மெடினிபூர் மாவட்டத்திலிருந்து வந்தவர் என்றாலும், அவரது அரசியல் செல்வாக்கு முர்ஷிதாபாத், மால்டா, ஜார்கிராம், புருலியா, பாங்குரா மற்றும் பிர்பூம் ஆகிய மாவட்டங்களிலும் வெகுவாக இருக்கிறது. 2010 காலகட்டங்களில் திரிணாமுல் கட்சியை இந்த மாவட்டங்களில் சென்ற சேர்த்ததில் முக்கிய பங்கு சுவேந்துவுக்கு உண்டு. இதனால்தான் அவரின் செல்வாக்கை உணர்ந்து மம்தா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் ஏற்கெனவே கட்சி மாறத் தீர்மானித்துவிட்டார் என்று கூறுகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். இது ஒருபுறம் இருக்க, சமீபகாலமாக சுவேந்துவிடம் பாஜக தொடர்பில் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி மாறுவதற்காக தனது பதவிகளை ராஜினாமா செய்திருக்கலாம் எனவும் பேச்சும் அடிபட்டு வருகிறது. அதற்கேற்ப, மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில், "டிஎம்சி தலைமை சுவேந்துவை எப்படியும் பாஜகவுக்கு அனுப்புவார்கள். நாங்கள் எங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வேலைபார்த்து வருகிறார். இவரின் ஆலோசனை படியே தற்போது மம்தா செயல்பட துவங்கியுள்ளார். பிரசாந்த், மம்தாவின் மருமகனும், மக்களவை எம்.பி.-யுமான அபிஷேக் பானர்ஜியுடன் நெருக்கமாக இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வேலைபார்க்கத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close