[X] Close >

காஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை!

JK-authorities-release-list-of-land-beneficiaries-under-illegal-roshni-act

ஜம்மு - காஷ்மீரில் மிகப் பெரிய மோசடிகளில் ஈடுபட்ட ரோஷ்னி சட்ட ஊழல் குறித்து சிபிஐ விசாரணையின்போது பல முக்கியத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களின் பெயர்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

'ரோஷ்னி சட்டம்' என்றால் என்ன?

2001 ஆம் ஆண்டில், அப்போதைய முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா அரசு ரோஷ்னி (வெளிச்சம்) சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களுக்கு தேவையான நீர் மின் திட்டத்தை கொண்டுவர நிதி திரட்டும் வகையில் அரசு முடிவெடுத்தது. ரூ.25,000 கோடி வரை இந்த நீர் மின் திட்டங்களுக்கு நிதி தேவைப்பட்டதால் அதனை திரட்ட, அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ள மக்களுக்கு அரசு நிலங்களின் உரிமையை அப்போதைய சந்தை விலையில் வழங்கும் திட்டமே இந்த ரோஷ்னி சட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் வனப்பகுதி, சமநிலை பகுதி என அரசின் நிலங்கள் சுமார் 2,49,999 ஏக்கர் அதை ஆக்கிரமித்தவர்களுக்கே மாற்றப்பட்டது.


Advertisement

சந்தை விலையிலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டாலும், அரசு எதிர்பார்த்த ரூ.25,000 கோடி வருவாய் வரவில்லை. மாறாக, 76 கோடி ரூபாய் நிதி மட்டுமே அரசுக்கு கிடைத்தது. இந்த விவரமே பின்னாளில் சிஏஜி அறிக்கையின் மூலமே வெளிவந்தது. சிஏஜி அறிக்கையின் மூலம் திட்டத்தின் முறைகேடு அம்பலமாகியது. 

 image

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஃபரூக் அப்துல்லா அரசோடு இந்த ஊழல் நின்றுவிடவில்லை. 2007 ஆம் ஆண்டில், அந்தச் சட்டத்தின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டன. இதன்மூலம் விவசாய நிலங்கள் கிட்டத்தட்ட இலவசமாக வழங்கப்பட்டன. நகர்ப்புற நிலங்கள் வெகுமதி, தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் என்ற பெயரில் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டன. மேலும், விவசாய மற்றும் வன நிலங்களை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த விதிகள் அனுமதித்தன. அப்போது ஆட்சி நடத்தியது குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு.


Advertisement

 image

ஃபருக் அப்துல்லா

இதேபோல் முப்தி முகமது சையத் தலைமையிலான பிடிபி அரசும் இந்த ஊழலில் தொடர்பு வைத்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே, கடந்த 2018ம் ஆண்டு ஆளுநர் சத்யபால் மாலிக் இந்தச் சட்டத்தை நிறுத்தி வைத்தார். மேலும், குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே பலன்கள் கிடைக்கும் வகையில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு, முறைகேடு நடந்திருக்கிறது எனக் கூறி, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போதைய தலைமை நீதிபதி கீதா மிட்டல், ராஜேஷ் பின்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணை, நடத்தி, ரோஷ்னி சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்ததோடு, முறைகேடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்தச் சட்டத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தையும் திருப்பி தர உத்தரவும் பிறப்பித்தனர். அன்று முதல் இந்த வழக்கினை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. 

 image

ஹசீஃப் டிராபு

முக்கியப் புள்ளிகள் அம்பலம்!

இதற்கிடையே, தற்போது ரோஷ்னி சட்டத்தின் கீழ் பயனாளிகளின் பட்டியலை ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், முன்னாள் மாநில அமைச்சர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

காஷ்மீரின் முன்னாள் நிதியமைச்சர் ஹசீப் டிராபு, முன்னாள் உள்துறை அமைச்சர் சஜ்ஜாத் கிச்லு, முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜீத் வாணி மற்றும் அஸ்லம் கோனி, தேசிய காங்கிரஸ் தலைவர் சயீத் அகூன் மற்றும் முன்னாள் வங்கித் தலைவர் எம்.ஒய் கான் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். 

image

 

காஷ்மீரின் புகழ்பெற்ற ஹோட்டல் வணிகர் முஷ்டாக் அகமது சாயா தனது பெயரில் இந்தச் சட்டத்தால் நிலம் வாங்கியுள்ளார். இதேபோல், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி முகமது ஷாஃபி பண்டிட் தனது மனைவியின் பெயரில் நிலத்தை எடுத்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் சயீத் அகுன், முன்னாள் வங்கித் தலைவர் எம்.ஒய் கான், முன்னாள் உள்துறை அமைச்சர் சஜ்ஜாத் கிச்லூ, முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜீத் வாணி, அஸ்லம் கோனி ஆகியோரும் பல ஏக்கர் நிலங்களை முறைகேடாக வாங்கியுள்ளனர். 

இதுதொடர்பாக பேசியுள்ள சிபிஐ அதிகாரி ஒருவர், "விசாரணையின்போது, அரசின் பல முன்னாள் அமைச்சர்கள் இந்தச் செயலைப் பயன்படுத்தி மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த மோசடி லிஸ்ட்டில் டாப்பில் இருப்பவர் ஹசீப் டிராபு. இவர் பிடிபி அரசின் நிதியமைச்சராக இருந்துள்ளார். அவருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிலம் கிடைத்தது. மேலும் அவர் மனைவி, உறவினர்கள் பெயரிலும் நிலம் எழுதியுள்ளார். இதில் பல இடங்களிலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது காஷ்மீரில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close