[X] Close >

தேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி

tamilaruvi-manian-specail-interview

கூட்டணியில் சேர்ந்து ஜெயிக்க வைத்தால் ’கிங்’ மேக்கர் என்பதுபோல் கூட்டணிகளை ஒன்று சேர்க்கும் ‘லிங்க்’ மேக்கராக செயல்பட்டு வந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினி இப்போதுவரை அரசியல் கட்சி ஆரம்பிக்காததால் கப் சிப் மணியனாக அமைதி காக்கிறார். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,


Advertisement

உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்காமல் ரஜினி ஒதுங்கி இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

’நான் அரசியலை விட்டுவிட்டேன், கட்சியே தொடங்கமாட்டேன்.. தேர்தலில் நிற்கமாட்டேன்.. ஒதுங்கிவிட்டேன்’ என்று அவர் இதுவரை சொல்லவில்லை. தேர்தல் மே மாதம்தான். இது என்ன அந்த காலமா? டிஜிட்டல் யுகம். அரசியலுக்கு வர அவருக்கு இரண்டு மாதம் போதுமே? அதனால், அவர் வரலாம். ஆனால், இப்போது எதையும் உறுதியாக சொல்ல முடியாது. அவராக ’நான் அரசியலுக்கு வரவில்லை. பொதுவாழ்க்கைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை’ என்று சொல்கிற வரை அவரைப் பற்றி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. நான் உட்பட.


Advertisement

image

அவரின், அறிவிப்பிற்குப் பிறகு பேசினீர்களா?

அவருக்கும் எனக்கும் இருக்கக்கூடிய அன்பும் நட்பும் மிகவும் ஆழமானது. இன்னும் அழுத்தமாக மேம்பட்டிருக்கிறது. எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், எதுவாக இருந்தாலும் கருத்து சொல்ல எனக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால், இப்போது, நடந்திருப்பது முடிவு அல்ல.


Advertisement

உடல்நிலையைக் காரணம் காட்டியிருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

உடல்நிலைக்குறித்து சொன்ன அனைத்துமே உண்மைதான். பல அரசியல் கட்சித் தலைவர்கள் உடலில் பாதிப்புகள் இருப்பதை மறைப்பார்கள். ஆனால், ரஜினி எந்த வகையிலும் உள்ளொன்று புறமொன்று வைக்கவில்லை. உண்மையை மக்களிடம் உணர்த்தியுள்ளார். அவரின், நேர்மையை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

கட்சி ஆரம்பிப்பது குறித்து ரஜினிதான் முடிவு செய்யவேண்டும். அவர், அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் வருத்தமுமில்லை. அரசியல் தொழிலாக இருப்பவர்களுக்குத்தான் இவரை நம்பி இருக்கிறோம், அவரை நம்பி இருக்கிறோம் என்ற எண்ணம் வரும். எனக்கு அப்படி எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் வாழ்பவர்களுக்கு எந்தக் காலத்திலும் ஏமாற்றமில்லை. காந்தியவாதி என்பதால் நேர்மையான முறையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். புத்தகங்களோடு நேரத்தை செலவிடுகிறேன். காலம் அனுமதித்தால் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவேன்.

image

தமிழகம் வந்த அமித்ஷா ரஜினியை பாஜகவுக்குள் இழுக்க குருமூர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறதே?

அதுகுறித்து எதுவும் தெரியாது. என்ன பேசினார்கள் என்பதும் தெரியாமல் கருத்து சொல்ல விரும்பவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதே?

முன்பு தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக அரசு ஊழல்மிக்க அரசு என்றார். அதே அமித்ஷா, இப்போது ’இந்தியாவிலேயே தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடக்கிறது’ என்கிறார். இதே அமித்ஷா நாளை மாற்றி பேசமாட்டார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அரசியலில் ஒருவாரம் என்பதே மிக நீண்ட காலம். அமைதியாக பார்த்துகொண்டிருப்பது ஆழ்ந்த அரசியல் பார்வை.

காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு பழைய காங்கிரஸ்காரன் என்ற முறையில் வருத்தப்படுகிறேன். செத்துப்போன குதிரையை எவ்வளவு முறை சவுக்கால் அடித்தாலும் எழும்புமா?

image

’கலைஞரிடம் கண்ணீர் விட்டு வீடு வாங்கினீர்கள்’ என்று உங்கள் மீது திமுகவினர் குற்றச்சாட்டு வைத்தார்களே?

கலைஞர் முதல்வராக இருந்தபோது திட்டக்குழுவில் நான் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டதால், 30 மாதங்கள் பணியாற்றினேன். ஈழப்பிரச்சனையின் போது அவரது போக்கு சரியில்லை என்று பின்பு ராஜினாமா செய்து வந்துவிட்டேன். அந்த 30 மாதத்தில் ஒருநாள் கூட அரசு தொலைபேசியை ஒருமுறைக்கூட பயன்படுத்தியதில்லை. அவர்கள் கொடுத்த காரை கீழ்ப்பாக்கம் வீட்டுக்கும் எழிலகம் அலுவலகத்திற்கு செல்வது மட்டுமாகத்தான் பயன்படுத்தினேன். அதனைத்தாண்டி ஒரு மீட்டர்கூட எங்கும் நகர்ந்ததில்லை.

    திட்டக்குழுவில் இருந்த ஐந்து பேரில் என்னைத்தான் அடிக்கடி அழைப்பார் கருத்துகளை கேட்பார். 15 நாட்களுக்கு ஒருமுறையாவது சந்தித்துவிடுவேன். அப்படி சந்திக்கும்போது, ஒருநாள் கேஷுவலாக ‘மணியன் உங்க வீடு எங்க இருக்கு? சொந்தவீடா?’ என்றார்.

 ”இல்லை அய்யா. இது எனது 11 வது வாடகை வீடு. பெரம்பூரில் இருந்த சொந்த வீட்டை எனது சகோதரிகளுக்கு விற்றுதான் அப்பா திருமணம் செய்து வைத்தார். நான் திருமணம் செய்யும்போது வீடு கிடையாது. இப்போதுவரை வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன்” என்றதற்கு ’திட்டக்குழு உறுப்பினர் என்பதால் உங்களுக்கு வீடு ஒதுக்கீடு உண்டு’ என்றார்.

“எனக்கென்று யாரிடமும் கேட்டு பழகியதில்லை. நீங்கள் புத்தகங்களை நேசித்து வாசிக்கக்கூடியவர் என்பதால் என்னிடம் 5000 புத்தகங்கள் உள்ளது. அடிக்கடி வீடு மாற்றும்போது, இதுவே பெரிய வேலையாக உள்ளது. நான் சாகும்வரை புத்தகங்கள் ஒரே இடத்தில் இருக்கும்படி ஒரு வாடகை வீடு அரசின் சார்பாக கிடைத்தால், வாடகை கொடுத்துக்கொண்டு வசிப்பேன்” என்றேன்.

அப்படி எனக்கு கொடுக்கப்பட்ட வீடுதான், இப்போது இருப்பது. 13 வருடங்கள் ஆகிறது. நான் வரும்போது வீட்டு வாடகை 4 ஆயிரம் ரூபாய். இப்போது, 20 ஆயிரத்து 350 ரூபாய் கட்டுகிறேன். கீழ்ப்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி வாடகை விட்டால் எவ்வளவு வாடகையோ, அப்படித்தான் வாங்குகிறார்கள். இதற்கே, இது மிகவும் பழைய வீடு. செருப்பு இல்லாமல் போனாலே அழுக்கு ஒட்டிக்கொள்ளும். எனக்கு வரக்கூடிய பென்ஷன் 26 ஆயிரம் ரூபாயில் 20 ஆயிரத்து 350 ஆயிரம் ரூபாய் வாடகைக் கொடுத்துவிட்டு மீதியை உணவுக்காக செலவிடுகிறோம். அதனால், இந்த வீடு என்பது இலவசம் அல்ல. வாடகை வீடு.

    நான் யாரிடமும் இலவசமாக எதையும் பெற்றவனில்லை. எந்த அரசியல் கட்சித் தலைவரிடமாவது மணியன் ஒரே ஒரு ரூபாய் வாங்கினான் என்று சொன்னால் பொதுவெளியில் தூக்கில் தொங்கத் தயாராக இருக்கிறேன், அரசியல் எனக்கு பிழைப்பல்ல. எனக்கும், குடும்பத்தினருக்கும் கிடைக்கும் உணவை எனது வியர்வையிலிருந்து கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். எனது 40 வயதுவரை எல்லா இடத்திற்கும் சைக்கிளில்தான் செல்வேன். அதன்பிறகு, ஸ்கூட்டரை 20 வருடமாக வைத்திருந்தேன். 24 வருடம் ஆசிரியராக பணிபுரிந்ததற்கு வந்த பணத்தில் பழைய் மாருதிகாரை வாங்கினேன். தமிழக அரசியல்வாதிகள் யார் எப்படி? இப்போது எப்படி மாறிவிட்டார்கள் என்பதை பகீரங்கமாக என்னால் சொல்ல முடியும். ஆனால், என்னை யாரும் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால், எனது வாழ்க்கை திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறது.

- வினி சர்பனா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close