டெல்டாவில் 2வது நாளாக பரப்புரை: தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி!

Udhayanidhi-Stalin-Election-campaign-in-delta-districts
டெல்டா மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்றார். அதேபோல், வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபருடனும் அவர் கலந்துரையாடினார்.
 
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நூறு நாள் தேர்தல் பிரசாரத்தை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தொடங்கினார்.
 
image
 
இரண்டாவது நாளான நேற்று நாகை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மத்தியில் உரையாற்றியதோடு, மீனவர்களுடன் படகில் பயணித்தார். அந்தப் படகை ஆர்வத்துடன் இயக்கியும் பார்த்தார். அப்போது, கடல் பயணத்தின் போது சந்திக்கும் சவால்கள், வெளிநாட்டு ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் போன்ற நெருக்கடிகள் குறித்து உதயநிதி கலந்துரையாடினார்.
 
பின்னர் கரை திரும்பிய உதயநிதி மற்றும் திமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதைக் கண்டித்து காவல்துறையினரின் வாகனத்தை வழிமறித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் உதயநிதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
 
 
image
 
பின்னர் வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் பிரபாகர் அடிகளாருடன் காணொளி வாயிலாக உதயநிதி கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த அவர், தருமபுரம் ஆதீன மடத்தில் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது குருமகா சந்நிதானம் உதயநிதி ஸ்டாலினுக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார்.
 
image
 
தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் என்ற மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட அதனை உதயநிதி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்லூரி மாணவிகள் உடனான சந்திப்பில் பங்கேற்று அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உதயநிதி பதிலளித்தார்.
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement