[X] Close >

மேடையில் அமித் ஷா... பாஜக உடனான கூட்டணியை அதிமுகவையே உறுதி செய்யவைத்த வியூகம்!

தான் மேடையில் இருக்கும்போதே கூட்டணி குறித்த அறிவிப்பை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய அதிமுகவின் இரண்டு தலைமைகளையும் கொண்டு அறிவிக்க வைத்துவிட்டார் என்பதே இன்றைய அமித்ஷா வருகையின் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Advertisement

image

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான அமித் ஷா நவம்பர் 21 ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்றதுமே தமிழக அரசியல் களத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் இடையே லேசான முரண்பாடு இருப்பதாக சமீப காலமாக பேசப்பட்டு வரும் நிலையில், அமித்ஷா வின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதிமுக - பாஜக இடையிலான முரண்பாடுகளை சரிசெய்து கூட்டணியை அவரது வருகை உறுதி செய்யும் என்றே பேசப்பட்டது.


Advertisement

ஏனெனில், உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா அவருடைய துறைக்கு தொடர்பில்லாத மெட்ரோ ரயில் திட்டம், நீர் தேக்கம் அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்பான நிகழ்ச்சியில் தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பங்கேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அமித் ஷாவின் வருகைக்கு பின்னால் ஏதேனும் ஓர் உறுதியான 'திட்டம்' இருக்கிறது என்றே பலரும் கருத்து தெரிவித்தனர்.

அமித் ஷாவின் வருகை அறிவிப்பு வெளியான உடனே அ.தி.மு.க. அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது. இது, மேலும் தமிழக அரசியல் சூழலை பரபரப்பாக்கியது. அந்தக் கூட்டத்தில் கூட்டணி குறித்து ஏதேனும் நிச்சயம் ஆலோசிக்கப்படும் என்றே கூறப்பட்டது. அதேபோல், ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியின் பேச்சும் காட்டமாகவே இருந்தது.

image


Advertisement

"மத்திய அரசுடன் நாம் இணக்கமான உறவு கொண்டிருக்கிறோம். பாஜக அரசைப் பொறுத்தமட்டில் நாம் ஆட்சி அமைக்க உதவி செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்களுக்கு உதவி செய்தோம். அதைத் தவிர மத்திய அரசு நாம் கேட்ட நிதியை தரவில்லை என்ற குறை ஒருபக்கம் இருக்கிறது. மற்றபடி கண்மூடித்தனமாக நாம் அவர்களுக்கு பயப்படுவதோ, அச்சப்படுவதோ இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு நடந்தபோது ஒரு தொகுதி அவர்கள் மிக உறுதியாக கேட்டார்கள். நான் அது முடியாது என்று சொல்லி வெளிநடப்பு செய்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய உரிமைகளை நாம் எப்போதும் விட்டுக் கொடுத்தது இல்லை" என்று முதல்வர் பழனிசாமி பேசியதாக கிடைத்த உறுதியான தகவலும் அதிமுகவினருக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. இதனால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமையுமா? அப்படி அமைந்தாலும் பாஜகவுக்கு அதிக தொகுதி ஒதுக்கப்படுவது சந்தேகமே என்றும் பார்க்கப்பட்டது.

இத்தகைய சூழலில்தான், உள்துறை அமித் ஷா இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால், பாஜக தொண்டர்களுக்கு இணையாக அதிமுக தொண்டர்களின் கூட்டமும் அலைமோதியது. அமித் ஷா வருவதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் என 8 அதிமுக தலைவர்கள் அமித் ஷாவை வரவேற்க சென்றிருந்தனர். சென்னை லீலா பேலஸில் தங்கிருந்த அமித் ஷாவை தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.

image

கலைவாணர் அரங்கில் நடைபெறுவது அரசு திட்ட நிகழ்வு என்பதால், அதில் நிச்சயம் கூட்டணி குறித்த தகவல்கள் ஏதும் இடம்பெறாது. அரசு திட்ட நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அமித் ஷாவை அதிமுக தலைமைகள் சந்திந்த பிறகே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால், கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மெட்ரோ ரயில் திட்டம் அடிக்கல் நாட்டுதல் விழாவிலேயே ட்விட்ஸ் கலைந்துவிட்டது. ஆம், அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி குறித்த அறிவிப்பை நிகழ்ச்சியில் முதலில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உடைத்து பேசிவிட்டார். வருகின்ற தேர்தல்களிலும் எங்களது கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக தெரிவித்தார். பின்னர் பேசிய தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் பேசியதை வழிமொழிந்தார்.

image

அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லவர் என்று பாஜகவினரால் அமித் ஷா புகழப்பட்டு வருகிறார். கூட்டணிகளை அமைப்பது, எதிரணியின் கூட்டணிகளை உடைப்பது, தேவையான அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும் யுக்திகள் மூலம் ஆட்சியை பிடிப்பது என்பது உள்ளிட்ட பல மேஜிக்குகளை செய்து வருகிறார் அமித் ஷா. அந்த வகையில், தான் மேடையில் இருக்கும்போதே கூட்டணி குறித்த அறிவிப்பை அதிமுகவின் இரண்டு தலைமைகளையும் கொண்டு அமித் ஷா அறிவிக்க வைத்துவிட்டார் என்றே தற்போது அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.

தமிழக பாஜக - அதிமுக இடையே ஆன கூட்டணி தற்போது உறுதியாகிவிட்டது. இனி, பாஜகவுக்கு சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கப்போகிறது என்பதுதான் அடுத்த கேள்வியாக உள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையும் அமித் ஷாவின் இந்தப் பயணத்திலேயே உறுதிசெய்யப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close