[X] Close >

"அவர் விபத்தில் இறந்துவிட்டார்" - லோன் ஆப் வசூல்காரர்களின் புதிய மோசடி!

Loan-app-violations-over-human-rights-ruins-salaried-individuals

செல்போனில் தரவிறக்கம் செய்யப்படும் "லோன் ஆப்" மூலம் கடன் கொடுக்கும் நிறுவனங்களின் மோசடியும் மனித உரிமை மீறலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது.


Advertisement

ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும். இப்போதெல்லாம் சிறிய மற்றும் பெரிய தொகை லோன்கள் ரொம்ப ஈசியாகவே கிடைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய பலம் என்றாலும் இந்த "லோன் ஆப்"கள் மூலம் மிகப்பெரிய மோசடியும் நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு தெரியாது. எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை, எந்த பேப்பரையும் நீட்ட வேண்டியதில்லை, மொபைல் ஆப் ஒன்றே போதும், கடன் வாங்குவதற்கு.

image


Advertisement

ஆம் ஆதாரும், பான் அட்டையும் இருந்தாலே போதுமானது. இதை படிப்பதற்கே கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYCயை மட்டும் அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் கொடுப்பதுதான் இதன் நோக்கம். கடன்கள் ரூ.2000 முதல் ரூ.30000 முதல் எளிதாக கிடைத்துவிடும். திரும்ப செலுத்தும் காலம் 7 நாள் முதல் 15 நாள் வரை இருக்கும். ஆனால், குறிப்பிட்ட நாளுக்குள் செலுத்த முடியவில்லை என்றால் அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கும்.

லோன் வாங்கியவருக்கு 7ஆம் நாள் காலை தொலைப்பேசியில் அழைப்பார்கள். 1 மணிக்குள்ளாக லோன் பணத்தை அடைக்க வேண்டும் என்பார்கள். அப்போது உங்களிடம் பணம் இல்லை என்றால் சிக்கல்தான். உங்கள் புகைப்பட்டை வைத்து அதில் "Loan Defaulter" அல்லது "Fraud" என போட்டோஷாப் செய்து உங்களது செல்போனில் இருக்கும் நபர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிடுவார்கள். மேலும் அவர்களை அழைத்து இவர் லோன் கட்டவில்லை உங்கள் எண்ணை அவர்தான் கொடுத்தார் என குழப்பத்தை விளைவிப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள், ஆங்கிலம் சுமாராகத்தான் தெரியும். ஆனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்கள்.

image


Advertisement

நீங்கள் செல்போனில் லோன் ஆப்களை தரவிறக்கம் செய்யும்போதே உங்களது அனைத்து தொடர்பு எண்களையும் எடுத்து வைத்துக்கொள்வார்கள். இதனால் ராண்டமாக சில நம்பர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "நீங்கள் ஒரு மோசடிக்காரர் உங்களை அவர் வாங்கிய கடனுக்கு காரண்டர்" என பொய் கூறுவார்கள். இதனால் உறவுகளுக்கிடையே சிக்கலை ஏற்படுத்துவார்கள். நாமும் மானத்துக்கு பயந்து பணத்தை திருப்பி கட்டிவிடுவோம் என்ற காரணம்தான் அது. மொத்தத்தில் போன் செய்பவர்களுக்கு வசூல் செய்வது மட்டுமே இலக்கு.

இப்போது இந்தக் கும்பல் நூதனமான மோசடியையும் மன உளைச்சலையும் செய்ய ஆரம்பித்து இருக்கிறது. அதாவது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து செயல்படும் "லோன் ஆப்" நிறுவனத்தின் பெயர் "More Rupee". இந்த ஆப் மூலம் கடந்த மாதம் ஒருவர் ரூ.2 ஆயிரம் கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். அவரின் வங்கிக் கணக்குக்கு ரூ.1350 வரவு கைப்பட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு திருப்பி செலுத்த 7 நாள் அவகாசம் தரப்பட்டது. அவரும் 7 ஆம் நாளில் ரூ.2000 கட்டி கடனை திரும்பக் கட்டிவிட்டார்.

image

இதனையடுத்து அவர் மீண்டும் கடன் பெற விண்ணப்பிக்கிறார். அவருக்கு ரூ.2500 கடன் அப்ரூவ் செய்யப்பட்டு, ரூ.1850 அவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 7 நாளில் அவரால் மீண்டும் கட்ட முடியவில்லை. இதனையடுத்து ரூ.850 வட்டி மட்டும் கட்டினால் 7 நாள் அவகாசம் கொடுக்கப்படும் என லோன் ஆப் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ரூ.850 கட்டுகிறார். ஆனால் மறுநாளே ரூ.2000 செலுத்த வேண்டும் என நாள் ஒன்றுக்கு 10 முறை கால் செய்து டார்ச்சர் செய்துள்ளனர்.

அவரும் சம்பளம் வரவில்லை வந்தவுடன் கட்டிவிடுகிறேன் என கெஞ்சியிருக்கிறார். கால் செய்பவர்கள் தகாத வார்த்தையில் பேசியதால் மனமுடைந்த நபர் அத்துடன் தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்கிறார். லோன் ஆப் நிறுவனத்தின் வசூல் காரர்கள் ஏதேதோ முயற்சி செய்கிறார்கள் சம்பந்தப்பட்ட நபரை தொடர்புக்கொள்ள. ஆனால் இயலவில்லை. இதனால் விபரீத முயற்சியில் அவர்கள் இறங்குகிறார்கள். கடன் வாங்கியவரின் தொடர்பில் இருக்கும் நம்பர் ஒன்றுக்கு கால் செய்கிறார்கள்.

image

உதாரணத்துக்கு "ரமேஷை உங்களுக்கு தெரியுமா"? எதிர்தரப்பில் இருப்பவர்கள் தெரியும் என சொல்லிவிட்டால் போதும் "ரமேஷுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. சம்பவ இடத்திலேயே ஆல் அவுட், அவரின் உறவினர்களிடம் சொல்லிவிடுங்கள்" என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து இருக்கிறார்கள். இதனால் பதற்றமடைந்த உறவினர்களும் நண்பர்களும் சம்பந்தப்பட்டவரின் மனைவி, அப்பா, அம்மா, தங்கைக்கு கூற ரூ.2000 கடனுக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் துடிக்கவிடும் மோசமான வசூல் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்கள்.

இது குறித்து நாம் மேற்கொண்ட களஆய்வில். வசூலுக்காக கால் செய்பவர்கள் எவருக்கும் சட்ட அறிவோ முறையான பயிற்சியோ கிடையாது. அவர்களின் ஒரே குறிக்கோள் குறிப்பிட்ட நேரத்துக்குள், குறிப்பிட்ட நாளில் எப்படியாவது மோசமாக பேசி பணத்தை வசூல் செய்திட வேண்டும் என்பதேயாகும். கால் செய்பவர்கள் ஒருபோதும் அவர்களின் நிஜப் பெயரையோ எந்த ஊரையோ கூறமாட்டார்கள். லோன் ஆப் நிறுவனங்களின் முகவரியும் சொல்லமாட்டார்கள். சட்டத்துக்கு புறம்பான வேலையை செய்கிறோம் என தெரிந்துக்கொண்டே இதை செய்வதுதான் சோகம். இதுபோன்ற லோப் ஆப் நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. ஆனால் புனே,ஒடிசா,ஹைதராபாத்,பெங்களூரு,டெல்லி ஆகிய நகரங்களிலேயே அதிகம் செயல்படுகிறது.

image

இது குறித்து காவல்துறை சைபர் குற்றங்கள் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது "முதலில் இதுபோன்ற லோன் ஆப்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்கள் வந்தால் தகுந்த ஆதாரத்துடன் இணையத்திலோ அல்லது நேரிலோ சைபர் குற்றப் பிரிவில் புகார் அளிக்கலாம். இதுபோன்ற வசூல்காரர்களை கண்டு பயப்பட தேவையில்லை. நம்முடைய பயம்தான் அவர்களின் முதல் ஆயுதம். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனைகளையும் பெறலாம்" என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close