[X] Close >

கருப்பு வெள்ளை காலத்தில் கலர்ஃபுல் நாயகனாக ஜொலித்த ஜெமினி கணேசன்

Today-is-the-100th-birthday-of-romantic-king-Gemini-Ganesan

தமிழ் திரை உலகில் தனக்கென தனிபாதையை வகுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். 


Advertisement

image


கருப்பு வெள்ளை காலத்தில் கலர் ஃபுல்லான கதாநாயகனாக தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் கணபதி சுப்ரமணியன் சர்மா என்ற ஜெமினி கணேசன். காதல் காட்சிகளில் இளைஞர்களின் மனதை சுண்டியிழுக்கும் தனது நடிப்பால் காதல் மன்னன் என்ற பெயர்பெற்ற நடிகர் ஜெமினி கணேசனின் 100-வது பிறந்தநாள் இன்று. அவரை நினைவு கூர்வோம்...


Advertisement

நடிகர் ஜெமினி கணேசன், புதுக்கோட்டையில் வசித்த ராமசாமி ஐயர் கங்கம்மாள் தம்பதிக்கு 1920-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி மகனாகப் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்த கணேசன் தனது சித்தப்பா நாராயணனிடம் வளர்ந்தார். 

image
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த இவர், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களை தேர்வு செய்யும் கேஸ்டிங் டைரக்டராக பணியாற்றினார்.

ஜெமினி கணேசன் முதன் முதலாக 1947ஆம் ஆண்டு மிஸ்மாலினி என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின்பு 1953ஆம் ஆண்டு வெளியான பெண் என்ற படத்தில் அஞ்சலி தேவிக்கு ஜோடியாக கதாநாயகனாக தனது நடிப்பை தொடர்ந்து, தென்னக மொழிகள் மற்றும் இந்தி மொழி உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். 


Advertisement

image


ஜெமினி கணேசன் முன்னணி நடிகராக இருந்தாலும் மற்ற நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பாசமலர், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்ற பல படங்களில் சிவாஜியுடன் போட்டி போட்டு நடித்துள்ள இவர் முகராசி என்ற படத்தில் மட்டுமே எம்.ஜி.ஆர் உடன் இணைந்து நடித்துள்ளார்.

இயக்குனர்களின் நடிகனாக விளங்கிய இவர், கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் கற்பகம், சித்தி, பணமா பாசமா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய கல்யாண பரிசு, மீண்ட சொர்க்கம், சுமைதாங்கி போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார். 

image

சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஜெமினி கணேசன், இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய தாமரை நெஞ்சம், பூவா தலையா, இரு கோடுகள், வெள்ளி விழா, புன்னகை, நான் அவனில்லை, போன்ற பல படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம்வந்த சாவித்திரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி, ஜெயந்தி ஆகியோர் ஜெமினி கணேசனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். சாவித்திரியுடன் அவர் நடித்த முதல் படம் ‘மனம்போல மாங்கல்யம்‘. இதன் படப்பிடிப்பு நடக்கும்போதே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் இணைந்து பாசமலர், பாத காணிக்கை, ஆயிரம் ரூபாய், யார் பையன், போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.

 

image


பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஜெமினி கணேசன் இரண்டு படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். தாயுள்ளம் என்ற படத்தில் ஆர்.எஸ்.மனோகரன் கதாநாயகனாகவும் ஜெமினி கணேசன் வில்லனாகவும் நடித்துள்ளனர் அதேபோல வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தின் இறுதியில் வில்லனாக அறியப்படுவார்.

நான் அவனில்லை என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்துள்ளார் ஜெமினி கணேசன். இதயமலர் என்ற படத்தை தாமரை மணாளன் என்பவருடன் இணைந்து இயக்கியுள்ள இவர் இந்த படத்தில் லவ்ஆல் என்று தொடங்கும் ஒரு பாடலையும் தனது சொந்தக் குரலில் பாடி பாடகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

image


ஜெமினி கணேசன் பாப்ஜி என்ற அலமேலு, புஷ்பவல்லி, சாவித்திரி ஆகியோருடன் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி, பானுரேகா, ராதா, விஜய சாமுண்டீஸ்வரி ஆகிய ஏழு மகள்களும் சதீஷ் கிருஷ்ணா என்ற மகனும் பிறந்தனர்.

தனது மிகச் சிறந்த நடிப்பால் பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம், நடிகர் மன்னன், காதல் மன்னன் போன்ற விருதுகளையும் பட்டங்களையும் வாங்கியுள்ள ஜெமினிகணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி காலமானார். தனது தனித்துவம் மிக்க நடிப்பால் அனைத்து வயது ரசிகர்களையும் தன்னகத்தே கொண்டிருந்த காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பிறந்த நாளான இன்று அவரை நினைவுகூர்வோம். படைப்பாளிகள் மறையலாம் ஆனால் அவர்களின் படைப்புகள் என்றும் மறைவதில்லை.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close