"மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனித் தேர்வா?" - ஸ்டாலின் கொந்தளிப்பு

Why-only-11-colleges-have-separate-exams-instead-of-NEET--MK-Stalin

மாநிலங்களில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்விகளுக்குச் சேர்க்கப்படும் அரசு மருத்துவர்களே நீட் தேர்வு எழுதித்தான் சேர வேண்டும் என்று கெடுபிடி செய்யும் பா.ஜ.க. அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகளில் மட்டும் நீட் வேண்டாம் என்று கூறி, தனி நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன்?" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

மேலும், "மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் தனி நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளவும், தனியான இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்திக் கொள்ளவும் மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கிவிட்டதால், தமிழகத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

image


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்றைக்கு மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்பது ஓர வஞ்சகத்தின் உச்சக்கட்டமாகும்.

மாநிலங்களில் உள்ள முதுநிலை மருத்துக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், தனி இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று மத்திய அரசே உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது. மாணவர் சேர்க்கை தகுதி (மெரிட்) அடிப்படையிலேயே நடக்கும் என்று விதண்டாவாதம் செய்தார்கள். ஏன், இட ஒதுக்கீடே அளிக்க முடியாது என்று இடஒதுக்கீடு கொள்கைக்கே, சமூகநீதிக்கே எதிராக வாதிட்டார்கள். பிறகு உயர் நீதிமன்ற உத்தரவினால், 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொண்டு விட்டு, அதில் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை தகுதி அடிப்படையில் மட்டுமே என்று மத்திய பா.ஜ.க. அரசு கூறியது. அதைச் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. அரசு அவ்வாறே அரசாணையும் வெளியிட்டது.

 image


Advertisement

இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பிசுபிசுக்க வைக்க இவ்வளவு கூத்துகளையும் நடத்தி விட்டு, இப்போது தங்களின் நிர்வாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அந்தந்த நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது என்றால், ஏன் இந்த முரண்பாடு?

அரசியல் சட்டத்தால் இந்தியா முழுமைக்கும் கூறப்பட்டுள்ள சமூகநீதி, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் மட்டும் எப்படி வேறுபடும். மாநிலங்களில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்விகளுக்குச் சேர்க்கப்படும் அரசு மருத்துவர்களே நீட் தேர்வு எழுதித்தான் சேர வேண்டும் என்று கெடுபிடி செய்யும் மத்திய பா.ஜ.க. அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகளில் மட்டும் நீட் வேண்டாம் என்று கூறி, தனி நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன்?.இடஒதுக்கீட்டுக் கொள்கையை  நசுக்கி அடியோடு நாசப்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று  பா.ஜ.க. அரசு இப்போது அனுமதி வழங்கி விட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லாமலேயே முதுநிலை மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடவும், அந்த மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிடவும் அனுமதித்திட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த 11 மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை மனதில் கொண்டு, முதல்வர் பழனிசாமி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி, உரிய அழுத்தம் கொடுத்து, தமிழகத்திலும் நீட் தேர்வு இன்றி முதுநிலை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்கவும், அதில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இது தவிர, தமிழகத்திலுள்ள 584 "மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளுக்கான" இடங்களில் அரசு மருத்துவர்களுக்குப் போராடிப் பெற்ற 50 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கு இதுவரை கலந்தாய்வு நடத்தாமல் அ.தி.மு.க. அரசு காலம் கடத்துவது கவலை அளிக்கிறது. இந்த இடஒதுக்கீட்டிற்கான அரசாணை 7.11.2020 அன்றே வெளியிடப்பட்ட பிறகும் இன்னும் அ.தி.மு.க. அரசு யாருக்காகப் பயந்து கவுன்சிலிங்கை நடத்தாமல் இருக்கிறது? ஆகவே, இந்த அரசாணையை உடனடியாக செயல்படுத்தி அரசு மருத்துவர்களுக்கு "மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில்" 50 சதவீத உள் இடஒதுக்கீட்டைத் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் வழங்கிட முதல்வர் உடனடியாக கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement