ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Northeast-monsoon-intensifies-in-Tamil-Nadu-and-Pondicherry--Chennai-Meteorological-Center

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

image

குமரிக்கடல் முதல் வடதமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், புதுச்சேரி, நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும் என்றும் நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், ஈக்காட்டுதாங்கல், மீனம்பாக்கம், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான கேளம்பாக்கம், வண்டலூர், ஆவடி, மாங்காடு, பெருங்குளத்தூரில் மழை கொட்டி தீர்த்தது. முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. மரக்காணம், வானூர், திண்டிவனம், சலவாதி உள்ளிட்ட இடங்களில் பெய்தது. இதன் காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. சேந்தமங்கலம், கொல்லிமலை, இராசிபுரம், மோகனூர், எருமப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. கொட்டாம்பட்டி, ஒத்தக்கடை, அழகர்கோவில், கீழவளவு, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரியில் காலாப்பேட், கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement