[X] Close

கமலா ஹாரிஸ் 50 வயது வரை 'சிங்கிள்' - இந்தியச் சமூகம் கவனிக்கத்தக்க உளவியல் பார்வை!

Subscribe
Kamala-Harris-Was-Single-Until-She-Was-50-Years-Old

கமலா ஹாரிஸ்... இந்தப் பெயரைச் சொல்லாமல் கடந்த வாரம் கடந்திருக்காது. இவரது வெற்றியைக் குறிப்பிடும் செய்திகள் எல்லாம் 'முதல்' என்ற வார்த்தையை சொல்லாமல் இல்லை. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட முதல் கறுப்பின பெண், முதல் இந்திய - அமெரிக்க பெண், துணை அதிபராகும் முதல் புலம்பெயர் பெண்... இப்படி முதல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.


Advertisement

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை, அமெரிக்கர்களைவிட அதிகம் கொண்டாடியது இந்தியர்கர்கள்தான். அதிலும் குறிப்பாக தமிழர்கள் என்றே சொல்லலாம்.

இவ்வாறாக, பல 'முதல்' இடத்தில நாம் இன்று வைத்துக் கொண்டாடும் கமலா ஹாரிஸ்ன் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர் பிரபலமானவுடன் பேசப்பட்டது. அதில், மிகவும் சுவாரஸ்யமான விஷயம், கமலா ஹாரிஸ் 50 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் 'சிங்கிள்' ஆக இருந்தார் என்பதுதான்.


Advertisement

image

'அட, இதுல என்ன இருக்கு...? அமெரிக்காவுல இதெல்லாம் சாதாரணமப்பா!' என்று சொல்லி, இவ்வளவு நேரம் இந்தியர், தமிழர் பூர்விகம் என்றெல்லாம் சொந்தம் கொண்டாடிய கமலாவை, இந்த விஷயத்தில் மட்டும் அமெரிக்கப் பெண்ணாகத்தான் நம்மில் பலரும் பார்க்கறோம். ஏனென்றால், இந்தியாவில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது ஒரு சடங்கு அல்ல, அது ஒரு கட்டாய நிகழ்வாக அணுகப்படுகிறது.

பெண்களின் நிலையை எடுத்துக்கொண்டால், நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி... திருமணம்தான் உங்களின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்று இங்கு நம்பப்படுகிறது. அப்படி சட்டம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், இது சமூகத்தின் விருப்பம். இந்தியாவில் பெண்ணின் திருமணம் என்பது அவளுடைய சுயமதிப்பாகக் கருதப்படுகிறது, இல்லை, இல்லை... கருதவைக்கப்படுகிறது. திருமணத்திற்கும் சுயமதிப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அதெல்லாம் நம்ம 'டிசைன்'ல அப்படித்தான் இருக்கிறது.


Advertisement

அப்படி என்ன 'டிசைன்'?

பெண்கள் திருமணம் செய்துகொண்டு, ஒரு குடும்பத்தின் பாரம்பரியத்தை முன்னெடுக்க வேண்டும் என்றுதான் நம் சமூகம் எழுதப்படாத விதியை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஏனெனில், இது கலாசாரத்தின் ஒரு பகுதியாவும் பார்க்கப்படுகிறது. காலம் காலமாக நம் முன்னோர்கள் இந்தக் கொள்கையைத்தான் பின்பற்றி வருகின்றனர். இதனால், பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், அவற்றைப் பல வகையில் தவிர்க்கின்றனர்.

இதையும் மீறி சில பெண்கள், 'என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமே' என்று நினைத்து, தங்கள் இதயத்தைப் பின்தொடரத் துணிந்து, பின் தாமதமாக திருமணம் செய்துகொண்டால், இந்தச் சமூகத்தின் பெரும்பான்மை சிந்தனை இவர்களை குறைத்துப் பார்த்து, அவர்களது நம்பிக்கையை முடிந்த அளவு நொறுக்குகிறது.

image

பெண்களின் மேன்மையுடன் சமூகத்தின் ஆழமாக வேரூன்றிய பிரச்னைகள் பல நூற்றாண்டுகளாக உள்ளன. பலரும் பார்த்து வியக்கக்கூடிய துணிச்சலான பெண், திறமைவாய்ந்த பெண், எந்த வேலையையும் எளிதில் முடிக்கக்கூடிய பெண், வெற்றிகரமான தொழில்முனைவோர்... இப்படி எந்த வகையில் புகழாரம் சூட்டினாலும் நம் பொதுச் சமூகம் எழுப்பும் கேள்விகள் இவை:

'அதெல்லாம் இருக்கட்டும். கல்யாணம் ஆச்சா? குழந்தைகள் இருக்கா? இவளோ சாதிச்சு என்ன பிரயோஜனம்? யாருக்கு இவ்ளோ சேர்த்து வைக்கணும்? லேட்டா கல்யாணம் பண்ணா, குழந்தை பிறக்காது. அப்புறம், பெண்ணாகப் பிறந்தது என்ன பயன்?'

திருமணத்திற்கான 'டெட்லைன்'!

பொதுவாக, இந்தியாவில் பெண்கள் வெற்றிகரமாக இருந்தாலும், குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் வயதைக் கடக்கும் முன்பு, அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தங்கள் சுயமதிப்பு தங்களால் அல்லது தங்களின் வெற்றியால் அளவிடப்படுவதில்லை. அதை அளவிடுவது அவர்களின் திருமணமும், திருமண வயதும்தான்.

image

இந்தியாவில் திருமண வயது, உங்கள் ஓய்வூதியம் வாங்கும் காலத்துக்கு முன்பு நீங்கள், உங்கள் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்கும் வகையில் திட்டமிடப்படுகிறது. என்ன ஒரு பிளானிங்?!

ஆக, 30 வயதுதான் உங்கள் அதிகபட்ச டெட்லைன்.

எனவே, நீங்கள் தாமதமாக திருமணத்தைத் தேர்ந்தெடுத்து, காலக்கெடுவைத் தவறவிட்டால், உங்கள் குழந்தைகளை 30 வயதுக்கு முன்பு எப்படி திருமணம் செய்து கொடுப்பீர்கள்? 30 வயதானால் போதும், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, திருமண வயதுக்கு மேற்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் தாமதமாக திருமணம் நடந்தால், அதன் அணுகுமுறை மட்டும் வேறு வேறானது.

ஓர் ஆணைப் பற்றி கவலைப்படும்போது, பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்காக திருமணம் செய்துகொள்ளும்படி அவருக்கு அழுத்தம் கொடுப்பார்கள். தாமதமானாலும் பரவாயில்லை, 'அவர் ஸ்மார்ட்', 'பொருளாதார ரீதியில் உயர்ந்தவர்', 'அரசு வேலையில் இருப்பவர்' என்பன போன்ற 'தகுதி'களால் ஆண்களின் திருமணத்தை சமூகம் பார்க்கும் விதமே வேறாக இருக்கிறது.

அனால், இதேச் சூழலில் ஒரு பெண்ணின் பெற்றோர், சமூகத்தால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள். தாமதமாக திருமணம் செய்யும் பெண்களுக்காகவே இந்தச் சமூகம் பல வினோதமான கேள்விகளை சேகரித்து வைத்துள்ளது. 35 வயதைக் கடந்தால், பெரும்பாலும் மணமுறிவு ஏற்பட்டவரோ அல்லது வயதில் மூத்தவரோதான் பெண்களுக்கு சாய்ஸ் ஆக இருப்பதைக் கவனிக்கலாம். ஏனெனில், 35 வயதில் ஒரு பெண் தாய்மை அடைவது பெரும் கேள்விக்குறியே என்ற எண்ணமும், இந்த வயதுக்கு மேல் இவர்களை கல்யாணம் செய்துகொள்ள ஒருவர் முன்வருவதே பெரிய விஷயம் என்பது போலவும்தான் இந்தச் சமூகம் பெண்களின் தாமதமான திருமணத்தை நினைக்கிறது.

பெற்றோர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் மகள், மகன்களைப் பேணும் பொறுப்பிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். அதற்குத் திருமணம்தான் சரியானத் தீர்வு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பெண் தன் திருமணத்திற்கு மேலாக தன் வாழ்க்கையைத் தேர்வுச் செய்தால், அவள் எப்போதும் ஒரு கிளர்ச்சியாளராகவே முத்திரை குத்தப்படுவதற்கான வாய்ப்புகள்தான் இங்கே அதிகம்.

image

திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டிய ஒரு பயணம். அதை நாம் விரும்பும்போது தொடங்கலாம். இது பந்தயம் அல்ல; நிதானமாக செய்யக்கூடிய பயணம். ஏனென்றால், இதில் நாம் மட்டும் பயணிக்கப் போவதில்லை. நம் வாழ்வின் முக்கிய அங்கத்தினரையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பயணத்தை நீங்கள் யாருடன் செய்ய விரும்புகிறீர்கள் என்பது முதல், எப்போது தொடங்க விரும்புகிறீர்கள் என்பது வரை முடிவு செய்ய ஒரு பெண்ணிற்கு எல்லா உரிமையும் உண்டு. திருமணத்தைத் தாண்டி பல முக்கிய குறிக்கோள்கள் வாழக்கையில் இருப்பது தவறல்ல. பல சமூக ஊடகக் கதைகளும், பிரசாரங்களும் பெண்களின் தேர்வுகளை மற்றவர்களுக்கு சமமாக ஊக்குவிக்கும் நிலையில், இந்தச் சமூகம் சொல்லும் தர்க்கத்தை விட, உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடப்பது தவறில்லை.

இந்தியா நிச்சயமாக முன்னேறுகிறது, நாமும் அப்படித்தான். ஆனால், பெண்ணின் திருமண வயது விஷயத்தை மட்டும் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சம்பந்தப்பட்டவருக்கு மதிப்பளிப்பது அணுகப்படுவதில்லை. ஏனென்றால், 21 ஆம் நூற்றாண்டில் சுவாசிக்கும்போதிலும், ஓர் இந்தியப் பெண்மணி 30 வயதைத் தாண்டி திருமணம் செய்வதை ஏதோ ஒரு தப்பாகவேப் பார்க்கும் போக்கு இன்னமும் நீடிக்கிறது.

எல்லா துறைகளிலும் போராடி சாதித்த பெண்களை மட்டும் சும்மா விடுவார்களா?

'யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எனக்கு எப்போ தோணுதோ அப்போதான் கல்யாணம்' என்று ரொம்ப லேட்டாகவே திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள், சில பாலிவுட் கதாநாயகிகள்.

ஊர்மிளா மனோடன்கர், நீனா குப்தா, ப்ரீத்தி ஜிந்தா, லிசா ரே என பலரும் 40 வயதைக் கடந்த பிறகே திருமணம் செய்துக்கொண்டனர். ஐஸ்வர்யா ராய் 34 வயதிலும், ராணி முகர்ஜி 36 வயதிலும், ஃபரா கான் 39 வயதிலும் திருமணத்திற்கு 'ஓகே; சொன்னார்கள்.

'ஆனா, இவங்கலாம் பாலிவுட் கதாநாயகிகள். சாதாரணப் பொண்ணுங்க இப்படி இருக்காங்களா?' என்று சிலர் கேட்கலாம்.

நிச்சயம் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரபலமானவர்கள் இல்லை. அதனால் வெளியே தெரிவதில்லை. ஆனால், நினைவிருக்கட்டும், பெரும்பான்மைக் கருத்தை மீறி, மனம் சொல்வதை கேட்டு துணிச்சலாக முடிவெடுக்கும் எந்த பெண்ணும் சாதாரணப் பெண்கள் பட்டியலில் இருக்கமாட்டார்கள்.

image

எதுவாக இருந்தாலும், நாம் விரும்பும்போதுதான் திருமணம் செய்துகொள்வதற்கான சரியான நேரம் என்பதை பெண்கள் உணரவேண்டியது அவசியம். இதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டியது அதைவிட அவசியம். எந்த அழுத்தமும் இல்லாமல், எந்த ஆச்சரியமான விநோதமான கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை.

திருமணம் விஷயத்திலும் மனம் சொல்வதை கேட்டு நின்று, நிதானமாக தங்கள் ஆட்டத்தை ஆடும் பெண்கள் அனைவரும் நம்ம ஊரு கமலா ஹாரிஸ்தான்!

- முனைவர். தமிழ்செல்வி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close