[X] Close

"மூலிகைகள் ஏற்றுமதி உயர்வு!" - 2 ஆயுர்வேத மையங்களை அர்ப்பணித்த மோடி பெருமிதம்

Subscribe
PM-Modi-says-demand-on-Ayurvedic-products-globally-goes-high

இரண்டு ஆயுர்வேத மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, "கொரோனா காலத்தில் ஆயுர்வேத மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்துள்ளதுடன், விலையும் அதிகரித்துள்ளது. இதன் நேரடி பலன்களை இந்த மூலிகை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெறுவார்கள்" என்றார்.


Advertisement

ஆயுஷ் அமைச்சகம், கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தன்வந்தரி பிறந்த தினமான நவம்பர் 13ஆம் தேதியை ஆயுர்வேத தினமாகக் கடைபிடித்து வருகிறது. ஐந்தாம் ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நாட்டின் முன்னணி ஆயுர்வேத மையங்களான ஜாம் நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (ஐடிஆர்ஏ), ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத மையம் (என்ஐஏ) ஆகிய இரண்டையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறியுள்ளார். என்ஐஏ-வுக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வழங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ராஸ் அதனாம் கெப்ரெயஸஸ் காணொலிக் காட்சியில் தமது வாழ்த்துச் செய்தியை வழங்கினார். அப்போது அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை உலகெங்கும் கொண்டு செல்லவும், சுகாதாரத் துறையில் பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஆதாரப்பூர்வமாக ஊக்குவிப்பதில் உறுதியுடனும் செயல்படும் பிரதமருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்தார்.


Advertisement

பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையத்தை உருவாக்க இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததற்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் அதன் தலைவருக்கு பிரதமரும் நன்றி தெரிவித்தார். ஆயுர்வேதம் ஒரு இந்திய கலாச்சாரம் என்றும், இது போன்ற நாட்டின் பாரம்பரியம் பிற நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

image

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "நூல்கள், வேதங்கள் மற்றும் வீட்டு மருத்துவ முறைகளில் பின்பற்றப்படும் ஆயுர்வேதம் குறித்த விஷயங்களை வெளிக்கொணர்ந்து நவீன தேவைகளுக்கு ஏற்ப இந்த பாரம்பரிய முறையை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 21ஆம் நூற்றாண்டில் நவீன அறிவியலுடன் நமது பாரம்பரிய மருத்துவ அறிவையும் இணைத்து புதிய ஆராய்ச்சிகள் தற்போது நாட்டில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:

"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இங்கு தொடங்கப்பட்டது. ஆயுர்வேதம் ஒரு மாற்று சிகிச்சை மட்டுமல்ல, நாட்டின் சுகாதார கொள்கையில் ஓர் முக்கிய அஸ்திவாரம். சோவா-ரிக்பா குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் இதர ஆய்வுகளை மேற்கொள்வதற்காக லே பகுதியில் தேசிய சோவா-ரிக்பா நிறுவனத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இன்று இரு நிறுவனங்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

பாக். ராணுவ அத்துமீறல் முறியடிப்பு; 3 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி 

இந்த நிறுவனங்களுக்கு இனி கூடுதல் பொறுப்பு இருக்கிறது. சர்வதேச தரத்திலான ஆயுர்வேதம் குறித்த பாடத்திட்டங்களை இந்த நிறுவனங்கள் தயார் செய்யும் என்று நம்புகிறேன். ஆயுர்வேத இயற்பியல் மற்றும் ஆயுர்வேத வேதியியல் போன்ற பிரிவுகளில் புதிய திட்டங்களை கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்த வேண்டும். இந்தத் துறையில் சர்வதேச போக்கு மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு புது நிறுவனங்களும் (ஸ்டார்ட் அப்) தனியார் துறையும் பங்கேற்க வேண்டும்.

இந்திய மருத்துவ சிகிச்சை முறைக்கான தேசிய ஆணையம் மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் ஆகியவை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உருவாக்கப்பட்டதோடு, ஒருங்கிணைந்த செயல் முறையை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கையும் கொண்டுவரப்பட்டது. ஆயுர்வேத கல்வியில் அலோபதி சிகிச்சை முறை குறித்த அறிவும் கட்டாயம் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை நோக்கம்.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் உலக அளவில் ஆயுர்வேதப் பொருட்களின் தேவை அபரிமிதமாக உயர்ந்திருக்கிறது. ஆயுர்வேதப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 45 சதவீதம் உயர்ந்து இருந்தது. மஞ்சள், இஞ்சி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து இருப்பது இந்திய வாசனைப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத தீர்வுகள் மீது உலக அளவில் நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதைக் காட்டுகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் மஞ்சள் சேர்க்கப்பட்ட பானங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

உலகின் தலைசிறந்த மருத்துவ இதழ்கள் ஆயுர்வேதத்தில் புதிய நம்பிக்கையைக் கண்டுள்ளது. இந்த கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஆயுர்வேதப் பொருட்களின் பயன்பாட்டில் மட்டுமல்லாமல், நாட்டில் மற்றும் உலக அளவில் ஆய்வு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனை: ஸ்டாலின் கண்டனம் 

கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை இந்தியா சோதித்து வரும் அதேவேளையில், தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுர்வேத ஆராய்ச்சிகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பையும் அதிகரித்து வருகிறது. 80,000 டெல்லி காவல் வீரர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அகில இந்திய ஆயுர்வேத மையம் உட்பட 100 இடங்களில் தற்போது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய குழு ஆய்வாக இருக்கக்கூடிய இந்த ஆராய்ச்சி, பல்வேறு ஊக்கமளிக்கும் முடிவுகளை அளித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் சில சர்வதேச சோதனை முயற்சிகள் நடைபெற இருக்கிறது.

image

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சத்தான உணவுகள், ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மூலிகைகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம். கொரோனா காலத்தில் ஆயுர்வேத மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதுடன், விலையும் அதிகரித்துள்ளது. இதன் நேரடி பலன்களை இந்த மூலிகை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நமது விவசாயிகள் பெறுவார்கள்.

வேளாண் அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இதர துறைகள் இந்தியாவில் விளையக்கூடிய பல்வேறு மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆயுர்வேதம் தொடர்பான சுற்றுச்சூழலின் வளர்ச்சியின் மூலம் சுற்றுலா தொடர்பான சுகாதாரம் மற்றும் நாட்டின் நலன் ஊக்குவிக்கப்படும் என்று கூறியதுடன், இந்த முயற்சியில் ஜாம்நகர் மற்றும் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கப்பட்டுள்ள இரு நிறுவனங்கள் ஈடுபடும் என்று நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close