குற்றவாளி... ஆனாலும் 5 வது முறையாக எம்எல்ஏ.. பீகாரின் `ராபீன் ஹுட்'

குற்றவாளி... ஆனாலும் 5 வது முறையாக எம்எல்ஏ.. பீகாரின் `ராபீன் ஹுட்'
குற்றவாளி... ஆனாலும் 5 வது முறையாக எம்எல்ஏ.. பீகாரின் `ராபீன் ஹுட்'

பீகாரின் `ரா பீன் ஹுட்' என அழைக்கப்படும் நபர் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வரும் வேளையில், ஐந்தாம் முறையாக தேர்தலில் வெற்றிபெற்று அசத்தியுள்ளார். அவரை ஏன் `ராபீன் ஹுட்' என மக்கள் அழைக்கிறார்கள் என்பது தெரியுமா?

பீகார் தேர்தலில் சில விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில், ஒன்று பீகாரின் `ராபீன் ஹுட்' எனப்படும் அனந்தகுமார் சிங்கின் வெற்றி. முதலில் இவர் ராபீன் ஹுட் என ஏன் அழைக்கப்படுகிறார் என்பதை பார்ப்போம். பீகாரின் மொகாமா தொகுதி தான் இவரது சொந்த தொகுதி. கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் இவர் மீது உள்ளன. இருந்தாலும் ஏழைகள் மீது அதிக கரிசனம் கொண்டவர் அனந்தகுமார் சிங். அவர்களுக்கு தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மொகாமா தொகுதியில் இவரது சொந்த சமூகமான பூமியார் எனும் நிலச்சுவான்தாரர் சமூகம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 

அடுத்த நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள்தான். அவர்கள் வீட்டில் எந்த ஒரு விஷேசம் என்றாலும், ஆஜராகி அவர்களுக்கு தேவையான உதவி ஒன்றை செய்துவிடுவார் அனந்தகுமார் சிங். இப்போது ஜெயிலில் இருக்கும் இவர் வீட்டில் வாக்கு எண்ணிக்கை நாளன்று 10 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து பரிமாறப்பட்டது. மக்கள் எந்த அளவுக்கு அவருடன் நெருக்கமாக உள்ளனர் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம். இதனால் தான் `ராபீன் ஹுட்' என்று மக்கள் அழைக்கின்றனர்.

இதற்கிடையே, இந்த தேர்தலில் அவர் அடைந்துள்ள வெற்றியால், ஐந்தாவது முறையாக சட்டமன்றத்துக்கு செல்ல இருக்கிறார். ஆர்ஜேடி, ஜேடியூ என பீகாரின் முன்னணி கட்சிகளில் இவர் இணைந்து பணியாற்றிருக்கிறார். 2005 ல் ஜேடியுவில் இணைந்தபோது, நிதிஷ் குமாரின் எடைக்கு நிகராக வெள்ளிக் காசுகளையும், இனிப்பு லட்டுகளையும் பரிசாக அளித்து அமர்களப்படுத்தினார். அந்த முறை முதல்வராக பதவியேற்ற நிதிஷ், கிரிமினல்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்பியபோது அனந்த் சிங்கை ஒன்றும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ராப்ரி தேவி முதல்வராக இருந்தபோது, அனந்த் குமார் சிங் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அவரிடம் இருந்து ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன. அப்போது ஆர்ஜேடியின் எதிரியாக பார்க்கப்பட்ட அனந்த் குமார் சிங், இந்த முறை ஆர்ஜேடிவேட்பாளராக நின்று, ஐந்தாவது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி அசத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் அனந்த்குமார் சிங், சிறையில் இருந்தே இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளார். 

முன்னதாக, சிறையில் இருந்து அனுமதி பெற்றே வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தனது வேட்புமனு நிராகரிக்கப்படும் என பயந்து, தன் மனைவியை சுயேச்சையாகவும் களமிறங்கினார். ஆனால் அவரின் மனைவி தனக்கு வாக்கு சேகரித்ததை விட, ஆனந்தகுமார் சிங்கிற்கே வாக்கு சேகரித்து வெற்றியை வசப்படுத்தியுள்ளார். இந்த வெற்றியை தற்போது அவரது ஆதரவாளர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com