[X] Close >

உதயநிதியிடம் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் - கே.என் நேரு ’சிறப்பு’ பேட்டி

k-N-Nehru-Interview

 


Advertisement

தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாகட்டும்…. தேர்தல் மாநாடுகளாகட்டும் பெரும்பாலும் மத்திய பகுதியான திருச்சியிலிருந்தே துவங்குவதுதான் வரலாறு. ஒவ்வொரு திமுக மாநாட்டின்போதும், நாடே  திரும்பிப்பார்த்து திகைக்கும் அளவிற்கு பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தி  தொண்டர்களால் திணர வைக்கும் போக்குவரத்துத் துறை முன்னாள்  அமைச்சரும், தற்போதைய திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே.என் நேரு, தனது பிறந்தநாளையொட்டி  திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடமும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

அந்த வாழ்த்து புகைப்படத்துடன், பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்திய புகைப்படத்தையும் சேர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை,  ”இரண்டு கட்சிகளின் வெவ்வேறு தலைவர்கள். ஒருவர் தனது குருவின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து ஆசிர்வாதம் வாங்குகிறார். 69 வயதான மற்றொருவர், தனது கட்சியின் அடுத்த தலைமுறை தலைவரிடம் ஆசிர்வாதத்தைப் பெறுகிறார்” என்று விமர்சனம் செய்ததால்  திமுக ஆதரவாளர்களும் பாஜகவினரும் கருத்து யுத்தத்தில் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், கே.என் நேருவிடமே பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்...


Advertisement

நீங்கள் உட்பட, திமுகவின் மூத்த தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் பிறந்தநாளுக்கு வாழ்த்து பெறுவது விமர்சிக்கப்படுகிறதே?

எங்கள் கட்சித் தலைவருக்கு அடுத்தப்படியாக கட்சியின் எதிர்காலமாக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்தான் இருக்கிறார். அவரை சந்திப்பதிலோ, வாழ்த்து பெறுவதிலோ, உறுதுணையாக இருப்பதிலோ எந்தவிதமான தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. உதயநிதி நாளை திமுகவின் முகமாய் வரவிருப்பவர். மூத்தவராக இருந்தாலும் இளையவராக இருந்தாலும் சந்தித்து வாழ்த்துவதிலோ வாழ்த்து வாங்குவதிலோ என்ன தவறு இருக்கிறது? உதயநிதியிடம் வாழ்த்து வாங்குவதை மகிழ்ச்சியாகத்தான் செய்கிறோம். எங்கள் கட்சித் தலைவரையும் உதயநிதியையும் பாஜக விமர்சித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவதால், தேடிப்பிடித்து விமர்சிக்கிறது.

பாஜக  தலைவர் எல்.முருகன் வயது குறைவானவர்தான். ஆனால், மூத்த தலைவார்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுதானே கட்சிப் பணியாற்றுகிறார்கள். உதயநிதியிடம் வாழ்த்து பெறுவதில் வயதைப் பார்க்கவில்லை. கட்சியின் பொறுப்புக்காக கொடுக்கும் மரியாதை அது.  20 ஆண்டுகளுக்கும் மேலாக, தளபதி எப்படி இளைஞரணியை சிறப்பாக வளர்த்தெடுத்தாரோ, அவர் விட்ட இடத்திலிருந்து உதயநிதி மிகச்சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.


Advertisement

’கட்சித் தலைவரின் மகன். அதனால், நாம் எடுப்பதுதான் முடிவு’ என்றெல்லாம் அவர் இயங்கியதே கிடையாது. மாறாக, இளைஞரணியில் கட்சித் தோழர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களையும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் கேட்டு இளைஞரணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவரது எளிமையான அணுகுமுறையால் நிறைய இளைஞர்கள் திமுகவில் இணைந்துள்ளார்கள். அவர் செயல்பாட்டில், எங்களுக்கு பெரிய திருப்தி.

image

ஆனால், திமுகவிலிருந்து விலகிய வி.பி துரைசாமி, கு.க செல்வம் உள்ளிடோர் உதயநிதி இளைஞரணிச் செயலாளர் ஆனதிலிருந்து, கட்சியிலிருக்கும் மூத்த தலைவர்களுக்கு மரியாதையே கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தார்களே?

இப்படியெல்லாம் பேசினால்தானே அவர்கள், சேர்ந்திருக்கும் கட்சிகளில் இன்னும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்? அண்ணன் துரைமுருகன் என்னைவிட மூத்தவர். அவருக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கவில்லையா? அதேபோல, அவர் பொருளாளராக இருந்தபோது, தம்பி உதயநிதி இளைஞரணிச் செயலாளராக ஆனவுடன், நேரடியாகச் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதில், எங்களுக்கு பெருமையே. எந்தவிதமான மன வருத்தமும் இல்லை. குறைபாடும் இல்லை என்பதுதான் உண்மை.

image

 வயதில் குறைவாக இருந்தாலும், உதயநிதி அனைவரையும் மதித்தே நடப்பார். அதனாலேயே, மற்றவர்கள் கண்களில் அவர் அடிக்கடி பட்டுக்கொண்டிருக்கிறார். விமர்சிக்கப்படுகிறார். தலைவர் கலைஞர் தனது பிறந்தநாளில் பேராசிரியர் வீட்டுக்கேச் சென்று வாழ்த்து வாங்குவார். வாழ்த்து தெரிவிப்பார். அதுமட்டுமல்ல, கட்சியிலுள்ள இளையவர்கள் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், வீடுகளுக்கு நேராகவேச் சென்று விசாரித்துவிட்டு உதவிகளையும் செய்வார். அந்த நாகரீகத்தையும் நட்பையும் நாங்கள் பின்பற்றுவதில் இவர்களுக்கு எங்கு பிரச்சனை வந்தது?

சுறுசுறுப்பின் மறுபெயர் உதயநிதி. யாரையும் விட்டுக்கொடுக்காமல், புதிய இளைஞர்களைக் கட்சியில் கொண்டுவந்து இணைக்கிறார். அதுவே, கட்சிக்கு பெரிய பலம். எங்களைளுக்கெல்லாம் வயதாகிவிட்டதால்,  இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்கள்தான் கட்சிப்பணியாற்ற முடியும். திரும்பவும் திமுக நல்லமுறையில் வரவேண்டும் என்றால், உதயநிதி இளைஞர்களை இணைத்தால்தானே கட்சி உயிர்ப்புடன் இருக்கும்? அந்தப் பணியை உதயநிதி மிகச்சிறப்பாக செய்கிறார்.

image

அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பதால், திருச்சியில் உங்களை ஒதுக்குவதாக கூறப்படுகிறதே?

அதெல்லாம் பொய். எங்களுக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிடும் வேலை. நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் பணியாற்றுகிறோம். மகேஷ் தொடங்கும் எல்லா நிகழ்ச்சிகளையும் நான்தான் தொடங்கி வைக்கிறேன். திருச்சி மாவட்டத்தில் நடக்கும் செயற்குழு கூட்டம் என்றாலும்கூட  என்னை அழைத்துதான் பேசச்சொல்வார். அவரின், தாத்தா, அப்பாவின் நினைவு நாளுக்குக்கூட நான் வீட்டிற்குச் சென்று வந்தேன். அவரும் எனது பிறந்தநாளுக்கு நேரில் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர் சரியாக இருக்கிறார். நான் சரியாக இருக்கிறேன். இருவரும் தலைமைக்கு சரியாக இருக்கிறோம்.

- வினி சர்பனா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close