[X] Close >

பைடனுக்கு வெற்றிதான்; ஆனால், கமலா ஹாரிஸ் படைத்ததோ வரலாறு!

Kamala-Harris-Makes-History-as-First-Woman-and-Woman-of-Color-as-Vice-President

இந்தியாவில் நடைபெறும் ஒரு தேர்தலைப் போலவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது அமெரிக்க தேர்தல். அமெரிக்காவின் அப்டேட்டை அடுத்தடுத்து இணையத்தில் பதிவிட்டு வந்தனர் இந்தியர்கள். அதற்கு காரணம் இந்திய அரசியலோடு அமெரிக்கா இணைத்து பார்க்கப்பட்டது.


Advertisement

ட்ரம்ப்க்கு இந்தியாவில் ஆதரவு தெரிவித்தவர்கள், ஜோ பைடனுக்கு இந்தியாவில் ஆதரவு தெரிவித்தவர்கள் என்பதை கூர்ந்து கவனித்தால் இந்திய அரசியலும் அங்கு பிரதிபலிப்பதை உணர முடியும். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க தமிழகத்தில் கூடுதலாக அமெரிக்க தேர்தல் குறித்து பேச காரணமாக இருந்தவர் கமலா ஹாரிஸ்.

image


Advertisement

இந்தியாவுக்கு ட்ரம்ப் வந்துபோனது, பிரதமர் மோடி அமெரிக்காவில் கூட்டம் போட்டது என அனைத்துமே அமெரிக்க தேர்தலை மையப்படுத்தி நகரத்தப்பட்ட காய்கள்தான். அதுவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தைப் பிடிக்க ட்ரம்ப் விரும்பி செய்த அரசியல் நகர்வுகள். அதற்கு ஏற்ப எதிரணியில் களம் இறங்கியவர் தான் கமலா ஹாரிஸ்.

ஒரு தமிழர், ஒரு இந்தியர் என்ற பெரிய பிராண்டுடன் அறிமுகம் செய்யப்பட்டவர் கமலா. கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமலா கோபாலன், சென்னையில் பிறந்தவர் ஆவார். முனைவர் பட்டப்படிப்பிற்காக அமெரிக்காவுக்கு சென்றவர் அங்கேயே குடிபெயர்ந்தார். பராக் ஒபாமாவைப் போலவே, கமலா ஹாரிஸ் கருப்பின மக்களிடையே பிரபலமானவர். துணை அதிபர் வேட்பாளராக களம் இறங்குவதால் கருப்பின மக்களின் வாக்குகள் முழுமையாக ஜோ பிடன் – ஹாரிஸ் அணிக்கு கிடைக்கும் என்று நம்பப்பட்டது. அந்த கணிப்பு சரியாகவும் ஆனது.

image


Advertisement

இன்று ஜோ பைடன் அதிபராக வெற்றி பெற்று இருக்கிறார். அது ஒரு வழக்கமான அதிபர் போட்டி. வழக்கமான வெற்றி. ஆனால் கமலா ஹாரிஸின் வெற்றி ஒரு வரலாற்று வெற்றி. அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கறுப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் என பல புதிய சாதனைகளை பதிவு செய்திருக்கிறார் கமலா ஹாரிஸ்.

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் என் தாத்தா அவரது நண்பர்களுடன் நடைப்பயிற்சி செய்வார். அவர்கள் அரசியல் பற்றி, ஊழலை எதிர்த்து எவ்வாறு போராட வேண்டும், நீதி பற்றி உள்ளிட்ட பல விஷயங்களை பேசுவார்கள்; குரல் கொடுப்பார்கள்; வாதிடுவார்கள். அந்த உரையாடல்கள், என்னை சமூகப் பொறுப்புள்ளவராகவும், நேர்மையாகவும் இருப்பதைக் கற்றுக் கொள்வதில் என் மீது இவ்வளவு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின என ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார் கமலா.

image

அமெரிக்காவில் ஏற்பட்ட ஓர் அரசியல் சாதனைக்கு நம்மூர் பெசண்ட் நகர் கடற்கரை சம்பவமும் ஒரு பொறியாக இருந்திருக்கிறது என்பதில் உள்ளபடியே தமிழர்கள் மகிழ்கிறார்கள். மன்னார்குடி பக்கத்தில் கமலா ஹாரிஸுக்கு பேனர்கள் கட்டப்படுவதும் அந்த மனநிலை தான்.

நான்கு வருட ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்பு. பின்னர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு. அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது முதல் பணி. 2003ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல். பின்னர் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல்.

மேலும், கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பு சாதனை என அடுத்தடுத்து தன்னுடைய வளர்ச்சியில் சரியாக பயணித்தவர் கமலா. ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக கணிக்கப்பட்ட கமலா இன்று உலகையே தன்னுடைய பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.

image

கமலாவின் வெற்றி உழைப்பின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. கமலா வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்கே அவமானம் என்று ட்ரம்ப் ஒரு மேடையில் பேசினார். ஆனால் இன்று கமலாவின் வெற்றியை அமெரிக்காவும் இந்தியாவுமே கொண்டாடுகிறது.

"நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாக கூடாது. நான் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாம். ஆனால் கடைசி பெண் துணை அதிபர் இல்லை என்ற நம்பிக்கை வார்த்தைகளை தூவும் கமலா உலக அரசியலுக்கும், பெண்களுக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தான்.

image

இந்தியாவின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படும் கமலாவின் வருகையால் இந்திய-அமெரிக்க அரசியலில் ஏற்படும் தாக்கங்கள் என்ன? அமெரிக்க வாழ் இந்தியர்கள் காணப்போகும் மாற்றங்கள் என்ன? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close