[X] Close >

இந்தியா, பாகிஸ்தான்... ஜோ பைடன் இதுவரை யாருக்கு நெருக்கம்? - ஒரு பார்வை

Joe-Biden-is-close-to-India-or-Pakistan-here-it-is-an-impact-view

உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வெற்றியின் விளிம்பில் இருக்கும் ஜோ பைடன், வெற்றி கொண்டாட்டங்களை ஒத்திவைத்துவிட்டு, அதிபர் பணிகளை இப்போதே கவனிக்கத் தொடங்கிவிட்டதாக தகவல் வருகிறது. அவர் வெற்றிபெற வேண்டும் எதிர்பார்த்து கொண்டிருந்த நாடுகள் அவரின் வெற்றியை கொண்டாடத் தொடங்கிவிட்டன. அந்த நாடுகளில் ஒன்று பாகிஸ்தான்.


Advertisement

மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் பைடனின் வெற்றியை உன்னிப்பாக கவனித்து வந்தது. ஏன், அதற்காக பிரார்த்தனையை செய்து வந்தது. பைடனின் வெற்றிக்கும், பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..? இருக்கிறது. அதைப் பார்ப்போம்.

image


Advertisement

டிரம்பால் பாகிஸ்தானின் சோதனைக் காலம்

டிரம்ப் அதிபராக இருந்த 4 ஆண்டுகளுமே பாகிஸ்தானுக்கு சோதனைக் காலம் எனலாம். பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்தை ஆதரித்து உலகை அச்சுறுத்தி வந்த தீவிரவாதிகளை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தது என்பது சர்வதேச அரசியல் குற்றச்சாட்டு. இதில் அமெரிக்காவால் சர்வதேசத் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களும் அடக்கம். விளைவு, பாகிஸ்தானுக்கு கொடுத்த வந்த நிதியை நிறுத்தி அதிரடி காட்டினார் டிரம்ப்.

அதுமட்டுமில்லை, டிரம்ப் தனது எதிரியாக பார்த்து வந்த சீனாவுடன் நெருக்கம் காட்டியது பாகிஸ்தான். இதெல்லாம் எரிச்சலூட்ட, கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் பாகிஸ்தானுக்கு எதிரான அஸ்திரங்களை வீசத் தொடங்கினார்.பொதுவெளியில், பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார் டிரம்ப். போதாக்குறைக்கு முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் தொடர்பாக டிரம்ப் பல சட்டங்களை இயற்றினார். அதேநேரம் இந்தியாவுடன், குறிப்பாக மோடியுடன் நெருக்கம் காட்டினார்.


Advertisement

இந்தச் செயல்கள் பாகிஸ்தான் - அமெரிக்கா உறவை பாதித்தது. டிரம்ப் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் நிறைய சிக்கல்கள், தலைகுனிவுகளை சந்தித்தது பாகிஸ்தான். இதனால்தான் டிரம்ப் வெற்றி பெறுவதை பாகிஸ்தான் ரசிக்கவில்லை. டிரம்ப்பால் அனுபவித்த சிக்கல்களில் இருந்து தங்களை காப்பாற்ற வரும் மீட்பராகவே ஜோ பைடனை பாகிஸ்தான் பார்க்கத் தொடங்கியுள்ளது. ஜோ பைடன் வெற்றிக்காக பாகிஸ்தான் நடத்திய பிரார்த்தனைக்கு இது மட்டும் காரணமில்லை.

image

ஜிகிரி ஜோஸ்து பைடன்!

பாகிஸ்தான் ஜிகிரி ஜோஸ்து எனும் அளவுக்கு பைடன் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டிய காலம் இருக்கிறது. ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் அதிபராக இருந்த காலத்தில், அந்த நாட்டுடன் மிகுந்த நெருக்கம் காட்டினார் பைடன். பாகிஸ்தானுக்கு, ராணுவ உதவியைத் தவிர 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்க வேண்டும் என்று அப்போதே அமெரிக்க செனட் சபையில் குரல் கொடுத்தவர் இந்த பைடன்.

இதற்கு நன்றி கடனாக, பாகிஸ்தான் தன் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கெளரவ விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்'-ஐ பைடனுக்கு வழங்கி அழகு பார்த்தது. மேலும், பைடன் தனி காஷ்மீருக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். முந்தைய காலத்தில், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் அவல நிலையை வங்காள தேச ரோஹிங்கியாக்கள் மற்றும் சீனாவில் உள்ள யுகர் முஸ்லிம்களுடன் ஒப்பிட்டு பேசிய வரலாறும் உண்டு.

கடந்த ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை இந்தியா ரத்து செய்ததுக்கு, `காஷ்மீரிகளின் உரிமைகளை மீட்டெடுக்குமாறு' இந்தியாவை பைடன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் பைடன் அதிபர் ஆவதை பாகிஸ்தான் விரும்புகிறது. அவர் அதிபரானால், தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய இரு தரப்பு உறவின் சகாப்தத்தை மீட்டெடுப்பார் என்று நம்புகிறார்கள். அரசியல் ஆய்வாளர்களும் இதே நிலைப்பாட்டைக் கூறுகிறார்கள்.

image


பைடனும் இந்தியாவும்...!

பைடனால் பாகிஸ்தானுக்கு கொண்டாட்டம் என்றால், இந்தியாவுக்கு வெளியுறவு ரீதியில் சற்று கவலை அளிக்கக்கூடிய விஷயங்களும் உள்ளன என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர். அதற்கு உதாரணம், மேலே சொன்ன காஷ்மீர் விவகாரத்தையே எடுத்துக்கொள்ளலாம். மேலும், பிரதமர் மோடி கடந்த அரசின்போது தன்னை டிரம்ப்பின் ஆதரவாளராக காட்டிக்கொண்டு, அவருக்கு வாக்கு சேகரித்த நிகழ்வுகளும் உள்ளன.

வெளியுறவுக் கொள்கைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் பைடன். ஒபாமா அரசில் துணை அதிபராக இருந்ததால் இந்த விவகாரங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். இவரின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவில் சில கவலையைத் தூண்டக்கூடும் என்பது உறுதி என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்தியா - சீனா உறவு பல தசாப்தங்களாக இருந்ததை விட தற்போது பதற்றமாக இருக்கிறது. இந்தத் தருணத்தில், சீனாவுடன் மிதமான அளவிலான ஒத்துழைப்பைத் தொடர வற்புறுத்தும் பைடனின் விருப்பம், இந்திய அரசுக்கு சற்றே சங்கடத்தை தரக்கூடும். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கருதலாம். ஆனால், இந்தியாவின் மக்கள் சக்தி, பைடன் அமைச்சரவையில் இருக்கும் கமலா ஹாரிஸ் போன்ற இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் போன்றவை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடை பைடன் எடுப்பதற்கு யோசிக்கவைப்பது நிச்சயம்.

image

உலக அரங்கில் வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்பது இந்தியாவுக்கு சாதமாகமானது. மேலும், பயங்கரவாத எதிர்ப்பு, சீனாவை சமநிலைப்படுத்துதல் போன்ற வெளியுறவு கொள்கைகள் இரு நாடுகள் இடையே ஒத்துப்போகும் என்பதால் பைடனின் உலகளாவிய கூட்டணி உருவாக்கும் முயற்சிகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம்.

 கட்டுரையாளர்: மலையரசு

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close