பில்லி, சூனியம் எடுப்பதாக 2 இலட்சம் மோசடி - ஸ்கெட்ச் போட்டு கொள்ளை அடிக்கும் கும்பல்

fake-preacher-who-swindled-Rs-2-lakh-for-taking-sorcery

சென்னையில் பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி ₹2 லட்சம் மோசடி செய்த கும்பல் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது.மோசடியில் ஈடுபட்ட சாமியாரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement

image

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன்(45). மினிவேன் ஓட்டுநரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரில் சாலையில் சென்று கொண்டிருந்த சாமியார் ஒருவரை பார்த்து அவரிடம் தமது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்ய வேண்டுமென  கூறியுள்ளார்.

உடனடியாக அந்த சாமியார் உனக்கு பில்லி, சூனியம் சிலர் வைத்துள்ளதாகவும், அதனை எடுக்க சென்னை வருமாறும், வரும் போது ₹2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகள் எடுத்து வருமாறும் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, ராஜகுமாரன் தான் சொந்தமாக வைத்து ஓட்டி வந்த மினிவேனை ₹5 லட்சத்திற்கு விற்று விட்டு தனது உறவினருடன் சென்னை வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரயில் நிலையத்தின் வாயிலில் நின்று இருந்த சாமியாரை ஏற்றிக்கொண்டு வண்ணாரப்பேட்டை ஸ்டேன்லி மருத்துவ மனை அருகே சென்றுள்ளார். அங்கு சாமியாரிடம் ₹2 லட்சம் பணத்தையும், 2 கோழிகளையும் கொடுத்துள்ளார்.


Advertisement

உடனடியாக அதை பெற்று கொண்ட சாமியார் பூஜை பொருட்கள் வாங்கி வருவதாக கூறி சென்றவர் திரும்பி வரவேயில்லை. அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜகுமாரன், சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்று ஸ்டேன்லி மருத்துவ மனையின் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர், ஏமாற்றப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணை வைத்து தேடினர். விசாரணையில் போலி சாமியாராக ஏமாற்றியது திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் உல்லாச நகரை சேர்ந்த யுவராஜ்(42) என்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவல் துறையினர் வீட்டில் இருந்த யுவராஜின் உதவியாளர்கள் அமர்நாத் (21), சுரேஷ் (34), மனைவி ஜெயந்தி , பாப்பா(56) ஆகிய 4 பேரையும் கைது காவல் நிலையம் அழைத்து விசாரித்ததில் ஒரு குழுவாக செயல்பட்டு பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான யுவராஜ் வேளச்சேரி பகுதியில் ஒருவரை ஏமாற்ற சென்றவர் திரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த வண்ணாரபேட்டை காவல் துறையினர் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான யுவராஜை தேடி வருகின்றனர்.


Advertisement

மேலும் பிடிபட்ட நபர்களிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. இவர்கள் ஒரு குழுவாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்ததும், பிரச்சனையில் இருக்கும் யாரோ ஒருவரை தேர்வு செய்து அங்கேயே தங்கியிருந்து அவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, பின்னர் முக்கிய குற்றவாளியான யுவராஜ் சாமியார் வேடத்தில் அங்கு சென்று உங்கள் வீட்டில் பிரச்சினை உள்ளது, உடல் நல குறைவு உள்ளது எனக்கூறி அவர்களது நம்பிக்கையை பெற்று பில்லி, சூனியம் இருப்பதாக கூறி, அதனை எடுக்க ₹2 லட்சம் பணம் மற்றும் 2 கோழிகள் தயார் செய்யுமாறு கூறிவிட்டு அவ்வாறு பணமும், கோழியும் தயார் செய்தபிறகு பணத்தை பெற்று கொண்டு தலைமறைவாகி விடுவதும் தெரியவந்தது.

தலைமறைவான யுவராஜை பிடித்த பிறகே அவர் இதுபோல மோசடி செய்து எவ்வளவு பேரை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement